சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனி தீர்மானம் ஒன்று கொண்டு வந்து முன்மொழிந்து பேசியதாவது: தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது. அங்கு எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது.
ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்தால் ஒரு மீனவர்கூட கைது செய்யப்பட மாட்டார் என்று 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடி சொன்னார். ஆனாலும், இந்த தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இலங்கையில் சில மாதங்களுக்கு முன்னால் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. ஏற்கனவே இருந்தவர்கள் தோல்வியடைந்து, புதியவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். ஆனாலும், தமிழ்நாட்டு மீனவர்கள் நிலைமை மாறவில்லை. மீனவர்கள் மீதான தாக்குதல் ஓயவில்லை. பாரம்பரிய மீன்பிடி உரிமை கொண்ட நம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது தொடர்ந்து சிறை பிடிக்கப்படுகிறார்கள்; படகுகள் இலங்கை அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த மார்ச் 27ம் தேதி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், 97 இந்திய மீனவர்கள் இலங்கை சிறையில் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரத்தை கொடுத்திருக்கிறார். அதில், 11 பேரை கடந்த 27ம்தேதி இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த 2024ம் ஆண்டு மட்டும் 530 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர் சொன்ன கணக்குப்படி பார்த்தால், ஒரு நாளைக்கு இரண்டு மீனவர்களை கைது செய்துள்ளார்கள். எல்லைதாண்டி வந்தார்கள் என்று சொல்லி அவர்களுக்கு அதிகபட்ச சிறை தண்டனை விதிக்கப்படுகிறது அல்லது அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுகிறது.
அண்டை நாடாக இருந்து கொண்டு இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான இரக்கமும் இல்லாமல், நம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் விதமாக, ஏன் அடியோடு பறிக்கும்விதமாக இலங்கை கடற்படையினரும், இலங்கை அரசும் நடந்து கொள்வது நமக்கெல்லாம் மிகுந்த கவலையளிக்கிறது; கண்டிக்கத்தக்கது. இதனை ஒன்றிய பாஜ அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது சவாலாக இருக்கிறது என்று ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லி இருக்கிறார். இதில் என்ன சவால் இருக்க முடியும் என்று தெரியவில்லை. வேறொரு மாநில மீனவர்கள் இப்படி தொடர் தாக்குதலுக்கு உள்ளானால், இப்படித்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்களா? தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டு வருகிறேன். இதுவரைக்கும் மீனவர்கள் கைது, தாக்குதல் குறித்து 74 கடிதங்களை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் எழுதியிருக்கிறேன். பிரதமரை நேரில் சந்திக்கும் போதெல்லாம் இதுகுறித்து வலியுறுத்தியிருக்கிறேன். இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்பட இயலாமல் கடந்து கொண்டிருக்கிறது.
கடிதம் எழுதினால் விடுவிப்பது, பிறகு கைது செய்வதென்று இலங்கை அரசின் நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருப்பதால், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு, பாரம்பரிய மீன்பிடி உரிமை கேள்விக்குறியாகி, கடலுக்கு சென்றால் பத்திரமாக வீடு திரும்புவார்களா நம் சொந்தங்கள் என்று குடும்பத்தினர் மீளாக் கவலையில் மூழ்கியிருக்க வேண்டிய துயர நிலை ஏற்பட்டிருக்கிறது. எவ்வளவு காலத்துக்கு இதனை சகித்துக் கொண்டு இருக்க முடியும்? இதுபோன்ற சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவு மீட்பே மிகச் சரியான வழி என்பதை இம்மாமன்றத்தின் வாயிலாக மீண்டும் வலியுறுத்திட விரும்புகிறேன்.
கச்சத்தீவு விவகாரத்தை பொறுத்தவரைக்கும், கச்சத்தீவை மாநில அரசுதான் இலங்கைக்கு அளித்தது போன்று ஒரு தவறான தகவலை பரப்பி அரசியல் செய்வது அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகி விட்டது. ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக கட்சிகள் செய்யும் அதே தவறை ஒன்றிய அரசு செய்வது வருந்தத்தக்கது. ஏற்கமுடியாதது. கச்சத்தீவை பொறுத்தவரைக்கும், அந்த தீவை கொடுத்து, ஒப்பந்தம் போட்டபோதே முதலமைச்சராக இருந்த கலைஞர் கடுமையாக எதிர்த்தார். தமிழ்நாட்டு மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்படக் கூடாது என்று அழுத்தந்திருத்தமாக வாதிட்டு இருக்கிறார். அன்றைக்கிருந்த திமுக எம்பிக்கள் இரா.செழியன், எஸ்.எஸ்.மாரிச்சாமி ஆகியோர் நாடாளுமன்றத்திலே கடுமையாக எதிர்த்து இருக்கிறார்கள். அதையும் மீறி கச்சத்தீவு ஒப்பந்தம் 28.6.1974 அன்று கையெழுத்து ஆனவுடன், மறுநாளே அதாவது, 29.6.1974 அன்றே அனைத்துக்கட்சி கூட்டத்தை தலைமைச செயலகத்தில் கூட்டி இதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி, அன்றையதினமே பிரதமருக்கும் கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில், “I am constrained to express our deep disappointment over the recent Indo-Sri Lanka Agreement” என்று குறிப்பிட்டு- தமிழ்நாடு அரசின், தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை பிரதமருக்கு தெரிவித்துள்ளார். அப்போதே 21.8.1974 அன்று ‘இந்தியாவுக்கு சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இந்த பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை திருத்தியமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது’ என அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியவர் முதல்வராக இருந்த கலைஞர்தான்.
கச்சத்தீவை மீட்கவும், கச்சத்தீவில் இருக்கிற இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திராவிட முன்னேற்றக் கழக அரசு எடுத்து வந்திருக்கிறது. திமுக அரசு ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் கடிதங்கள் எழுதி தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்க வலியுறுத்தி வந்திருக்கிறது.
ஏற்கனவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 3.10.1991 மற்றும் 3.5.2013 ஆகிய தேதிகளிலும், அதேபோன்று, இங்கே அமர்ந்திருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வராக இருந்தபோது 5.12.2014 அன்றும் கச்சத்தீவை திரும்பப் பெற இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசு வலியுறுத்தப்பட்டுள்ளது. நான் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, இந்திய பிரதமர் முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு வந்தபொழுது கச்சத்தீவை திரும்பப் பெற அவரிடம் வலியுறுத்தி குறிப்பிட்டு காட்டியிருக்கிறேன்.
பிறகு 19.7.2023 அன்று இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ‘வரலாற்று ரீதியாக கச்சத்தீவு இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்திருக்கிறது. தமிழ்நாடு மீனவர்கள் பாரம்பரியமாக கச்சத்தீவை சுற்றி மீன்பிடித்துள்ளார்கள். மாநில அரசின் ஒப்புதலின்றி கச்சத்தீவு இலங்கைக்கு மாற்றப்பட்டதால், தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது’ என்பதை மேற்கோள்காட்டி ‘கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும். அதுவே தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும்’ என்று வலியுறுத்தி, ‘அதுவரை தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டுக் கொடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டேன்.
ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் எனது 2.7.2024 தேதியிட்ட கடிதம் மூலம் கச்சத்தீவு பிரச்னையையும், தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையையும் வலியுறுத்தியிருக்கிறேன். ஆனால், இன்றுவரை மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய பாஜ அரசு கச்சத்தீவை மீட்பது குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை வேதனையுடன் இங்கே குறிப்பிடுகிறேன்.
ஆகவே, இந்த சூழலில், தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினரால் கடும் தாக்குதலுக்கு உள்ளாவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது, கடும் அபராதம் விதிக்கப்படுவது போன்றவற்றில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாக்கவும், விரைவில் இலங்கை செல்லும் பிரதமர், தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும், கச்சத்தீவை மீட்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் விரும்புகிறது.
இதனை அடிப்படையாகக் கொண்ட தீர்மானத்தை இப்போது முன்மொழிகிறேன்:
“தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கிடவும், கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும். இதனை கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும், அரசுமுறை பயணமாக இலங்கை செல்லும் இந்திய பிரதமர் அந்நாட்டு அரசுடன் பேசி, இலங்கை சிறையில் வாடும் நம் நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்று இப்பேரவை வலியுறுத்துகிறது” என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். தமிழ்நாட்டை சார்ந்த இந்திய மீனவர்களின் நலன் கருதி, அனைத்துக்கட்சிகளும் இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி (அதிமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), வானதி சீனிவாசன் (பாஜ), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), நாகைமாலி (மார்க்சிய கம்யூ.), ராமச்சந்திரன் (இந்திய கம்யூ.), சதன்திருமலைகுமார் (மதிமுக), அப்துல்சமது (மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக), ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகிய அனைத்துக்கட்சி தலைவர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள். தீர்மானத்தை ஆதரித்து பேசிய அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு நடத்தி, தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
கடல் நீர் இன்று ஏன் சிவப்பாக இருக்கிறது?
தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்கள்தான் என்பதை ஒன்றிய அரசு அடிக்கடி மறந்துவிடுகிற காரணத்தால், நாம் மீண்டும் மீண்டும் அவர்களை தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்கள் என்று அழுத்தமாக சொல்ல வேண்டியதாக இருக்கிறது. கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது? கடல் கடந்து போன தமிழனின் கண்ணீரால் என்று அண்ணா சொன்னார். கடல் நீர் இன்று ஏன் சிவப்பாக இருக்கிறது? தமிழ்நாட்டு மீனவர் சிந்திய ரத்தத்தால் என்று சொல்ல வேண்டிய கவலையான நிலைமையில்தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.
The post தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை ஒன்றிய அரசு மீட்க வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் appeared first on Dinakaran.