இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள 103 மருந்துகள் தரமற்றவை: மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னை: இந்தியாவில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 103 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து, மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது. அதேபோல, போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனை இயக்கங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துகள் தரம் ரீதியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 103 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. சளி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 103 மருந்துகள் என தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீர், தெலங்கானா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்து இந்த பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் விவரங்களை ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதள பக்கத்தில் (https://cdsco.gov.in/opencms/opencms/en/Notifications/Alerts/) வெளியிட்டுள்ளது. மக்கள் இந்த விவரங்களை அந்த தளத்தில் அறிந்துகொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மருந்து கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் தடையை மீறி சந்தையில் இந்த மருந்துகள் விற்பனை செய்யப்படும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட மாநில சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

The post இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள 103 மருந்துகள் தரமற்றவை: மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: