திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம், காக்களூர் தொழிற்பேட்டை தண்ணீர்குளம் கிராமத்தில் அரசு சொந்தமான சிட்கோ பட்டா நிலமான பொது பயன்பாட்டு மனை எண்கள் 10 மற்றும் 11 தோராயமாக 73 சென்ட் நிலத்தினை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு எண்.CMA 16/2018 16/2018 தொடுக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கை விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. அதன்பேரில், TN PP Act 1975ன்படி 27.12.2023 காலை 11 மணியளவில் ஆக்கிரப்பாளரிடமிருந்து சிட்கோ நிறுவனத்தால் திருவள்ளூர் வருவாய் ஆய்வாளர், சிட்கோ கிளை மேலாளர், சிட்கோ இளநிலை பொறியாளர், திருவள்ளூர் தாலுகா காவல் உதவி ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் கையப்படுத்தப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்ற ஆணையின்படி 27.12.2023 அன்று வருவாய் துறை, காவல் துறை மற்றும் சிட்கோ அதிகாரிகளால் நிர்ணயம் செய்த எல்லை கற்களை ஆக்கிரமிப்பாளர் அப்புறப்படுத்திவிட்டு 3.3.2026 அன்று மீண்டும் பழைய மண் சுவர் கழிவுகளை டிராக்டர் மூலம் அரசு சிட்கோவிற்கு சொந்தமான நிலத்தில் கொட்டி வைத்து மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தார். இந்த தகாத நடவடிக்கையினை நிறுத்தும்படி நேரில் சென்று கூரிய சிட்கோ அதிகாரிகளிடம், அந்த இடத்தை மீண்டும் அளக்க வேண்டும் என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து, 13.3.2026 அன்று பகல் 12 மணியளவில் நில அளவை உதவி இயக்குநர், தலைமை நில அளவையர், வருவாய் அலுவளர், சிட்கோ கிளை மேலாளர், சிட்கோ உதவி பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை நில அளவையர் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பாளர் முன்பாக மீண்டும் நில அளவை பணி மேற்கொள்ளப்பட்டு, ஆக்கிரமிப்பாளரால் அப்புறப்படுத்தப்பட்ட எல்லை கற்கள் மீண்டும் நடப்பட்டது. அப்போது, ஆக்கிரமிப்பாளர் சிட்கோ அலுவலர்களை தகாத வார்த்தைகளாள் பேசி, கொலை மிரட்டல் விடுக்கும் விதத்தில் மிரட்டியுள்ளார். ஆனாலும் வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை, சிட்கோ நிறுவன அலுவலர்களால் அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை ஆக்கிரமிப்பாளரிடமிருந்து மீட்கப்பட்டது.
