ஒரு பொறுப்புள்ள ஓட்டுநர், தனது வாகனத்தை இயக்கும் முன் அவசரமாக பயணத்தைத் தொடங்குவதில்லை. அவர் முதலில் தன்னைச் சுயமாக ஆய்வு செய்து கொள்கிறார். உடல் நலம் சரியிருக்கிறதா? மனம் அமைதியாக இருக்கிறதா? கவனம் சிதறிய நிலையில் உள்ளேனா? என்ற கேள்விகளைத் தன்னிடமே கேட்கிறார். அதன்பின்புதான் வாகனத்தைச் சோதிப்பார். எரிபொருள் போதுமா? பிரேக் சரியாக செயல்படுகிறதா? டயரில் காற்று சரியான அளவில் உள்ளதா? எல்லாம் ஒழுங்காக உள்ளதா என்று உறுதி செய்த பின்பே அவர் பயணத்தைத் தொடங்குகிறார். இந்தச் சுய பரிசோதனையே பாதுகாப்பான பயணத்தின் அடிப்படை ஆகும். இறைமக்களே, அதேபோலவே தேவன் நம்மை இந்த ஆண்டின் இறுதிவரை பாதுகாத்து வழிநடத்திக் கொண்டு வந்துள்ளார்.
இது வெறும் காலண்டரில் ஒரு தேதி மாறும் நிகழ்வு அல்ல; மாறாக, நம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதற்கான தேவன் தந்த ஒரு அருமையான வாய்ப்பு. கடந்த ஆண்டு முழுவதும் நாம் எந்த பாதையில் நடந்தோம்? எந்த எண்ணங்களோடு வாழ்ந்தோம்? எந்த முடிவுகளை எடுத்தோம்? என்பதை சிந்திக்க வேண்டிய தருணமே ஆண்டிறுதி.ஓட்டுநர் வாகனத்தின் கண்ணாடியைப் பார்த்து பாதையைச் சரி பார்க்கிறதுபோல், இறைமக்களாகிய நாம் தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தை ஒரு கண்ணாடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். வேதாகமம் நம்மை அலங்கரிக்க அல்ல, நம்மை வெளிப்படுத்தவே எழுதப்பட்டுள்ளது. “நான் சரியான பாதையில்தான் பயணிக்கிறேனா? என் மனநிலை தேவனுக்கு உகந்ததாக உள்ளதா? என் வார்த்தைகள், செயல்கள், எண்ணங்களில் நேர்மை உள்ளதா?” என்ற கேள்விகளுக்கான நேர்மையான பதிலை வேதாகமத்தின் முன் நின்றால் மட்டுமே பெற முடியும்.
எனவே, புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்குமுன், நாம் நம்மையே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். என் உள்ளத்தில் கசப்பு இருக்கிறதா? பொறாமை, கோபம், அகந்தை, மன்னிக்காத மனம் போன்றவை என்னுள் வேரூன்றியுள்ளதா? வெளிப்படையாக பக்தியாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் இரட்டை வாழ்க்கை வாழ்கிறேனா? தேவனோடு எனக்குள்ள உறவு ஆழமாக இருக்கிறதா அல்லது வெறும் பழக்கமாக மாறிவிட்டதா? இத்தகைய கேள்விகளைத் தைரியமாக நம்மிடமே கேட்க வேண்டும்.
ஒரு வாகனத்தில் சிறிய கோளாறுகூட பெரிய விபத்துக்கு வழிவகுக்கும். அதுபோல, நம் வாழ்க்கையில் திருத்தப்படாத சிறிய பாவங்கள், கவனிக்கப்படாத தவறுகள், நாளடைவில் பெரிய வீழ்ச்சிக்குக் காரணமாக மாறலாம். ஆகவே, புதிய ஆண்டுக்குள் நுழையும் முன், நம் மனதைத் தூய்மையாக்க வேண்டும். தேவனுடைய சமுகத்தில் தாழ்மையுடன் வந்து, “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்’’ (சங்கீதம் 139:23) என்று ஜெபிப்பதே இறைமக்களின் அழகான அணுகுமுறை.தேவன் நம்மை குற்றவாளியாக்க அல்ல, சீர்படுத்தவே நம்மை ஆராய்கிறார். நாம் மனந்திரும்பி தேவனிடம் வரும்போது, அவர் மன்னிக்கத் தயங்குவதில்லை. அதே நேரத்தில், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடமும் சமாதானம் செய்து கொள்ள வேண்டியது நம் பொறுப்பு. இதுவே புதிய ஆண்டுக்கான ஆரோக்கியமான தொடக்கம்.
இந்த ஆண்டின் இறுதியில், நாம் ஒவ்வொருவரும் தேவனாகிய கண்ணாடியின் முன் நின்று நம்மையே ஆராய்வோம். அவசரமின்றி, அலட்சியமின்றி, நேர்மையோடு சுய பரிசோதனை செய்வோம். அப்பொழுதுதான் புதிய ஆண்டு, ஒரு வெறும் புதிய தேதியாக இல்லாமல், ஒரு புதிய வாழ்க்கையாக, ஒரு புதிய பயணமாக மாறும். தேவனுடைய கிருபையும் சத்தியமும் நம்மை வழிநடத்த, தூய மனதோடு, சீரான வாழ்க்கையோடு, புதிய ஆண்டுக்குள் நுழைவோம். அதுவே பாதுகாப்பானதும் ஆசீர்வாதமானதுமான ஆவிக்குரிய பயணம் ஆகும்.
அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள்!- அருள்முனைவர் பெ.பெவிஸ்டன்.
