கோடை வெயிலை சமாளிக்க கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

*உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்

கோபி : கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் கொளுத்தும் வெயிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தஞ்சமடைந்தனர்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும்.

சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் விழுவதாலும், ஒரே நேரத்தில் பலர் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதால் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம்.

வழக்கமாக மார்ச் மாத இறுதியில் தொடங்கும் கோடை வெயில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலேயே அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது.

இதனால் கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த இரு வாரங்களாக கொடிவேரி அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், நேற்று முன்தினம் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் கொடிவேரி அணை பகுதியில் அருவிபோல் தண்ணீர் கொட்டியதால் நேற்று இங்கு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அணையில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து அணையின் மேல் பகுதியில் குடும்பத்துடன் பரிசல் பயணமும் மேற்கொண்டதோடு, பூங்காவில் உற்சாகமாக விளையாடியும், கடற்கரை போன்ற மணல் பரப்பில் அமர்ந்தும் விடுமுறையை களித்தனர்.

The post கோடை வெயிலை சமாளிக்க கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: