கள்ளநோட்டு அச்சடித்த 2 பேர் கைது: விசிக நிர்வாகிக்கு போலீசார் வலை


திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தத்தை அடுத்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய காட்டுப்பகுதியில் உள்ள ஒரு தகரஷீட் கொட்டகையில் கள்ளநோட்டு அச்சடிக்கப்படுவதாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்து கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதையடுத்து கொட்டகைக்குள் புகுந்து போலீசார் சோதனையிட்டனர். அப்போது ரூ.85 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள், அச்சடிக்கும் இயந்திரம், வாக்கி டாக்கி, லேப்டாப், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுண்டிங் மெஷின், பேப்பர் பண்டல், காக்கி யூனிபார்ம், ஆர்பிஐ முத்திரை, அரிவாள், கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த லாரி, பொக்லைன், கார்கள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கள்ளநோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட கொட்டகை போடப்பட்டிருந்த இடம் கடலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட பொருளாளரான செல்வம் (39) என்பவருக்கு சொந்தமானது என்பதும், இவர் ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் கிராமத்தில் வசிப்பதும் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக நவீன்ராஜ் (29), கார்த்திகேயன் (28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விசிக நிர்வாகி செல்வத்தை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் செல்வத்தை தேடி வருகின்றனர். செல்வத்திற்கு சென்னையிலும் ஒரு தனியார் கம்பெனி உள்ளதாக கூறப்படுவதால் அங்கும் தனிப்படை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சியை சேர்ந்த சக்திவேல், அண்ணாதுரை மகன்கள் அரவிந்த், அஜித் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கள்ளநோட்டு அச்சடித்த 2 பேர் கைது: விசிக நிர்வாகிக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.

Related Stories: