சென்னை: தங்கம் விலை நேற்று மேலும் அதிகரித்து ஒரு பவுன் ரூ.67 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த 20ம் தேதி தங்கம் விலை ரூ.66,480 க்கு விற்பனையானது. அதன் பின்னர் தங்கம் விலை சற்று குறைந்து வந்தது. இந்த விலை குறைவு என்பது 3 நாட்கள் தான் நீடித்தது. அதன்பிறகு தங்கம் விலை உயர தொடங்கியது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து கிராம் ரூ.8340க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து பவுன் ரூ.66,720க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வு அதிர்ச்சியை தாங்குவதற்குள் நேற்று தங்கம் விலை மேலும் உயர்ந்தது, அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, கிராம் ரூ.8,360க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து பவுன் ரூ.66,880க்கும் விற்பனையானது.
இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. அதே நேரத்தில் வெள்ளி ஒரு கிராம் ரூ.113க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.
The post ரூ.67,000ஐ நெருங்குகிறது ஒரு பவுன் தங்கம் விலை appeared first on Dinakaran.