வரும் பிப். 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது; 18 ரூபாய் சிகரெட் இனி ரூ.72: ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: 18 ரூபாய் சிகரெட் இனி ரூ.72க்கு விற்பனை செய்யப்படும் என ஒன்றிய அரசு அதிரடி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவில் 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி விகிதம் 5, 18 என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது. அதே நேரத்தில், சிகரெட், புகையிலை உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத சிறப்பு வரி விதிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை, கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் பிறகு, கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது, தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விலைகள் குறையாமல் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு தீவிரம் காட்டியது.

இதன்படி, அண்மையில் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில், புகையிலை, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க ஏதுவாக கலால் வரி விதிக்கும் வகையில், 2 மசோதாக்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மாநிலங்களவையிலும் குரல் வாக்குகள் மூலம், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த வரியானது சிகரெட், மெல்லும் புகையிலை பொருட்கள், ஹூக்காக்கள் ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்டது. இதையடுத்து 40 சதவீத ஜிஎஸ்டி மற்றும் உற்பத்தி வரி விதிக்கப்பட்டது.

இந்த புதிய வரி விதிப்பு முறைகள் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஒன்றிய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி தற்போது சந்தையில் சுமார் ரூ.18-க்கு விற்கப்படும் ஒரு சிகரெட்டின் விலை, இந்த வரி உயர்வால் ரூ.70 முதல் ரூ. 72 வரை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இது பிராண்ட் மற்றும் சிகரெட்டின் நீளத்தை பொறுத்து மாறுபடும். மேலும், மெல்லும் புகையிலை 25 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரையிலும், ஹூக்கா புகையிலை 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் வரையிலும், குழாய் புகையிலை 60 சதவீதத்தில் இருந்து 325 சதவீதம் வரையிலும் உயருகிறது. சிகரெட்டுகள் தொடர்ந்து 40 சதவீத ஜிஎஸ்டி பிரிவிலேயே இருக்கும். அதற்கு மேலதிகமாக இந்த புதிய கலால் வரி வசூலிக்கப்படும்.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, புகையிலை பொருட்களின் மீதான வரி அதன் விலையில் 75 சதவீதம் இருக்க வேண்டும். இந்தியாவிலும் அந்த இலக்கை எட்டவே இந்த அதிரடி உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த விலை உயர்வின் மூலம் ஒரு நாளைக்கு 5 சிகரெட் பிடிப்பவர் இதுவரை செலவழித்த ரூ.90 இனி ரூ.360 ஆக உயரும். இதனால் ஒரு மாதத்திற்கு சிகரெட்டுக்காக மட்டும் சுமார் ரூ.10,000 முதல் ரூ.11,000 வரை செலவிட வேண்டியிருக்கும். அரசின் முக்கிய நோக்கம் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்பதாகும். மேலும், புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் முடியும். இதன் மூலம் நுரையீரல் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் சுவாச கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களை தடுக்க முடியும். அதே நேரத்தில் சிலர் பீடி அல்லது தரமற்ற புகையிலை பொருட்களுக்கு மாற வாய்ப்புள்ளது. இது ஆரோக்கியத்திற்கு இன்னும் கூடுதலான ஆபத்தை விளைவிக்கும்.

Related Stories: