சென்னை: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜுக்கு எதிராக பிறப்பித்த வாரண்ட்டை ஐகோர்ட் ரத்து செய்தது. மதுராந்தகம் தாலுகா ஆனைகுன்றத்தில், கிராம உதவியாளராக இருந்த முனுசாமி கடந்த 2001ம் ஆண்டு மரணமடைந்தார். முனுசாமியின் மகன் ராஜகிரி, கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், 3 மாதங்களில் ராஜகிரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க 2023ல் உத்தரவிட்டிருந்தது.
உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி ராஜகிரி, 2024ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். செங்கல்பட்டு ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் சட்டப்பூர்வ நோட்டீஸ் பிறப்பித்தார். வழக்கு மீண்டும் கடந்த 22ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஆட்சியர் ஆஜராகாததால், ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பிப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் நேரில் ஆஜராகி மனு தாக்கல் செய்தார்.
அதில் உயர்நீதிமன்ற உத்தரவு தனது கவனத்திற்கு கொண்டுவரவில்லை என்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் சில நிர்வாகக் காரணத்தால் மனுதாரருக்குப் பணி வழங்குவது தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், தற்போது திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கி நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மனுவில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எதிரான நீதிமன்ற வாரண்ட் உத்தரவைத் திருப்பப் பெற்ற நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏப்ரல் 4-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். மேலும் அடுத்த விசாரணையில் இருந்து நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
The post செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜுக்கு எதிராக பிறப்பித்த வாரண்ட்டை ரத்து செய்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.