வீட்டு வாசலில் பணம் சிக்கிய வழக்கு; ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி 17 ஆண்டுக்குப் பின் விடுதலை: பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சண்டிகர் பஞ்சாப்-அரியானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக நிர்மல் யாதவ் பதவி வகித்தபோது, 2008ம் ஆண்டு அவரது வீட்டு வாசலில் பணக் கட்டுகள் அடங்கிய பார்சலை சிலர் போட்டு விட்டுச் சென்றனர். இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நிர்மல் யாதவ் உத்தரகண்ட் மாநில உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அப்பதவியில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்றார்.

இதற்கிடையே, நீதிபதி வீட்டு வாசலில் பணக்கட்டுகள் போடப்பட்ட விவகாரத்தில், அரியானா மாநில முன்னாள் கூடுதல் அரசு வழக்கறிஞர் சஞ்சீவ் பன்சால், டெல்லியை சேர்ந்த ஓட்டல் அதிபர் ரவீந்தர் சிங், அரியானாவைச் சேர்ந்த வர்த்தகர் ராஜிவ் குப்தா மற்றும் நிர்மல் சிங் ஆகிய 4 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில் சஞ்சீவ் பன்சால் 2017ல் உடல்நலக்குறைவால் காலமானார்.

இதுதொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. 17 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கை பல நீதிபதிகள் விசாரித்தனர். இறுதியில் நீதிபதி அல்கா மாலிக் இறுதி விசாரணையை கடந்த 27ம் தேதி நிறைவு செய்து தீர்ப்பை ஒத்திவைத்தார். நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவ் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

The post வீட்டு வாசலில் பணம் சிக்கிய வழக்கு; ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி 17 ஆண்டுக்குப் பின் விடுதலை: பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: