தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடந்த காஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக் வாபஸ்: கோரிக்கையை ஆயில் நிறுவனங்கள் ஏற்றதாக சங்க தலைவர் பேட்டி

சென்னை: தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 4 நாட்களாக நடைபெற்று வந்த காஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களில், எல்பிஜி காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 27ம்தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்தனர். அடுத்த 5 ஆண்டுக்கு ஆயில் நிறுவனங்கள் அறிவித்துள்ள புதிய வாடகை டெண்டரில், இடம் பெற்றுள்ள விதிமுறைகளை மாற்றம் செய்யக்கோரி, இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது.

குறிப்பாக, வாகனங்களை பிளாக் லிஸ்டில் சேர்க்கும் அறிவிப்பு, கிளீனர் நியமனம் கட்டாயம் போன்றவற்றை நீக்கவேண்டும் என லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனால், கடந்த 4 நாட்களில் 2 ஆயிரம் வாகனங்களில், காஸ் லோடு ஏற்றுவது நிறுத்தப்பட்டது. தென்மாநிலங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட பாட்டிலிங் பிளாண்டுகள், 12 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் காஸ் டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்றும் 4வது நாளாக ஸ்டிரைக் நீடித்தது.

இந்நிலையில், நேற்று இரவு நாமக்கல்லை அடுத்த செல்லப்பம்பட்டியில், தென் மண்டல எல்பிஜி காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம், சங்கத்தின் தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் அம்மையப்பன் மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசித்தனர். இந்த கூட்டத்தில் ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து சங்கத் தலைவர் சுந்தர்ராஜன் கூறியதாவது:
கடந்த டெண்டரில் இருந்த விதிமுறைகளை, மீண்டும் பின்பற்றுவதாக ஆயில் நிறுவன அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதன் மூலம் லோடு ஏற்றி வரும்போது, எடைகுறைவு ஏற்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற விதிமுறையை நீக்குவது, வாகனங்களை பிளாக் லிஸ்டில் சேர்ப்பது போன்றவற்றை நீக்குவதாக ஆயில் நிறுவன அதிகரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். எனவே, எங்களின் பெரும்பாலான கோரிக்கையை ஆயில் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டதால், கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. எங்களின் நியாயமான கோரிக்கையை ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு சென்று எங்கள் தொழிலுக்கு உதவிய, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, எம்பிக்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், ஈஸ்வரன் ஆகியோருக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடந்த காஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக் வாபஸ்: கோரிக்கையை ஆயில் நிறுவனங்கள் ஏற்றதாக சங்க தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: