ஈரோடு: சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்துவதற்காக, பெங்களூரில் இருந்து 4,400 புதிய வகை வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஈரோடு கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தல் செலவினத்தை குறைக்கும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலை ஒரே சமயத்தில் நடத்தும் பட்சத்தில், ஒரே நேரத்தில் இரு தேர்தலுக்கும் வாக்களிக்கும் வகையில், பெங்களூர் பெல் நிறுவனம் புதியதாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரித்து வருகிறது.
இந்த புதிய இயந்திரங்களை, பரீட்சார்த்த முறையில் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் எதிர் வரும் தேர்தலில் பயன்படுத்துவதற்காக, பெங்களூரில் இருந்து 4,400 புதிய வகை வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று காலை ஈரோடு வந்தது. இந்த இயந்திரங்களை பெங்களூர் சென்ற ஈரோடு மாநகராட்சி குழுவினர், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வந்திருந்தனர். தொடர்ந்து, புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு, ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான தமயந்தி பாபு சேட் திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்துவதற்காக, பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட் என புதிய வகை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 4,400 வந்துள்ளது. தற்போது பயன்படுத்தும் இயந்திரத்தில் 16 பட்டன்கள் இருக்கிறது. ஆனால், புதிய இயந்திரத்தில் 15 பட்டன்களே உள்ளன. இவற்றை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பெல் நிறுவன பொறியாளர்கள் விரைவில் பயிற்சி அளிக்கவுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
