சூரிய கிரகணம், சனி அமாவாசை: திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள்

காரைக்கால்: சனி அமாவாசையை முன்னிட்டு திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் இன்று அதிகளவில் பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர். திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் இன்று(29ம் தேதி) இரவு 10.07 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 3-6-2027 வரை இரண்டரை வருட காலத்துக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்கிறார். அதேசமயம் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டுள்ள சனிப்பெயர்ச்சி தொடர்பாக தகவல்கள் வெளியான நிலையில், தமிழகத்தில் சனிபகவான் தலமான திருநள்ளாறு உள்ளிட்ட கோயில்களில் இன்று சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் என தகவல் பரவியது.

திருநள்ளாறு கோயிலை பொருத்தவரை வாக்கிய பஞ்சாங்கம் முறையை பின்பற்றியே சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இந்த பாரம்பரிய கணிப்பு முறையின்படி அடுத்த ஆண்டு (2026) சனிப்பெயர்ச்சி நடைபெறும். இதனால் இன்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவில்லை. இன்று வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெற்றது. இருப்பினும் திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று சனிப்பெயர்ச்சி தொடங்கியதில் இருந்து 90 நாட்களுக்குள் திருநள்ளாறு சென்று வழிபடுவது ஏராளமான நன்மைகளைத் தரும் என்பதாலும், சனிக்கிழமை மட்டுமின்றி சூரிய கிரகணம், சனி அமாவாசை என்பதாலும் திருநள்ளாறில் வழக்கத்தைவிட இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

குச்சனூர் தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே, குச்சனூரில் பிரசித்தி பெற்ற சனிபகவான் கோயில் உள்ளது. திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற இந்த சனிபகவான் கோயிலில் வாக்கிய பஞ்சாங்கப்படி வருகின்ற 2026 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

The post சூரிய கிரகணம், சனி அமாவாசை: திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: