தமிழகம், புதுச்சேரியில் இயங்கும் 12 ஆயிரத்து 480 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடந்தது. தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கின்ற மாணவர்கள் தமிழ் பாடத் தேர்வில் நேற்று பங்கேற்றனர். இதையடுத்து, ஏப்ரல் 2ம் தேதி ஆங்கிலப் பாடத் தேர்வு நடக்க இருக்கிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு நேற்று தொடங்கியதை அடுத்து, சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று ஆய்வு செய்தார். சென்னை எழும்பூர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தை ஆய்வு செய்த அமைச்சர் அங்கு தேர்வு எழுத வந்த மாணவ மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்து, தேர்வை அச்சமின்றி எதிர் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 9 லட்சத்து 13 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர். தமிழகத்தில் பள்ளிகளுக்கான தேர்வு என்பது மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக நடத்தப்படுகிறது. மற்ற மாநிலங்கள் இங்குள்ள தேர்வு முறையை பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது. அறிவு சார்ந்த சமூகத்தை மற்றவர்களும் அமைக்க முடியும். வெயில் கடுமை காரணமாக கீழ் வகுப்புகளுக்கு முன்னதாக தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வி அதிகாரிகளிடம் பேசி முடிவு எடுக்கப்படும்.
தேர்வுத்துறை சார்ந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்படி அந்தந்த தேதிகளில் வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். புழல் சிறையில் 33 கைதிகள் தேர்வு எழுதினர்: தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் 10ம் வகுப்பு பொதுதேர்வு நடைபெறுகிறது. இதில், புழல் தண்டனை சிறையில் மையமாகக்கொண்டு, தண்டனை கைதிகள் 20 பேரும், விசாரணை சிறை கைதிகள் 12 பேரும், பெண் கைதி ஒருவரும் என மொத்தம் 33 கைதிகள், 10ம் வகுப்பு பொதுதேர்வு எழுதினர்.
* முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள். பயமும் பதற்றமுமின்றி தேர்வுகளை எதிர்கொண்டு, உங்கள் வாழ்வின் முன்னேற்றத்துக்கான மேற்படிப்புகளுக்குச் செல்லுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சென்னையில் அமைச்சர் நேரில் ஆய்வு 10ம் வகுப்பு தேர்வு தொடங்கியது: 9 லட்சம் பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.