சூனாம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி

*கூடுதல் மருத்துவர்களை நியமிக்கவும் கோரிக்கை

செய்யூர் : சூனாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே, கூடுதல் மருத்துவர்களை நியமித்து இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு, தினமும் சூனாம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு இரண்டு மருத்துவர்கள் இரண்டு மெடிக்கல் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனை வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் இங்கு உள்நோயாளிகளாக இருப்பவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு செவிலியர்களே சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கு இரவு நேரத்தில் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்களே பிரசவம் பார்த்தால், குழந்தையின் தலை துண்டாகி குழந்தை பலியானது குறிப்பிடத்தக்கது.

மேலும், இரவு நேரங்களில் அவசர கால சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இல்லை என்று கூறி நோயாளிகளுக்கு முதலுதவி மட்டுமே அளித்து அவர்களை நீண்ட தொலைவில் உள்ள மதுராந்தகம், செங்கல்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால், பல உயிரிழப்புகளும் இங்கு தொடர்ந்து வருகிறது.

இதனால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்களை நியமித்து, 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்கும் வகையில் சுகாதார துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, மேலும் உயிரிழப்புகள் நேரிடாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் இதில் தனி கவனம் செலுத்தி இந்த சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சூனாம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: