மேல ஏறி வர்றோம்.. ஒதுங்கி நில்லு.. பெண்களின் சுய வருமானத்தை உயர்த்திய உன்னத திட்டம்:சென்னையில் உலா வரும் 100 பிங்க் ஆட்டோக்கள்

தமிழ்நாடு முதல்வர் பெண்கள் நலன், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார். அவற்றோடு, பெண்களின் நலனை உறுதி செய்யும் விதமாக விடியல் பயணத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், தோழி விடுதிகள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியது, புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு புதிய மகளிர் நலத்திட்டங்களை செயல்படுத்தி, பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துள்ளார். இதன் காரணமாகவே, பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக தமிழ்நாடு அரசு ‘இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்களை’ அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, முதற்கட்டமாக 100 ‘இளஞ்சிவப்பு நிற’ ஆட்டோக்களை முதல்வர் கடந்த 8.3.2025 அன்று வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு இளஞ்சிவப்புநிற ஆட்டோவிலும், அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. பெண்கள் சுயதொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தேவையான தகுதிகளாக, பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். இத்திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும், சென்னையில் குடியிருக்க வேண்டும் என்ற தகுதிகளின் அடிப்படையில் பயனாளிகளை தேர்வு குழு உறிப்பினர் மூலம் தேர்வு செய்யப்பட்டு பயன்பெற்றுள்ளனர். இதற்கென தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு சிஎன்ஜி/ஹைபிரிட் (CNG/Hybrid) ஆட்டோ வாங்க மானியமாக வழங்குகிறது. ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்கு வங்கிகளுடன் இணைக்கப்படும்.
இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரி கூறியதாவது: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்களுக்கான சுயதொழில் வேலை வாய்ப்பினை உருவாக்கவும் தமிழக அரசு, ரூ.2 கோடி செலவில் 250 பிங்க் ஆட்டோ இயக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

இத்தகைய ஆட்டோ பிங்க் நிறத்தில் இருக்கும் என்றும் பெண்கள் மட்டும்தான் ஓட்டுநராக இருப்பார்கள் என்றும் அவர்கள் பிங்க் நிறத்தில் சீருடை அணிந்திருப்பார்கள் என்றும், மேலும் இந்த ஆட்டோவில் ஜிபிஎஸ் மற்றும் வாகனம் இருக்கும் இடத்தை கண்டறியும் சாதனம் உள்ளிட்டவை இருக்க வேண்டும் என மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 100 பேருக்கும், 2ம் கட்டமாக வரும் ஏப்.6ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு 150 பேருக்கும் வழங்கப்பட உள்ளது. பெண்கள் மத்தியில் பிங்க் ஆட்டோவிற்கு நிறைய வரவேற்பு கிடைத்து வருகிறது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் அவர்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குடும்ப வருமானம் உயர்ந்துள்ளது: பயனாளி அன்னபூரணி
எனது கணவர் ராஜேஷ் பிளக்ஸ் பேனர் ஒட்டும் பணி செய்து வருகிறார். வேலை நிரந்தரமாக இருக்காது. பண்டிகை காலம், அரசியல் தலைவர்கள் கூட்டம் இதுபோன்ற காலங்களில் தான் வேலை கிடைக்கும். இந்த நிலையில் பிங்க் ஆட்டோ வழங்கும் திட்டம் குறித்து கேள்விப்பட்டோம். எனக்கு ஆட்டோ ஓட்ட தெரியும் என்பதால், குடும்ப வருமானத்தை அதிகப்படுத்த ஆட்டோ ஓட்டலாம் என முடிவு செய்தேன். பிங்க் ஆட்டோ திட்டத்தில் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிங்க் ஆட்டோ வழங்கினார்கள். ஆட்டோவின் விலை ரூ.2.85 லட்சம் வருகிறது. இதில் மானியமாக எனக்கு ரூ.1 லட்சம் கிடைத்தது, மீதமுள்ள ரூ.1.85 லட்சம் தொகையை வங்கி கடனாக பெற்று ஆட்டோ ஓட்டி வருகிறேன். தினமும் ரூ.1000 கிடைக்கிறது. எங்களது குடும்ப வருமானம் உயர்ந்துள்ளது. தாயுள்ளம் கொண்ட தமிழ்நாடு முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மகளிருக்கு முன்னோடியான திட்டம்: பயனாளி புவனேஸ்வரி
நானும் எனது கணவர் மணிகண்டனும் வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஆட்டோ ஓட்டுநர்களாக இருந்து வருகிறோம். எங்களுக்கு 2 ஆண் குழந்தைகள். திருவொற்றியூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். நான் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் பணத்தில் தினமும் ஆட்டோ வாடகை போக மீதமுள்ள பணத்தை மட்டுமே குடும்பத்திற்கு செலவு செய்து வந்தேன். இந்த சூழ்நிலையில் பிங்க் ஆட்டோ குறித்து தினகரன் நியூஸ் பேப்பர் வாயிலாக அறிந்தேன். எனது கணவரிடம் தெரிவித்தேன். அவரும் நானும் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூகநலத்துறை அலுவலகம் வந்து சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு எனக்கு பிங்க் ஆட்டோ கொடுத்தார்கள். தற்போது எனது சொந்த ஆட்டோவை ஓட்டி சம்பாதித்து வருகிறேன். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. வாடகை ஆட்டோ ஓட்டும் மகளிருக்கெல்லாம் இந்த பிங்க் ஆட்டோ திட்டம் ஒரு முன்னோடியான திட்டம். இதன்மூலம் உழைக்கும் எனது சுயவருமானம் உயர்ந்துள்ளது. இந்த திட்டத்தை கொடுத்த முதல்வருக்கு பெண்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் : – பயனாளி செம்பருத்தி
இளஞ்சிவப்பு நிற ஆட்டோ பெற்று பயனடைந்த பயனாளி செம்பருத்தி கூறியதாவது:
எனது கணவர் புஷ்பராஜ் இறந்துவிட்டார். எனக்கு ஜெய்சூர்யா, ராகவன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராயப்பேட்டை, பார்டர் தோட்டத்தில் வசித்து வருகிறேன். எனது கணவர் இறந்த பிறகு மிகவும் கஷ்டப்பட்டு தனி ஒருவராக எனது இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்தி வருகிறேன். அப்போதுதான் பிங்க் ஆட்டோ திட்டம் குறித்து தெரிந்து கொண்டேன். எனக்கு ஆட்டோ ஓட்ட தெரியும். டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளேன். உடனே, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூகநலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு எனக்கு பிங்க் ஆட்டோ வழங்கினார்கள். இப்போது எனது குழந்தைகளை பள்ளி அனுப்பிய பிறகு ஆட்டோ ஓட்டச் சென்று விடுவேன். ஒரு நாளைக்கு செலவு அனைத்தும் போக ரூ.800 முதல் ரூ.1000 வரை சம்பாதிக்கிறேன். இது எனது குடும்பத்தை நடத்த போதுமானதாக உள்ளது. இந்த திட்டத்தை அறிவித்து, என்னைப் போன்றவர்களின் வாழ்வு வளம்பெற உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என்றென்றும் கடமைப்பட்டவராக இருப்பேன்.

The post மேல ஏறி வர்றோம்.. ஒதுங்கி நில்லு.. பெண்களின் சுய வருமானத்தை உயர்த்திய உன்னத திட்டம்:சென்னையில் உலா வரும் 100 பிங்க் ஆட்டோக்கள் appeared first on Dinakaran.

Related Stories: