ரூ.650 கோடி வரிஏய்ப்பை கண்டுபிடித்து நெருக்கடி அமித்ஷாவிடம் சரணடைந்தார் எடப்பாடி: அண்ணாமலையை மாற்ற கோரிக்கை

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ரூ.650 கோடி வரி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ள நிலையில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்து பேசினார். அப்போது கூட்டணிக்கு சம்மதிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆதாரங்களை காட்டி எச்சரிக்கை விடுத்ததாகவும், அதைத் தொடர்ந்து கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து விட்டு வந்துள்ளதாகவும் டெல்லியில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று காலை விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்கிறார் என்று கூறப்பட்டது. பொதுவாக எடப்பாடி பழனிசாமி, விமானங்களில் பயணம் செய்தால் சென்னை விமான நிலையத்திற்கு முன்னதாகவே தகவல் வரும். ஆனால் அதுபோன்ற தகவல் எதுவும் முன்னதாக வரவில்லை. இந்நிலையில்தான் நேற்று காலை 10 மணியளவில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார் என்ற தகவல் சென்னை விமான நிலையத்திற்கு கிடைத்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று காலை 11.20 மணிக்கு சென்னையில் இருந்து செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டிக்கெட் இருந்தது. அதன் பின்புதான் அவர் டெல்லி செல்வது உறுதியானது. எடப்பாடி பழனிசாமி வழக்கமாக விமானம் புறப்படுவதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருவார். அதைப்போல் நேற்று காலை 10.45 மணிக்கு மேல் எடப்பாடி சென்னை விமான நிலையத்திற்கு வருவார் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் அவர் வழக்கத்துக்கு மாறாக நேற்று காலை 10.20 மணிக்கெல்லாம் சென்னை விமான நிலையத்திற்குள் வந்து அவசரமாக உள்ளே சென்றுவிட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரி மட்டும் சென்றார். வேறு யாரும் செல்லவில்லை.

எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்திற்கு வரும்போதெல்லாம் அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் வருகை தந்து அவரை வழியனுப்பி வைப்பார்கள். ஆனால் நேற்று கட்சி நிர்வாகிகளோ, தொண்டர்களோ வரவில்லை. யாருக்கும் தகவல் கொடுக்காமல் இந்த பயணம் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, வேலுமணி ஆகியோர் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.
இந்தநிலையில், நேற்று பகலில் டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்துக்குச் சென்று பார்வையிட்டார். பின்னர் நிருபர்கள் அவரிடம் பேட்டி கேட்டபோது, கட்சி அலுவலகத்தைப் பார்க்க வந்ததாக தெரிவித்தார்.

வேறு யாரையும் சந்திக்கவில்லை என்று கூறிவிட்டு, தம்பித்துரையின் வீட்டுக்குச் சென்று விட்டார். இரவு 8 மணிக்கு தம்பித்துரையின் வீட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி அமித்ஷா வீட்டுக்குப் புறப்பட்டார். அவருடன் வேலுமணி, கே.பி.முனுசாமி, தம்பித்துரை ஆகியோர் சென்றனர். 8.40 மணிக்கு அமித்ஷாவை சந்தித்தனர். முதல் 25 நிமிடம், அதிமுகவினருடன் சேர்ந்து அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அதன்பின்னர், அதிமுக நிர்வாகிகளை வெளியே அனுப்பிவிட்டு, அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மட்டும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். 9 மணிக்கு இருவரும் தனியாக பேசத் தொடங்கினர். இந்தப் பேச்சுவார்த்தை 10.30 மணி வரை நீடித்தது. சுமார் 1.30 மணிம் இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினர். இது அதிமுக, பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டெல்லி அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் சகலையின் அப்பாதான் ஈரோட்டைச் சேர்ந்த ராமலிங்கம். அதாவது மிதுனும், ராமலிங்கம் மகனும் ஒரே வீட்டில் பெண் எடுத்துள்ளனர். இதனால், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ராமலிங்கத்திற்குத்தான் ஏராளமான கான்ட்ராக்ட்கள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் அதிமுகவுடன் பாஜவும் கூட்டணி முறிந்ததால், கடந்த சில மாதங்களாக அதிமுகவை கூட்டணிக்கு பாஜவின் டெல்லி தலைமை அழைத்துக் கொண்டிருந்தது. ஆனால் எடப்பாடி பழிச்சாமி பிடி கொடுக்காமல் இருந்தார்.

கடந்த மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணி தோல்விக்கு அதிமுக கூட்டணியில் இல்லாததுதான் காரணம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அண்ணாமலையை மாற்றிவிட்டு அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பாஜவில் எழுந்தது. இதனால் இதுவரை அண்ணாமலையை மாநில தலைவராக அறிவிக்காமல் தேசிய தலைமை இருந்து வந்தது. ஆனால் அண்ணாமலையை மாற்றினாலும் கூட்டணிக்கு சம்மதிக்கமாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருந்தார். 2026 தேர்தலிலும் பாஜவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டார். இதனால் ராமலிங்கத்தின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் சில நாட்களுக்கு முன்னர் சோதனை நடத்தியது.

இந்தச் சோதனையில் ரூ.650 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ராமலிங்கத்தின் சொத்துக்கள் பினாமியாக இருக்கலாம் என்று அமாலக்கத்துறை சந்தேகித்தது. இதனால் எடப்பாடி பழனிசாமியை நோக்கி தனது சந்தேக பார்வையை திருப்பியது. இந்தநிலையில்தான் கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி பழனிசாமி டெல்லி வந்து அமித்ஷாவை சந்தித்துள்ளார். பாஜவுடன் கூட்டணியே கிடையாது என்றவர், கடந்த சில நாட்களாக தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மாற்றி, மாற்றி பேச ஆரம்பித்தார்.

இந்தநிலையில், இரு மொழிக் கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு ஆகிய விவகாரங்களில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரண்டன. இதனால் திமுக, அதிமுக கட்சிகள் பிரிந்து இருக்க வேண்டும் என்று பாஜ கருதுகிறது. இதனால் அதிமுக தங்கள் கூட்டணிக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டால், தாங்கள் விரும்பியதை சாதிக்கலாம் என்று பாஜ கருதுகிறது. இதனால் எப்படியாவது எடப்பாடியுடன் கூட்டணிக்கு முயன்ற பாஜ கடைசியில் அமலாக்கத்துறை சோதனை மூலம் தங்களது திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியுள்ளது. அவருக்கும் வேறு வழி இல்லை. இப்ேபாது கூட்டணியை அறிவிக்க மாட்டார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, மீனவர் பிரச்னை குறித்து பேசியதாவும், மனுக் கொடுத்ததாகவும் கூறுவார். சென்னை திரும்பியதும் பாஜவை திட்டக்கூடாது என்பார். பாஜவுக்கு ஆதரவாக கொஞ்சம், கொஞ்சமாக அறிக்கை கொடுப்பார். அவர்கள் அறிவிக்கும் திட்டங்களை வரவேற்பார். பின்னர் சில மாதங்கள் கழித்து அதிமுகவுடன் கூட்டணி என்று அறிவிப்பார் என்கின்றனர்.

* அண்ணாமலையை நீக்க வேண்டும்: எடப்பாடி
அதிமுக, பாஜ கூட்டணி உடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அண்ணாமலை. இருவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருவரில் யார் பெரியவர்கள் என்ற போட்டி இருவருக்கும் உருவானது. இதனால் போட்டி போட்டு கூட்டணியை உடைத்தனர். கூட்டணியை உடைப்பதற்காகவே, ஜெயலலிதா ஆட்சிதான் மோசமான ஆட்சி என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார். அண்ணா, மதுரையில் பயந்து ஓடிவிட்டார் என்றார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஊழலில் திளைத்ததாக குற்றம்சாட்டியிருந்தார். அதிமுக காணாமல் போய்வட்டது என்று குற்றம்சாட்டினார்.

கடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று தெரிந்தாலும், அதிமுக கூட்டணியை விட அதிக ஓட்டுகள் வாங்க வேண்டும் என்று எல்லா தலைவர்களையும் தேர்தலில் நிற்க வைத்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியை வெறுப்பேற்றி வந்ததால், தற்போது அண்ணாமலையை மாற்றினால்தான் கூட்டணி என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலையை மாற்றிவிட்டு கூட்டணிக்கு அமித்ஷா சம்மதித்துள்ளார் என்று கூறப்படுகிறது. எடப்பாடியின் முடிவுக்காகத்தான் அண்ணாமலையை மாநில தலைவராக அறிவிக்காமல் உள்ளனர். தற்போது அண்ணாமலை விவகாரத்தில் மேலிடம் ஒரு முடிவை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

* அதிமுக-பாஜ கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா?
டெல்லியில் அமித்ஷா-எடப்பாடி சந்திப்பின்போது முக்கிய விஷயமாக பேசப்பட்டது அதிமுக-பாஜ கூட்டணிதான். வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக-பாஜ கூட்டணி போட்டியிட வேண்டும் என்று டெல்லி பாஜ மேலிடம் உறுதியாக உள்ளது. நேற்று நடந்த சந்திப்பில் இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எடப்பாடியுடனான சந்திப்புக்கு பிறகு அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழகத்தில் 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்’ என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அதிமுக-பாஜ கூட்டணியை அமித்ஷா உறுதி செய்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கு முன் பல சந்திப்புகள் நடந்தாலும் முதன்முறையாக கூட்டணி விவகாரம் குறித்து அமித்ஷா பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* கட்டுக்கட்டாக ஆவணங்கள் காட்டிய அமித்ஷா; நடுங்கிய எடப்பாடி
ராமலிங்கத்தின் வீட்டில் வரி ஏய்ப்பு குறித்து கட்டுக்கட்டாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஊழல்கள் குறித்தும் ஏராளமான ஆவணங்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சேகரித்து வைத்திருந்தது. மொத்த ஆவணங்களையும் எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா காட்டி, எச்சரிக்கும் தொணியில் பேசியதாக கூறப்படுகிறது. கூட்டணிக்கு சம்மதிக்காவிட்டால், அதிமுக தலைவர்கள் பலருக்கும் சிக்கல் வரும். முதலில் உங்களிடம் இருந்துதான் ஆரம்பிக்கும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. அமித்ஷா காட்டிய ஆவணங்களைப் பார்த்ததும் எடப்பாடி பழனிசாமியே அதிர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சி வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னரும் நீடித்துள்ளது. காரில் செல்லும் வழியில் யாரிடமும் பேசாமல் சென்றுள்ளார். தம்பித்துரை வீட்டுக்குச் சென்ற பிறகுதான் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

The post ரூ.650 கோடி வரிஏய்ப்பை கண்டுபிடித்து நெருக்கடி அமித்ஷாவிடம் சரணடைந்தார் எடப்பாடி: அண்ணாமலையை மாற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: