நடராஜரின் ஆனந்தத் தாண்டவம்

ஆருத்ரா தரிசனப் பெருவிழா – 3-1-2026

முன்னுரை

நம் நாட்டின் தொன்மையான இரண்டு சமயங்கள் சைவமும் வைணவமும். சைவர்களின் தலைமைக்கோயில் தில்லைத் திருத்தலம் என்று அழைக்கப்படும் சிதம்பரம். இதனை பூலோக கைலாசம் என்பார்கள். வைணவத்தில் தலைமைக் கோயில் திருவரங்கம். இதனை பூலோக வைகுந்தம் என்று அழைப்பார்கள். இந்த இரண்டும் தமிழ்நாட்டிலே இருப்பது மிகப்பெரிய சிறப்பு. இரண்டு பெருமான்களையும் ராஜா என்கின்ற அடைமொழியோடு அழைப்பார்கள். சிதம்பரத்தில் நடராஜன். திருவரங்கத்தில் ரங்கராஜன். சிதம்பரத்தில் இன்னொரு சிறப்பு இங்கே கோவிந்த ராஜனும் இருக்கின்றார். பூலோக கைலாயமான தில்லைத் திருத்தலத்தில் உள்ள மூர்த்தங்களின் சிறப்பையும், ஆனிமாதம் நடைபெறும் ஆனித் திருமஞ்சன வைபவத்தின் சிறப்பையும் காண்போம்.

ஆனியும் மார்கழியும்

ஒரு வருடத்தை இரண்டாகப் பிரிப்பார்கள். ஒன்று தட்சிணாயம். மற்றொன்று உத்தராயனம். உத்தராயனம் என்பது தேவர்களின் பகல் காலம். தக்ஷிணாயனம் என்பது அவர்களின் இரவுக்காலம். ஒரு நாள், பகல் இரவு என்று இரண்டு பகுதிகளாக இருப்பது போல, ஒரு ஆண்டு இரண்டு பகுதிகளாக இருக்கிறது. இதில் இன்னொரு சுவையான விஷயம் என்ன என்று சொன்னால். மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அந்தக் கணக்கின் அடிப்படையில் ஆறு மாத காலத்தை தேவர்களின் பகல் காலமாகவும், அடுத்த ஆறு மாத காலத்தை தேவர்களின் இரவு காலமாகவும் நம்முடைய சமயங்கள் சொல்லும். இதில் தேவர்களின் பகல்காலமான உத்தராயணம் தை மாதத்தில் ஆரம்பித்து ஆனி மாதத்தோடு நிறைவு பெறும். தக்ஷிணாயணம் எனப்படும் தேவர்களின் இரவுக் காலம் ஆடியில் துவங்கி மார்கழியில் நிறைவு பெறும். உத்தராயணத்தில் கடைசி மாதம் ஆனி தட்சிணாயணத்தின் கடைசி மாதம் மார்கழி. இந்த இரண்டு மாதங்களும் சிவபெருமானுக்கு முக்கியமான மாதங்கள். ஆனியில் ஆனித் திருமஞ்சனமும், மார்கழியில் ஆதிரை தரிசனமும் உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ளும் உன்னத விழாக்கள்.

சிவபெருமான் அபிஷேகப் பிரியன்

ஆனித் திருமஞ்சனம் என்பது பல சிவாலயங்களிலும் நடைபெறுவதுதான் என்றாலும், சிதம்பரத்தில் தான் அது விசேஷம். எப்படி வைணவத்தில் வைகுண்ட ஏகாதசி எல்லா தலங்களிலும் நடந்தாலும் ரங்கத்தில் பிரதானமாக இருப்பது போல, சைவத்தில் ஆனித் திருமஞ்சனம் எல்லா ஆலயங்களிலும் நடைபெற்றாலும், சிதம்பரத்தில் மிக விசேஷமாக நடைபெறும். சிவபெருமான் அபிஷேகப் பிரியன் என்பார்கள். அவருக்கு பிடித்தமான இந்த அபிஷேகங்களில் ஒன்றுதான் ஆனித் திருமஞ்சன விழாவாக விரிகிறது. குறிப்பாக, சிதம்பரம் தில்லை நடராஜர் பெருங்கோயிலில் நடைபெறும் இரண்டு வருடாந்திரப் பெருவிழாக்களில் ஆனித் திருமஞ்சனமும் மார்கழி திருவாதிரை தரிசனமும் மிகச் சிறப்பு பெற்றவையாகும்.

ஆறுகாலை பூஜையும் ஆறு அபிஷேகங்களும்

ஓர் நாளை வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் என்று ஆறு பொழுதுளாகப் பிரித்தனர். இந்த ஒவ்வொரு பொழுதும் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் வேறு வேறு கால அளவாக இருக்கும். மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அந்த வகையில் மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியல் நேரம்; மாசி மாதம்- காலைப் பொழுது; சித்திரை மாதம்- உச்சிக் காலம்; ஆனி மாதம்- மாலை நேரம்; ஆவணி மாதம் – இரவு நேரம்; புரட்டாசி மாதம் அர்த்த ஜாமம்; இதை அடிப்படையாக கொண்டுதான் ஆலயங்களில் தினமும் ஆறுகால பூஜை நடத்துகிறார்கள். இந்த ஆறுகாலங்களில் நடக்கும் பூஜைகளும், வழிபாடுகளும் ஆகம விதிகளின்படி முக்கியமானவை. ஆறு காலத்தைக் குறிக்கும் வகையில் சிவாலயங்களில் நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறுதடவை அபிஷேகம் செய்வார்கள்.

மார்கழி திருவாதிரை

இதில் மூன்று அபிஷேகங்கள் திதியை அனுசரித்தும், மூன்று அபிஷேகங்கள் நட்சத்திரத்தை அனுசரித்தும் நடத்துகிறார்கள். மாசி சதுர்த்தசி, ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி ஆகிய நாள்களில் திதியை வைத்து அபிஷேகம் நடத்துகிறார்கள். சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை ஆகிய நாள்களில் நட்சத்திரத்தை வைத்து அபிஷேகம் நடத்துகிறார்கள். இந்த ஆறு அபிஷேகங்களில் மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம் ஆகிய இரு நாட்களில் நடைபெறும் அபிஷேக பூஜைகள் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அதிலும் ஆனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சனம் மிக மிகச் சிறப்பு வாய்ந்தது. ஆனி பவுர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவதால் இந்த விழாவுக்கு “ஆனி உத்திரம்” என்றும் ஒரு பெயர் உண்டு.

சிவபெருமானின் நடராஜ மூர்த்தம்

இறைவன் உருவமாக இருக்கின்றான். அருவமாக இருக்கின்றான். அருவுருவமாக இருக்கின்றான். பிரபஞ்சம் முழுவதும் பரந்து இருக்கின்றான். பிரபஞ்சத்தை இயக்குபவனாக இருக்கின்றான். சைவத்தில் சிவமூர்த்தங்கள் பல உண்டு. அதில் அற்புதமான உருவம் தான் நடராஜரின் திருவுருவம். சிதம்பரத்தில் மிகப்பெரிய விசேஷம், நடராஜரே இங்கே மூலமூர்த்தியாக இருக்கின்றார். எந்த இடத்திலும் மூலமூர்த்தி உற்சவ மூர்த்தியாக வெளியே வர மாட்டார். ஆனால் சிதம்பரம் இதிலும் விசேஷம். இங்கே நடராஜர் தன்னுடைய ஆஸ்தானத்தை விட்டு இரண்டு முறை வெளியே வந்து, திருமஞ்சனம் கண்டருளி, மறுபடியும் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டு சித்சபைக்கு எழுந்தருளும் காட்சி சிதம் பரத்திற்கே உரிய மாட்சி. இது வேறு எந்தத் திருத்தலத்திலும் இல்லாதது. அதுவும் பஞ்சபூதத் தலங்களில் சைவர்களுக்கு தலைமை ஆலயம் என்றும் கோயில் என்ற பொதுப் பெயரில் வழங்கப்படும் திருத்தலத்தில், சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜமூர்த்தி காட்சி தருவதும் திருமஞ்சனம் கண்டருள் வதும் அற்புதமான அனுபவம்.

மனிதப் பிறவியும் வேண்டும்

நடராஜ மூர்த்தியின் திருவுருவம் பார்க்கப் பார்க்க பார்க்க மனதில் ஆனந்தத்தைத் தரும். அவர் ஆடுவதே ஆனந்தத் தாண்டவம் அல்லவா! இத்தனை அழகான நடராஜரின் திருவுருவம் வேறு எங்கும் காணக்கிடைக்காத அற்புதம். பொதுவாக அருளாளர்கள் மனிதப் பிறவியை விரும்ப மாட்டார்கள். திரும்பத் திரும்ப இந்த கர்ம பூமியில் பிறந்து, வாழ்க்கையில் உழன்று, நோய், நொடி, பசி என்று நொந்து வாழ வேண்டுமா என்று நினைப்பார்கள். ஆனால் சிதம்பரத்திலே வந்து நடராஜரின் திருவுருவத்தைத் தரிசித்த பிறகு, திருநாவுக்கரசர் நினைக்கின்றார் ‘‘அடடா, இந்த மனிதப் பிறவியை எடுத்ததால் அல்லவோ, இங்கே சிதம்பரத்திற்கு வந்து சித் சபையிலே ஆனந்த நடனம் அருளுகின்ற நடராஜரை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது. எனவே இறைவா, உன்னைக் காணும் பாக்கியம் பெற வேண்டும் என்பதால், நான் பிறவி வேண்டாத நிலையை வேண்டேன். எனக்கு மனிதப் பிறவியும் வேண்டும்” என்றார்.

இத்தனை அழகா நடராஜப் பெருமானுக்கு?

திருநாவுக்கரசர் நடராஜப் பெருமானின் திருமுகத்தைப் பார்க்கின்றார். அடடா எத்தனை அழகு. எத்தனை அழகு. வளைத்த புருவம், என் மனதை வளைக்கிறதே! திருவாயைப் பார்க்கின்றார். சிவந்த அதரம் அப்படியே புன்முறுவலோடு விரிகிறது. கொவ்வைச் செவ்வாய். மேனியோ பவளம் போன்ற சிவப்பு. அதிலும் கிண்கிணி விரித்தது போல அந்த சிரிப்பு ஒரு கோடு போல் விரிகிறது. இதனைக் குமிழ்சசிரிப்பு என்று கொண்டாடுகிறார். திரு உடம்பில் பால்போல வெண்மையான திருநீறு பூசியிருக்கிறான். சிவந்தமேனியில் வெண்ணீறு அணிந்து அழகாக காட்சி தருகின்றான். அப்படியே மேலே பார்க்கிறார். பனித்த சடை. பனித்த என்றால் ஈரம் என்று பொருள். அவருடைய நெஞ்சில் ஈரம் இருப்பதைப் போலவே அவனுடைய சடையிலும் ஈரம் இருக்கிறது. காரணம் அங்கே கங்கை அல்லவா அமர்ந்திருக்கிறாள்.

அற்புத நடனம்

இவ்வளவு அழகானவன் நின்று கொண்டிருந்தால் என்ன அழகு இருக்க முடியும்? அவனுடைய திருவடியைப் பாருங்கள். பொற்பாதங்கள். அதை எடுத்துத் தூக்கி அற்புதமான திருநடனத்தைக் காண்பிக்கின்றார். இனித்தமுடன் எடுத்த பொற்பாதம், நம் நெஞ்சைக் கவர்கிறது. பொதுவாக நடனம் அழகு. ஆடுகின்றவர் அழகாக இருந்தால், அந்த நடனம் எத்தனை சோபிக்கும்? அத்தனை அழகும் திரண்டு இங்கே நடராஜரின் ஆனந்த நடனக் காட்சியாக இருக்கிறது. இந்தக் காட்சியைத்தானே அண்டாதி அண்டங்களில் உள்ள அத்தனை பேரும் பார்க்கக் காத்திருந்தனர். அந்தக் காட்சி இந்த பூமியிலே கிடைக்கிறது என்று சொன்னால், இந்த பூமியிலே பிறக்கும் பிறவியை நான் ஏன் வெறுக்க வேண்டும்? இதோ அழகான தேவாரம்.

நடராஜனின் தரிசனம்

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

பொருள்:வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடி
களையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும்.

ஆகாயத் தலத்தில் ஆருத்ரா தரிசனம்

பஞ்ச பூதங்களில் ஆகாயத் தலம் சிதம் பரம் பஞ்சசபைகளில் பொற்சபை இது. அங்கே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந் தொழில் களையும் ஆனந்த தாண்டவமாகக் காட்டியருளும்  சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தி. கோயில் என்றால் சைவத்தில் சிதம்பரம்தான் கோயில்.இறைவன் அருள் எல்லைக்கு ஓர் இருப்பிடம் தான் தில்லைத் திருத்தலம்.

தீர்த்தம் என்பது சிவகங்கையே
ஏத் தரும் தலம் எழில் புலியூரே
மூர்த்தி அம்பலனது திருவுருவே

என மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறப்பு மிக்கது தில்லைத் திருக்கோயில். உலகத்தின் இதயமாக விளங்கும் திருத்தலம் என்பார்கள்.

இத்தலத்திற்குத்தான் எத்தனை பெயர்கள்?

மன்று, அமலம், சத்து, உம்பர், இரண்மயகோசம், மகத், தனி, புண்டரிகம், குகை, வண்கனம், சுத்தம், பரம், அற்புதம், மெய்ப் பதம், கழுனாவழி, ஞானசுகோதயம், சிதம் பரம், முத்தி, பரப்பிரம்மம், சபை, சத்தி, சிவாலயம், பொது, சிற்றம்பலம், புலியூர், பெரும்பற்றப்புலியூர் முதலிய பல பெயர்கள் உள்ளன. நடராஜ மூர்த்திக்குத்தான் எத்தனை விழாக்கள்? அதில் முக்கியமான விழா ஆனித் திருமஞ்சனம். மஞ்சனம் என்றல் நீராட்டம். “மங்கல மஞ்சன மரபி னாடியே” என்பது கம்பராமாயணம். சிவன் அபிஷேகப் பிரியன் என்பதால். அவனுக்கு குளிரக் குளிர, நீராட்டம் நடப்பதை நம் கண்களால் காணும் பொழுது, நம்முடைய உள்ளம் குளிர்கிறது. எண்ணங்கள் நிறைகிறது. அதன்பிறகு நடப்பதெல்லாம் நன்மையாகவே நடக்கிறது. அதனால் தானே உலகமெங்கும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், தில்லைத் திருத்தலத்தில் ஆனித்திருமஞ்சன நன்னாளிலே கூடுகிறார்கள்.

நடராஜரின் தேர் ஆடும்
நம் மனமும் சேர்ந்து ஆடும்

முத்துத்தாண்டவர் அனுபவித்து
பாடுவதைப் பாருங்கள்.

ஆர நவமணி மாலைகளாட
ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணி கொன்றை மலர்த்தொடையாடச்
சிதம்பரத்தேர் ஆட
பேரணி வேதியர் தில்லைமூவாயிரம் பேர்களும்
பூசித்துக் கொண்டு நின்றாட
காரணி காளி எதிர்த்து நின்றாட
கனகசபை தனிலே
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண
கண்ணாயிரம் வேண்டாமோ.

முதலில் பஞ்ச மூர்த்திகளின் தேர் ரதவீதிகளில் கொடியோடு அசைந்து வரும். அதற்குப் பிறகு அம்மனின் தேர். அதற்குப்பிறகு ஆனந்த நடராஜ மூர்த்தியின் அற்புதத் தேர். அந்தத் தேர் இழுக்கும்போது அதில் கட்டப்பட்டு இருக்கக்கூடிய கொடிகளும் வண்ணச் சிலைகளும் அசைந்து அசைந்து மயக்கும். அந்தத் தாளவாத்தியம் நம்முடைய மனதை கொள்ளை கொள்ளும். ஆடத் தெரியாதவர்களின் கால்கள்கூட நடனமாடத் தொடங்கும். ஆருத்ரா தரிசனம் மன அமைதியும், உடல் வலிமையும் தரக்கூடிய மகத்துவம் வாய்ந்தது. இந்தப் புண்ணிய தினத்தில் சிவாலயங்களுக்குச் சென்று இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும். சிதம்பரம், உத்தரகோசமங்கை உள்பட சில தலங்களில் நடைபெறும் நடராஜர் அபிஷேகம் புகழ் வாய்ந்தது. இந்தத் தலங்களில் அன்றைய தினம் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டு வந்து நடராஜரை வழிபடுவார்கள். அபிஷேக, அலங்காரம் முடிந்த பிறகு நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஷோடச ஆராதனைக் காட்டுவார்கள். சிவ-சக்தி இருவரது பேரருளும் நமக்குக் கிடைக்கும். பஞ்ச சபைகளான திருவாலங்காடு ரத்தின சபை, சிதம்பரம் பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், திருநெல்வேலி தாமிர சபை, குற்றாலம் சித்திர சபை இவற்றில் இந்த அபிஷேகங்களைத் தரிசிப்பது மிகவும் சிறப்பு.

Related Stories: