பூட்டப்பட்ட வீட்டில் அழுகிய நிலையில் உடல் மீட்பு; விருகம்பாக்கத்தில் வக்கீல் படுகொலை

* போலி பத்திரிகையாளர் உட்பட 2 பேரை பிடித்து விசாரணை
* தலைமறைவாக உள்ள கார் டிரைவரை தேடி சிவகங்கைக்கு விரைந்தது தனிப்படை

சென்னை: விருகம்பாக்கத்தில் நடிகர் கருணாஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில நிர்வாகி ஒருவரை வெட்டி கொலை செய்த வழக்கில் போலி பத்திரிக்கையாளர் உட்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள கார் டிரைவரை தேடி தனிப்படையினர் சிவகங்கைக்கு விரைந்துள்ளனர். சென்னை விருகம்பாக்கம் கணபதிராஜா பிரதான சாலையில் உள்ள பவுல்ராஜ் குடியிருப்பை சேர்ந்தவர் வெங்கடேசன்(38). வழக்கறிஞரான இவர், தனது நண்பர் சேதுபதி என்பவருடன் இணைந்து கடந்த 4 மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2 தினங்களாக வெங்கடேசன் வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் சந்தேகமடைந்து சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்படி விரைந்து வந்த போலீசார் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீடு முன்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. பிறகு வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்த போது, கதவு பூட்டப்படாமல் இருந்தது. உடனே போலீசார் உள்ளே சென்று பார்த்த போது, வழக்கறிஞர் வெங்கடேசன் படுக்கை அறையில் தலை மற்றும் முகத்தில் பலமான வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது முகத்தில் வெட்டப்பட்ட கத்தி முகத்திலேயே இருந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால், இறந்த வழக்கறிஞர் உடலை மீட்டு போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். பின்னர் கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதேநேரம் கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்து அவரது மனைவி சரளா கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

மேலும், கொலை தொடர்பாக சரளா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வழக்கறிஞர் வெங்கடேசனுடன் தங்கி இருந்த திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த கார் டிரைவர் கார்த்திக்(32) தலைமறைவாக இருந்தார். இவர் தான் வெங்கடேசனுடன் எப்போதும் உடன் இருப்பார். கார் டிரைவர் கார்த்திக் மீது 27 வழக்குகள் இருப்பதும், இவர் திருநெல்வேலி மாவட்ட ‘பி’ கேட்டகிரியை சேர்ந்த கூலிப்படையைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அதேநேரம் வழக்கறிஞர் கடைசியாக அவரது நண்பர்களான கிழக்கு தாம்பரம் ஏரிக்கரை தெருவை சேர்ந்த பிரபு(37) என்ற போலி பத்திரிகையாளர் மற்றும் மேடவாக்கம் வேங்கைவாசல் அன்னை அவந்திகா பகுதியை சேர்ந்த மெடிக்கல் ரெப்பாக பணியாற்றி வரும் சுந்தர்(37) என்பவருடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது.

உடனே போலீசார் போலி பத்திரிகையாளர் பிரபு மற்றும் சுந்தரை பிடித்து விசாரணை நடத்திய போது, கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் வெங்கடேசனுக்கும் கார் டிரைவர் கார்த்திக்கிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. வழக்கறிஞர் வெங்கடேசன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்த, தலைமறைவாக உள்ள கார் டிரைவரான ரவுடிகார்த்திக் தொடர்பாக விசாரணை நடத்திய போது, 2 நாட்களுக்கு முன்பு வழக்கறிஞரை கொலை செய்துவிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ரவுடி கார்த்திக்கை கைது செய்ய சிவகங்கை மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர்.

மேலும், போலீசாரின் விசாரணையில் உள்ள பிரபு மற்றும் சுந்தர் ஆகியோர் தினமும் வழக்கறிஞருடன் மது அருந்துவதும், பல்வேறு கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. பெரிய அளவிலான நில பிரச்னை தொடர்பாக இந்த கொலை நடந்து இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருந்தாலும் கார் டிரைவரான ரவுடி கார்த்திக்கை கைது செய்தால் தான் வழக்கறிஞர் முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ரவுடி கார்த்திக், ஊரில் பல்வேறு குற்றச்செயல்களை செய்து விட்டு பாதுகாப்புக்காக சென்னை வந்து தங்கியிருப்பதும், வக்கீல் வெங்கடேசனிடம் டிரைவராக சேர்ந்தால் போலீசார் பிடிக்க மாட்டார்கள் என்பதற்காக டிரைவர் பணியில் சேர்ந்ததும் தெரியவந்தது. வழக்கறிஞர் வெங்கடேசன், நடிகர் கருணாஸ் நடத்தும் முக்குலத்தோர் புலிப்படையின் வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளராக இருப்பதும் தெரியவந்தது.

The post பூட்டப்பட்ட வீட்டில் அழுகிய நிலையில் உடல் மீட்பு; விருகம்பாக்கத்தில் வக்கீல் படுகொலை appeared first on Dinakaran.

Related Stories: