இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை 2027 ஆக.15ம் தேதி பயன்பாட்டுக்கு வரும்: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

டெல்லி: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை 2027 ஆக.15ம் தேதி பயன்பாட்டுக்கு வரும் என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார். ‘புல்லட் ரயிலின் முதல் பிரிவு சூரத் முதல் பிலிமோரா வரை இயக்கப்படும். பின்னர் வாபி – சூரத், வாபி – அகமதாபாத், தானே – அகமதாபாத், மும்பை – அகமதாபாத் வரை விரிவாக்கம் செய்யப்படும்’ எனவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் புல்லட் ரயில் திட்டம், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15, 2027 அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2026-ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மெகா திட்டத்தின் பணிகள் மிகவேகமாக நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தில் மக்கள் புல்லட் ரயிலில் பயணிக்கலாம் என்றும் உறுதியளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான இந்த மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் வழித்தடம் (MAHSR), சுமார் 508 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதில் பெரும் பகுதி, அதாவது 352 கிலோமீட்டர் குஜராத் மற்றும் தாதரா நகர் ஹவேலியிலும், 156 கிலோமீட்டர் மகாராஷ்டிரா மாநிலத்திலும் அமைகிறது. இந்த ரயில் சேவை தொடங்கப்படும்போது சபர்மதி, அகமதாபாத், சூரத், வதோதரா, வாபி மற்றும் மும்பை உள்ளிட்ட 12 முக்கிய நகரங்கள் அதிவேகமாக இணைக்கப்படும்.

கட்டுமானப் பணிகளைப் பொறுத்தவரை, இந்த வழித்தடத்தின் 85 சதவீதப் பகுதி மேம்பாலங்கள் வழியாகவே அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 326 கிலோமீட்டர் தூரத்திற்கான பாலப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: