ரம்ஜான் பண்டிகை எதிரொலி.. நெல்லை மேலப்பாளையம் சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை அமோகம்!!

நெல்லை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கால்நடை சந்தைகளில் ஆடுகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது. ரம்ஜான் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், திருநெல்வேலி மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் அதிகாலையிலேயே விற்பனை களைகட்டி இருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து சந்தையில் குவிக்கப்பட்டு இருந்த ஆடுகளை வியாபாரிகள் வாங்கி சென்றனர். குறைந்தபட்சம் ரூ.5,000 முதல் அதிகபட்சம் ரூ.30,000 வரை ஆடுகள் கைமாறின. எதிர்பார்த்த அளவுக்கு ஆடுகள் விலை போகவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வரத்து அதிகமாக இருந்ததால் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மானாமதுரை அருகே உள்ள திருப்புவனம் கால்நடைச் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. அதிகாலையிலேயே மணல்மேடு, பெத்தானேந்தல், கீழடி, அல்லிநகரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் 2,000க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.8,000 முதல் ரூ.13,000 வரையும், 20 கிலோ எடை கொண்ட கிடாய்கள் ரூ.28,000 வரை விற்பனையாகின. திருப்புவனம் சந்தையில் சுமார் 2 கிலோ எடை கொண்ட சேவல் ஜோடி ஒன்று ரூ.300 முதல் ரூ.450 வரை விலை போனது.

இதனிடையே ரம்ஜான் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் 3000க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வெளிமாநில வியாபாரிகள் பெரும்பாலான மாடுகளை வாங்கி செல்வதால் சுமார் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ரம்ஜான் பண்டிகை எதிரொலி.. நெல்லை மேலப்பாளையம் சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை அமோகம்!! appeared first on Dinakaran.

Related Stories: