அரியலூர், ஏப். 3: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், கோட்டைக்காடு மற்றும் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலப் பணிகள் மற்றும் அணுகு சாலை பணிகள் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், கோட்டைக்காடு மற்றும் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலப் பணிகள் மற்றும் அணுகு சாலை பணிகள் முன்னேற்றம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.
மேலும், விடுபட்டுள்ள அணுகு சாலை மண் அமைக்கும் பணிகள், அனைவுச் சுவர் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் அனைத்தையும் வரும் 31.05.2025-க்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமெனவும், இப்பணியானது கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு தொடர்புடையது என்பதால் நெடுஞ்சாலைத் துறையினர் பணிகள் மேற்கொள்ளும்போது இவ்விரண்டு மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம், பணிகளை தாமதமின்றி விரைவாக குறிப்பிட்ட தேதிக்குள் முடித்திடவும் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கூறுகையில், மேம்பாலப் பணிகள் மற்றும் அணுகு சாலைப் பணிகள் அனைத்தும் மே மாத இறுதிக்குள் முடித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூட்டத்தில் தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (திட்டங்கள்) பூங்கொடி, உதவி கோட்டப்பொறியாளர் சத்தியன், செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post வெள்ளாற்றின் குறுக்கே மேம்பால பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் appeared first on Dinakaran.