சங்கடங்கள் தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன்

நம்முடைய வாழ்க்கையின் லட்சியம் என்ன? உலகியல் வாழ்க்கை வாழ்ந்து முடிவது தானா?

உலகியல் வாழ்க்கை என்றால்… என்ன என்ற சந்தேகம் வரும் உங்களுக்கு. வீடு, மனைவி, மக்கள் என்று ஆடி ஆடி, ஓடிஓடி அலுத்துச் சலித்துச் சாய்கின்ற வாழ்க்கை. அப்படித்தான் வாழ்கிறோம். ஆனால், இது போதுமா? ஆன்மிக வாழ்க்கை என்று ஒன்றிருக்கிறதே, அதனைத் திருப்பித் திருப்பி நமது சான்றோர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்களே. அந்த ஆன்மிக வாழ்க்கையைப் பற்றி நாம் சிறிதேனும் கவலைப்பட வேண்டாமா? அதற்காகத்தானே ஆலயங்கள், திருவிழாக்கள் என்று ஏற்படுத்திச் சென்றிருக்கிறார்கள் நமது பெரியவர்கள்.

இயந்திர யுகத்தில் இறைவனை மறக்கலாமா? பெற்ற தாயை மறந்து பிள்ளை இருப்பது தகுமா? இறைவனைத் தாய் என்றும் சக்தி என்றும் எண்ணு கிறோம். எல்லையற்ற வல்லமை கொண்ட அந்தச் சக்தி பல்வேறு திருத்தலங்களில் பல்வேறு வடிவங்களில் இந்த உலகினை ரட்சிக்க கோயில் கொண்டிருக்கிறாளே. அதில் ஒப்பற்ற ஒரு தலம், திருச்சிராப் பள்ளிக்கு அருகில் உள்ள சமயபுரம். திருச்சி சந்திப்பிலிருந்தும் பேருந்து நிலையத்திலிருந்தும், நகரப் பேருந்துகள் போகின்றன. கோயில் வாசலில் இறக்கிவிடுவார்கள்.

பெயர்க் காரணம்

கிருஷ்ணாவதாரத்தில், தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் அவதரித்தனர்.  பிறகு அவ்விரு குழந்தைகளும் இறைவன் விருப்பத்தினால் இடம் மாறின. தேவகியின் பிள்ளையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியதை அறியாமல் சிறையில் தேவகியிடமிருந்த பெண் குழந்தையைக் கொல்ல, மேலே தூக்கினான். அக்குழந்தை அவன் கைகளிலிருந்து மேலே எழும்பி, வில், அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் முதலிய ஆயுதங்களைத் தரித்துத் தோன்றினாள். அத்தேவியே மகாமாரியம்மன் என்ற கண்கண்ட தெய்வமாக அழைக்கப்பட்டாள்.

சமயத்தில் பக்தர்கள் கேட்பதைத் தருபவள் என்பதால் “சமயபுரத்தாள்” என்று அவளை அழைக்கிறார்கள். கர்நாடகத்தை சேர்ந்த துவார சமுத்திரத்திலிருந்து அரசாண்டு வந்த ஓய்சாளர் அல்லது போசாளர் என்ற மரபினர் 13-ஆம் நூற்றாண்டில் கண்ணனூரைத் தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர். இவர்கள் வலிமை குன்றிய பிற்காலச் சோழ மன்னர்களுக்கு நேசக்கரம் நீட்டி உதவி செய்தனர். போசாள மன்னன், வீரசோமேசுவரன் இந்நகரை அமைத்து இதற்கு விக்கிரமபுரம் என்று அழைத்ததை பெங்களூர் அருங்காட்சியகச் செப்பேடுகள் கூறுகின்றன.

தற்பொழுது கண்ணனூரில் உள்ள போஜேசுவரம் என்று அழைக்கப்படும் சிவன்திருக்கோயில் வீர சோமேசுவரனால் கட்டப்பட்டதாகும். போசாளீசுவரம் என இத்திருக்கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. வீர சோமேஸ்வரனுக்குப் பின்னர் அவன் மகன் வீர ராமநாதன் கண்ணனூரிலிருந்து அரசாட்சி செய்தான்.

பிற்காலத்தில் பாண்டியர் படையெடுப்பால் கோட்டை நகரம் இடிந்தது. வேப்ப மரங்கள் முளைத்தன. ஒரு காலத்தில் சமயபுரம் மாரியம்மன் வைஷ்ணவி என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்ததாகவும் உக்கிரமாக இருந்ததால் அப்போது இருந்த ஜீயர் இந்த அம்மனை வேறு இடத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்கிறார்கள். அப்படி கிளம்பும்போது ஒரு இடத்தில் இளைப்பாற அந்தச் சிலையை வைத்தனர்.

அந்த இடம், தற்போது சமயபுரம் எனப்படுகிறது. பிறகு அந்தச் சிலையை கண்ணனூர் என்ற இடத்தில் ஒரு ஓலை கொட்ட கையில் வைத்தனர். அப்பொழுது தென்னாட்டின் மீது படை எடுத்து வந்த விஜயநகர மன்னன் இந்த அம்மனை வணங்கி போரில் வெற்றி பெற்றால் கோயில் கட்டுவதாக நேர்ந்து கொண்டான். வெற்றியும் பெற்றதால் அவன் ஒரு கோயிலைக் கட்டினான். தெய்வங்களாக விநாயகரின் கருப்பண்ணசாமியும் பிரதிஷ்டை செய்தான். தற்போதைய ஆலயம் 1804ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.

கோயில் அமைப்பு

கிழக்கு நோக்கிய கோயில். மூன்று பிரகாரங்கள் உள்ளன. நீண்ட மண்டபம் உள்ளது. பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் போன்ற மண்டபங்கள் உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் விநாயகர் இருக்கிறார். மாரியம்மனின் உற்சவமூர்த்தி, கருப்பண்ணசாமி ஆகியோருக்கு சந்நதிகள் இருக்கின்றன.

அம்பாளின் கருவறையை சுற்றி ஜில்லென்று இருக்கும். காரணம் அங்கே எப்பொழுதும் நீர் நிறைந்திருக்கும். கருவறை விமானம் தங்கத் தகடுகளால் செய்யப்பட்டுள்ளது. கோபுரம்கடந்து பிரதான வாயிலை அடையலாம். உள்ளே கவசம் போட்டு கம்பீரமாகத் தென்படும் கொடி மரம். இடதுபுறம் விநாயகர் சந்நதி. கொஞ்சம் தள்ளி தலவிருட்சமான வேப்பமரம். தலவிருட்சத்தின் அருகில் பக்தர் களின் கோரிக்கை நிறைவேறக் காத்திருக்கும் சூலங்கள்.

அபிஷேக அம்மன் என்ற தனிச் சந்நதியும் பிரகாரச்சுற்றில் இருக்கிறது. பிரார்த்தனை அபிஷேகம் அனைத்தும் இங்குள்ள அம்மனுக்குச் செய்யப்படுகின்றன. மூலஸ்தானத்தின் இடதுபுறம் உற்சவ அம்மன் வீற்றிருக்கிறாள். திருவிழாக் காலங்களில் வீதி உலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த அம்மனை எழுந்தருளச்செய்கிறார்கள். மூலஸ்தானத்தில் செந்நிறப்பட்டாடை ஜொலிக்க, சிவந்த திருமுக மண்டலத்துடன் மூக்குத்தியின் பளீர் ஒளி திசையெங்கும் பிரகாசிக்க எட்டுகரங்களுடன் காட்சி தருகிறாள் அம்பிகை.மாரியம்மா எங்கள் மாரியம்மா என்று வாய்நிறைய தங்கள் குறைகளைச் சொல்லி அழைக்கும் பக்தர்கள் கூட்டம்.

திருவிழாக்காலம் என்று இல்லை. சாதாரண நாட்களிலேகூட இங்கு கூட்டம் அதிகம். எத்தனை விதமான பிரார்த்தனைகள் இனி அம்பாள் தரிசனம் இடக்காலை மடித்து வலக்காலை அசுரனின் தலைமீது ஊன்றிய கோலத்தில் வீராசனத்தில் காட்சி தருகிறாள் அம்பிகை. பாதத்தின் கீழே மூன்று அசுரர்களின் தலைகள்.

அம்பிகையைத் தரிசனம் செய்யும் போது மனம் ஆன்மிகச் சிந்தனைகளில் தானே ஈடுபடும். பரசுராமரின் தந்தையாகிய ஜமதக்னிமுனிவர் மனைவி ரேணுகாம்பாள் மாரியம்மனாக இருப்பதாக ஒரு கதை உண்டு. சிவனின் உஷ்ணத்தைத் தாங்கிக் கொண்டு உள்ள சக்தி சொரூபமே மாரியம்மனாக இருப்பதாக மற்றொரு கதையும் வழங்கப்படுகிறது. மூலமூர்த்தி திரு உருவம் மூலிகைகளால் ஆனது என்பதால் அபிஷேகம் கிடையாது என்கிறார்கள். கருவறையின் பின்புறம் அம்மனின் பாதம் இருக்கிறது. அதற்கு தீபாராதனை நிகழ்த்துகின்றார்கள்.

இரண்டு தீர்த்தங்கள் உண்டு. ஒன்று பெருவளை வாய்க்கால். இன்னொன்று மாரி தீர்த்தம். தங்கரதம் உள்ள கோயிலில் இதுவும் ஒன்று. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து பின்னர் அம்மனை ஆலயபீடத்தில் அமர்த்துகின்றார்கள். சிவாச்சாரியார்கள் பூஜிக்கும் இக்கோயிலில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

பச்சைப் பட்டினி விரதம்

வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத ஒரு மிகப் பெரிய சிறப்பு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருப்பது இந்த ஒரு தலத்தில்தான். இதற்கு பச்சைப் பட்டினி விரதம் என்று பெயர். இந்த விரதத்தின் போது அம்பாளுக்கு ஒருவேளை மட்டும் அதாவது மாலை பூஜையின் போது மட்டும் இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு, வெள்ளரிப் பிஞ்சு ஆகியவற்றை படைக்கிறார்கள். 27 நாட்கள் இந்த விரதம் நடைபெறும்.

மார்கழி ஞாயிறுகளில் பூச்சொரிதல் விழா நடைபெறும். மாசி மாதக் கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழா அற்புதமாக இருக்கும். அப்பொழுது அம்மன் மீது மலை மலையாக பூக்களைக் கொட்டுவார்கள். பற்பல திருவிழாக்கள் நடக்கும் இந்தத் தலத்தில் முடி காணிக்கை, ஆடு, மாடு, கோழி காணிக்கை, அக்னி சட்டி எடுத்தல், ஆகிய நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றுவதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றார்கள்.

சித்திரை மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழாவின் போது பக்தர்கள் ஆற்றில் நீராடி ஈர உடையுடன் அந்த ஆற்றுநீரை எடுத்துக் கொண்டு வந்து அம்மனின் பாதத்தில் ஊற்றி குளிர வைக்கிறார்கள். அன்றைய தினம் அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தேர்த்திருவிழாவின் எட்டாம் நாள் அன்று சமயபுரத்தாள் இனாம் சமயபுரத்துக்குச் சென்று ஒருநாள் இரவு தங்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஒன்பதாம் நாள் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வருவார். சமயபுரம் செல்பவர்கள் நேரடியாக சமயபுரம் மாரியம்மனை வணங்குவதைவிட, அங்கு இருக்கும் ஆதிசமயபுரத்தாளை வணங்கிவிட்டு மாரியம்மனை தரிசிப்பது வழக்கம்.

பிரார்த்தனை

மகாளய அமாவாசையில் இங்கு ஒரு சிறப்பு. அம்மனின் முன் புதிய ஊஞ்சல் தட்டு ஒன்றில் பச்சரிசி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, காய்கறிகள் வைத்து பூஜை செய்கிறார்கள். அதை பிறகு ஒருவருக்குத் தானமாக அளிக்கின்றார்கள் இதன் மூலமாக முன்னோர்கள் வழிபாட்டில் இருக்கும் குறைபாடு நீங்கி பித்ருக்கள் ஆசீர்வாதம் கிடைக்கும். கண் நோய், உடலில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகள் நீங்குவதற்காக நேர்த்திக் கடன் செலுத்துகின்றார்கள்.

அந்தந்த உருவத்தைச் செய்து அதைச் சமர்ப்பிக்கின்றார்கள். சிலர் ஈர உடையுடன் அங்கப் பிரதட்சணம் செய்வதும், வயிற்றில் மாவிளக்கு தீபம் ஏற்றி அம்மனை வழிபடுவதும் நேர்த்திக்கடனாக நடக்கிறது. பெண்களின் தாலி பாக்கியத்துக்காக தாம்பூலப் படையல், கண்ணாடி போன்ற மங்களப் பொருள்களை தானம் அடிக்கிறார்கள். நோய் உள்ளவர்கள் இங்கு வந்து அம்மனை வணங்கி தொடர் வழிபாடு செய்வதற்காகத் தனி மண்டபம் உள்ளது.

பிரார்த்தனைச் சீட்டு எழுதும் பழக்கமும் இந்த ஆலயத்தில் உண்டு. குறைகளை ஒரு சீட்டில் எழுதி வேப்பமரத்தில் கட்டிவிட்டு பிரார்த்தனை செய்கின்றார்கள். குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் கரும்பு தூளி எடுத்தல் என்ற பிரார்த்தனையை நடத்துகின்றார்கள். கருவுற்று சீமந்தம் முடிந்தபின் அந்த சீமந்தப் புடவை வேஷ்டியை பத்திரமாக வைத்திருந்து, குழந்தை பிறந்த ஆறாவது மாதம் இந்தச் சடங்கை செய்கிறார்கள். கரும்புத் தொட்டில் தயார் செய்து மஞ்சளில் நனைத்த அந்தப் புடவை வேட்டியை தொட்டிலாகக் கட்டி குழந்தையைக் கிடத்தி பிரகாரத்தை தாய் தந்தையர் வலம் வருகின்றார்கள்.

திருவிழாக்கள்

13 நாட்கள் சித்திரை பெருவிழா நடக்கும். சித்திரை முதல் செவ்வாய்க்கிழமை தேர், அடுத்து வரும் வெள்ளிக் கிழமை தெப்பம்.வைகாசியில் வீதிவலம், ஆடியில் பூரம், புரட்டாசியில் நவராத்திரி, தைப்பூசத்தில் கொள்ளிடம் தீர்த்தம், மாசியில் பூச்சொரிதல், பங்குனியில் பத்து நாள் உற்சவம்.என எல்லா மாதங்களுமே திருவிழா மாதங்கள்தான். ஏன்? எல்லா நாட்களுமே திருவிழாவைப் போல்தான். தமிழ்நாட்டில் அதிக வருமானம் பெறும் கோயில்களில் சமயபுரமும் ஒன்று. அதற்குக் காரணம் அம்பிகையின் அருள்பலம்.

1. அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைதிறந்திருக்கும் – திருவிழாக்காலங்களில் மாறுதலுக்குஉட்பட்டது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் அதிகம் இருக்கும்

2. எங்கே எப்படிச் செல்வது?

திருச்சிராப்பள்ளி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருச்சி நகர சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தும், மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்தும், நகரப் பேருந்துகள் திருக்கோயில்வரை வந்து செல்கின்றன.

3. பூஜை நேரங்கள்

1. உஷக்கால பூஜை – காலை 6:00 முதல் 6:15 வரை.
2. காலசந்தி பூஜை – காலை 8:00 முதல் 8:15 வரை.
3. உச்சிக்கால பூஜை – காலை 12:00 முதல் பிற்பகல் 12:15 வரை.
4. சாயரட்சை பூஜை – மாலை 6:00 முதல் 6:15 வரை.
5. இரண்டாம்கால பூஜை – இரவு 8:00 முதல் 8:15 வரை.
6. அர்த்தஜாம பூஜை – இரவு 9:00 முதல் 9:15 வரை.

4. அநீதிகளையும், தீமைகளையும் அழித்து, தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், சமயபுரத்திலுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்.

5. பங்குனி கடைசி ஞாயிறு அல்லது சித்திரை முதல் ஞாயிறு சமயபுரம் மாரியம்மன் கண்ணனூரில் உள்ள ஆதி மாரியம்மனைக் காண வருகிறாள். அப்பொழுது ஊர் மக்கள் இவ்வூரிலிருந்து திருமணம் முடிந்து சென்ற தாய் வீட்டிலிருந்து துணிமணிகள் எடுத்து அனுப்புகின்றனர்.

6. மொட்டை அடித்தல், அர்ச்சனை அபிஷேகம், காது குத்தல், தங்கரதம் எடுத்தல், அலகு குத்தல், தீச்சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம், கரும்புத் தொட்டில், நெல் காணிக்கை, மாவிளக்கு எடுத்தல், ஆடு, மாடு, கோழி தானியங்கள் செலுத்துதல், என பல நேர்த்திக்கடன்கள் இங்கு உண்டு.

முனைவர் ஸ்ரீராம்

The post சங்கடங்கள் தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன் appeared first on Dinakaran.

Related Stories: