தொண்டாமுத்தூர்,ஏப்.3: முருகப்பெருமானின் ஏழாவது படை வீடாக கருதப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 30ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. 72 குண்டங்களுடன் முதல் இரண்டு மூன்று,கால பூஜைகள் நடந்தது.பக்தர்கள் யாகசாலையில் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (3ம் தேதி) காலை 9 மணிக்கு நான்காம் கால பூஜை,மாலை 4:30 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி ,பேரொளி வழிபாடு நடக்கிறது.
நாளை (4ம் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு ஆறாம் கால வேள்வி பூஜை,காலை 6.30 மணி முதல் 645 மணிக்குள் திருசுற்று தெய்வங்களுக்கு பரிகார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம்,காலை 7:30 மணிக்கு யாகசாலை இருந்து மூலவருக்கு திருக்குடங்கள் ஏந்தி வலம் வருதல் நிகழ்ச்சி,காலை 8:30 மணிக்கு மருதாசலம் மூர்த்தி கோபுர விமானம்,ஆதி மூலவர் கோபுர விமானம்,ராஜகோபுரம் கொடிமரம்,பரிவார கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம் காலை 9 மணிக்கு ஆதி மூலவர் விநாயகர் மருதாசல மூர்த்தி,பட்டீஸ்வரர் மரகதாம்பிகை,வீரபாகு,கரி வரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.தொடர்ந்து மூலவருக்கு பேரொளி வழிபாடு நடைபெறுகிறது.
பின்னர் மாலை 4:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு சுப்ரமணிய சுவாமியுடன் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.தொடர்ந்து சுவாமி வள்ளி தெய்வானை உடன் உலா வருகிறார்.விழாவிற்கு ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார்,அறங்காவலர்கள் மகேஷ் குமார்,பிரேம் குமார், சுகன்யா ராஜரத்தினம், கனகராஜன் மற்றும் உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் பெரிய எல்ஈடி திரைகள் மற்றும் கும்பாபிஷேகம் முடிந்தவுடன் ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட உள்ளது.முக்கிய பிரமுகர்கள் கோவில் பஸ்ஸில் மலை மேல் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
The post மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.