செய்யாறு: செய்யாறில் போதை ஊசி போட்டு கொள்வதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் சரமாரி குத்தி கொலை செய்யப்பட்டார். மேலும் சடலம் பிளக்ஸ் பேனரில் சுற்றி ஏரியில் வீசப்பட்டது. இதுதொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3பேரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கண்ணியம் நகரை சேர்ந்தவர் சரவணன், கார் டிரைவர். இவரது மகன் சில்க் என்கிற ஜெமினி(22). அதே பகுதியை சேர்ந்தவர் இளையராஜா மகன் அக்னி என்கிற சுனில்(19). நண்பர்களான இருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இதனால் இருவரும் அடிக்கடி போதை ஊசி செலுத்திக்கொள்வார்களாம். கடந்த மாதம் 23ம்தேதி சுனில், ஜெமினி வீட்டிற்கு சென்று ‘போதை ஊசி செலுத்திக்கொள்ளலாம்’ என அழைத்துள்ளார். அதற்கு ஜெமினி மறுத்துவிட்டாராம். இதில் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டார்களாம்.
இந்நிலையில் கடந்த 28ம்தேதி மாலை சுனில், அவரது நண்பர்களான கார்த்திக்(20), அருண்குமார்(23), திலீப்குமார்(27), பெங்களூரான் ஆகியோர் ெஜமினி வீட்டிற்கு சென்று போதை ஊசி செலுத்திக்கொள்ளலாம் எனக்கூறி அவரை அழைத்து சென்றார்களாம். 2 நாட்கள் ஆகியும் ஜெமினி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம்பக்கம் என பல இடங்களில் தேடியும் ெஜமினி கிடைக்கவில்லை. இதுகுறித்து ஜெமியின் தந்தை சரவணன் செய்யாறு போலீசில் கடந்த 30ம்தேதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ஜெமினியின் நண்பர்களான சுனில், கார்த்திக் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் போதை ஊசி செலுத்திக்கொள்வதில் ஏற்பட்ட தகராறில் ஜெமினியை, சுனில் உள்பட 5பேரும் சேர்ந்து கத்தியால் குத்திக்கொன்றது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சுனில், கார்த்திக், அருண்குமார், திலீப்குமார், பெங்களூரான் ஆகியோர் போதை ஊசி செலுத்திக்கொள்ளலாம் எனக்கூறி ஜெமினியை அழைத்துக்கொண்டு கீழ்புதுப்பாக்கம்-புளியரம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள நீரோடை கால்வாய் பகுதிக்கு சென்றுள்ளனர். இரவு 11மணியளவில் போதை ஊசி செலுத்திக்கொள்வது தொடர்பாக இவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சுனில், குமரேசன், கார்த்திக் ஆகியோர் ஜெமினியை சரமாரி தாக்கியுள்ளனர். அப்போது சுனில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஜெமினியின் கழுத்து உள்பட உடலில் பல்வேறு இடங்களில் சரமாரி குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஜெமினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது சடலத்தை பிளக்ஸ் பேனரில் சுற்றி புளியரம்பாக்கம் ஏரியில் தேங்கியிருந்த தண்ணீரில் வீசியுள்ளனர்.
இதையடுத்து 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர். இதையடுத்து போலீசார் நேற்று சம்பவம் நடந்த இடத்தை அடையாளம் காட்டுவதற்காக சுனில், கார்த்திக் இருவரையும் அழைத்து சென்றனர். அங்கு ஜெமினியின் சடலம் அழுகிய நிலையில் ஏரியில் மிதந்து கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து சுனில், கார்த்திக் இருவரையும் இன்று காலை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அருண்குமார், திலீப்குமார், பெங்களூரான் ஆகிய 3பேரை தேடி வருகின்றனர்.
The post செய்யாறில் பயங்கரம்; போதை ஊசி தகராறில் வாலிபர் குத்திக்கொலை: பிளக்ஸ் பேனரில் சுற்றி சடலம் ஏரியில் வீச்சு appeared first on Dinakaran.