ஒன்றிய அரசு எல்பிஜி சேமிப்பு குடோன்களை அமைக்காததால் 3 நாளிலேயே கடும் தட்டுப்பாடு: 140 கோடி மக்களை தவிக்க விட்ட மோடி

* வீதி வீதியாக மக்கள் சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு அலையும் அவலம்
* ஓட்டல்கள், தொழில்நிறுவனங்களை மொத்தமாக மூடும் அபாயம்

ஒரு வளைகுடா போர் ஒட்டுமொத்த நாட்டையே நடுத்தெருவில் கொண்டு வந்து விட்டு விட்டது. இந்த போருக்கும் இந்தியாவுக்கும் எந்தவித நேரடி தொடர்பும் இல்லை. ஆனால் போரினால் நேரடியான பெரிய பாதிப்பு இந்தியாவுக்கு வந்து விட்டது. பெட்ரோல், டீசல் போடுவதற்கு வாகனங்களை எடுத்துக்கொண்டு பெட்ரோல் பங்குகள் முற்றுகையிடப்பட்டுள்ளன. சமையல் காஸ் சிலிண்டர்களை தூக்கிக்கொண்டு வரிசை கட்டி மக்கள் நிற்கிறார்கள். இந்தியாவில் காஸ் கையிருப்பு உடனே கரைந்து விட்டது. இதனால் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பல ஓட்டல்கள் விறகு அடுப்புக்கும், சூரிய அடுப்புக்கும் மாறி வருகின்றன.

பல இடங்களில் உணவு தட்டுப்பாடு கூட உருவாகும் நெருக்கடி ஏற்பட்டு விட்டது. முற்றிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை நம்பியதால்தான் இந்த பிரச்னை. ஏன் இந்த நெருக்கடி?. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அதற்கான கட்டமைப்பு இல்லையா? எதனால் இந்த பதற்றம்? எப்படி உருவானது என்றெல்லாம் ஆராய்ந்தால் எந்தவித திட்டமிடலும் இல்லாத ஒன்றிய அரசால் இது வந்துள்ளது வெளிப்படை. இந்தியா உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு(LPG – Liquefied Petroleum Gas) நுகர்வோர் நாடுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் எல்பிஜி பயன்பாடு மிக வேகமாக உயர்ந்துள்ளது. காரணம் பிரதமர் மோடி. பிரதம மந்திரியின் இலவச சமையல் காஸ் இணைப்பு(பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா) திட்டம் பட்டிதொட்டியெல்லாம் சமையல் காஸ் அடுப்பு பயன்பாட்டை ஊக்குவித்தது. இதனால் புதிதாக 10 கோடி குடும்பங்கள் சமையல் காஸ் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

ஆனால் இந்த வேகமான வளர்ச்சிக்கு இணையாக எல்பிஜி சேமிப்பு கட்டமைப்பு வளரவில்லை என்பதே பல நிபுணர்கள் முன்வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு. இந்தியா உலகில் பெரிய எல்பிஜி சந்தையாக இருந்தாலும், அதன் அவசரகால சேமிப்பு மிகவும் குறைவாக இருப்பது ஒரு சவாலாக இப்போது உருவெடுத்துள்ளது. பெட்ரோல், டீசல் சேமிப்பு 74 நாட்கள் வரை தாங்கும். அப்படி இருந்தும் வீதிவீதியாக பெட்ரோல் பங்குகளை தேடி மக்கள் குவிந்து விட்டார்கள். பலர் பெரிய கேன்களில் டீசல் பிடித்துச்சென்றதைக்கூட காணமுடிந்தது. ஆனால் எல்பிஜி பயன்பாடு அப்படி இல்லை.

உலகம் முழுவதும் பல்வேறு வளர்ந்த நாடுகள் கூட 50 சதவீதம் சமையல் காஸ் மற்றும் 50 சதவீதம் வர்த்தக காஸ் சப்ளை செய்து வந்தனர். ஆனால் இந்தியாவில் பிரதமர் மோடியால் 87 சதவீதத்திற்கு மேல் சமையல் காஸ் பயன்பாடு அதிகரித்து விட்டதால் 3 நாட்களில் முற்றிலும் எல்பிஜி முடங்கி பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டது. இந்தியாவில் தற்போதுள்ள எல்பிஜி இருப்பு மூலம் 20 முதல் 22 நாட்கள் வரை சமாளிக்கலாம் என்கிறார்கள். ஆனால் யதார்த்தம் அப்படி இல்லை. அதனால் தான் இத்தனை பதற்றம்.

கிராமப்புறங்களில் எல்லாம் சமையல் காஸ் இணைப்பை இலவசமாக கொடுத்து பயன்பாட்டை ஊக்குவிக்கும் போது பெரிய அளவில் எல்பிஜி இருப்பை சேமிக்கும் கட்டமைப்பையும் மோடி அரசு தொடங்கி இருக்க வேண்டும். அதில் இதுவரை எந்தவித கவனமும் செலுத்தவில்லை. பெரிய பெரிய விமான நிலையங்களை கட்டி, பல விமான நிலையங்கள் சரிவர பயணிகள் வராததால், அதைஎல்லாம் மூடி வைத்து பல ஆயிரம் கோடி மக்கள் பணத்தை அப்படி வீணடித்ததற்கு பதில், எல்பிஜி சேமிப்பு கிடங்குகளை அமைத்து வெகுஜன மக்களின் அன்றாட வாழ்வியலில் ெநருக்கடி ஏற்படுவதை தவிர்க்க மோடி அரசு எந்தவித முன்யோசனை திட்டமும் எடுக்கவில்லை.

இந்தியாவில் எல்பிஜி சேமிப்பு கிடங்குகள் இரண்டு தான் உள்ளன. உலகின் வளர்ந்த நாடுகள், மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகள் தேவைக்கு ஏற்ப எல்பிஜி சேமிப்பு கிடங்குகளின் எண்ணிக்கை மற்றும் சேமிப்பு அளவை அதிகரித்த போது, பிரதமர் மோடி பெரிய அளவில் எல்பிஜி சேமிப்பு கிடங்குகள் கட்டமைக்காமல் விட்டுவிட்டார். இந்தியாவில் தற்போது விசாகப்பட்டினம், மங்களூரு ஆகிய இடங்களில் மட்டுமே எல்பிஜி சேமிப்பு கிடங்குகள் உள்ளன. அங்கு மொத்தம் 1,40,000 டன் மட்டுமே சேமித்து வைக்க முடியும். இந்த எல்பிஜியால் இந்தியாவின் தேவையை வெறும் 2 நாள் மட்டுமே சமாளிக்க முடியும். இதுவே இந்தியாவின் மிகப்பெரிய கட்டமைப்பு குறைபாடு.

ஆனால் அமெரிக்காவில் 2 கோடி டன் சேமித்து வைக்க முடியும். இதனால் அமெரிக்கா எல்பிஜி தேவையை 45 மாதங்கள் சமாளிக்க முடியும். ஜப்பான் 25 நாட்களும், தென்கொரியா 30 நாட்களும், இந்தியாவைப்போல் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் 10 நாட்களும் சமாளிக்க முடியும். இதை எல்லாம் பார்க்கும் போது இந்தியாவின் திட்டமிடலில் பெரிய குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. 10 கோடி வீடுகளுக்கு இலவச காஸ் சப்ளை செய்யும் போது எல்பிஜி பயன்பாடு வேகமாக உயரப்போகிறது என்பது பிரதமர் மோடிக்கு தெரியாதா? அப்படி இருந்தும் இன்று வரை எல்பிஜி இருப்பு வைக்க புதிய திட்டங்கள் தொடங்காதது ஏன்?. இறக்குமதியை அதிகரிக்காதது ஏன்?. எல்பிஜியை பூமிக்கு அடியில் தான் பத்திரமாக சேமித்து வைக்க முடியும். அப்படிப்பட்ட கட்டமைப்பை இப்போது வரை மோடி அமைக்க உத்தரவிடாதது ஏன்? ரூபாய் நோட்டு தடைக்காலத்தை போல் மீண்டும் மக்களை நடுத்தெருவில் அலையவிட்டது ஏன்? இந்த கேள்விகளுக்கு எல்லாம் மோடி அரசில் பதில் கிடைத்துவிடுமா என்ன?

* பெட்ரோல், டீசல் சப்ளையை காப்பாற்றிய மன்மோகன்சிங்
இப்படி ஒரு சூழல் வரும் என்று மன்மோகன்சிங்கிற்கு தெரியும். மெத்த படித்தவர் இல்லையா? 1991 ஆம் ஆண்டு இந்திய பொருளாதார நெருக்கடியின் போது ​​அந்நியச் செலாவணி இருப்புக்கள் குறைந்து வெளிநாட்டு இறக்குமதிக்கு உரிய நிதியை வழங்க முடியவில்லை. அதை அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், நிதியமைச்சர் மன்மோகன்சிங்கின் உதவியால் சமாளித்தாலும், எண்ணெய் விலைகளின் ஏற்ற இறக்கத்தால் இந்தியா தொடர்ந்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மங்களூரு , விசாகப்பட்டினம், படூரில்(உடுப்பி) நிலத்தடியில் கச்சா எண்ணெய் சேமிப்பு வசதிகள் கட்ட திட்டமிடப்பட்டன.

முதல் கட்டமாக 5.33 மில்லியன் மெட்ரிக் டன் சேமிப்பு திறன் கட்டப்பட்டது. மேலும் 2004 ஜூன் 16 அன்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் முழு உரிமையாளரான துணை நிறுவனமாகவும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் ஒரு சிறப்பு நோக்க வாகனமாகவும் இந்திய மூலோபாய பெட்ரோலிய இருப்பு லிமிடெட் அமைக்கப்பட்டது. இதில் மங்களூரு, விசாகப்பட்டினத்தில் எல்பிஜி சேமிக்கலாம். படூரில் கச்சா எண்ணெய் மட்டுமே சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் இந்த புத்திசாலித்தனமான முடிவால் 74 நாட்கள் வரை பெட்ரோல், டீசல் சப்ளையை இந்தியா செய்ய முடியும். பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு ஒடிசாவின் சண்டிகோல் மற்றும் ராஜஸ்தானின் பிகானீர் ஆகிய இடங்களில் இதுபோன்ற இரண்டு சேமிப்பு குகைகள் அமைக்க 2018 ஜூனில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் படூரில் சேமிப்பு திறனை இரட்டிப்பாக்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தவிர, குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் கச்சா எண்ணெய் வசதிகளை விரிவுபடுத்தவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் எதுவும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.

* சாத்தியம் என்ன?
பூமிக்கு அடியில் சேமிக்கப்படும் எல்பிஜி குடோனில் குறைந்தபட்சம் 80,000 முதல் 200,000 டன் வரை சேமிக்கலாம். மோடி அரசு விரைவில் உள்கட்டமைப்பை அதிகரித்து பல குடோன்களை கட்டினால் குறைந்தது 5 லட்சம் டன் வரை சேமித்து வைக்க முடியும். இதனால் 2035க்குள் 10 லட்சம் டன் எல்பிஜி சேமிப்பு என்பது சாத்தியமான இலக்கு ஆகும். ஆனால் இது கூட இந்தியாவின் தேவைக்கு போதுமானதாக இருக்காது.

* மன்மோகன்சிங் ஆட்சியில் மோடி ஆட்சியில் எல்பிஜி சப்ளை
2014 ஏப்ரலில் இந்தியாவில் மொத்த உள்நாட்டு எல்பிஜி நுகர்வோரின் எண்ணிக்கை தோராயமாக 14.52 கோடி. 2026 நிலவரப்படி, இந்தியாவில் 33.1 கோடி பதிவு செய்யப்பட்ட எல்பிஜி சப்ளை உள்ளது. தோராயமாக 55.9% வீடுகளில் எல்பிஜி இணைப்புகள் இருந்தன. இந்த விநியோகத்தில் சுமார் 87% வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது, நாட்டில் 13,896 எல்பிஜி விநியோகஸ்தர்கள் இருந்தனர். நாட்டில் தற்போது 25,500 எல்பிஜி விநியோகஸ்தர்கள் உள்ளனர்.

* ஆண்டு நுகர்வு: 3.13 கோடி டன் எல்பிஜி, 2030க்குள் இது 4 கோடி டன் வரை செல்லலாம்.
* வீட்டு பயன்பாடு: 87% வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
* பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் மூலம் 10.60 கோடி வீடுகளுக்கு எல்பிஜி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் எல்பிஜி சேமிப்பு
நாடுகள் சேமிப்பு நாட்கள்
1. அமெரிக்கா 20 மில்லியன் டன் 45 மாதங்கள்
2. ஜப்பான் 1 மில்லியன் டன் 25 நாட்கள்
3. தென் கொரியா 0.9 மில்லியன் டன் 30 நாட்கள்
4. சீனா 1.5 மில்லியன் டன் 10 நாட்கள்

கச்சா எண்ணெய் சேமிப்பு குடோன்கள்
இடம் கொள்ளளவு
(மில்லியன் மெட்ரிக் டன்)
1. விசாகப்பட்டினம், ஆந்திரா 1.33
2. மங்களூர், கர்நாடகா 1.5
3. படூர், கர்நாடகா 2.5

* அவசியம் என்ன?
இந்தியா உடனடியாக பெரிய அளவிலான எல்பிஜி குடோன்களையும், பூமிக்கு அடியிலான சேமிப்பு மையங்களையும் உருவாக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் எதிர்காலத்தில் சமையல் எரிசக்தி பாதுகாப்பு இந்தியாவின் மிகப்பெரிய பலவீனமாக மாறக்கூடும்.

இந்தியாவில் எல்பிஜி சேமிப்பு எவ்வளவு?
இந்தியாவில் தற்போது இரண்டு இடங்களில் மட்டுமே பூமிக்கு அடியில் குகை அமைத்து எல்பிஜி சேமித்து வைக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம்:
இடம் சேமிப்பு திறன்
1. விசாகப்பட்டினம் 60,000 டன்
2. மங்களூரு 80,000 டன்
மொத்தம் 1,40,000 டன்
இது நாட்டின் தினசரி எல்பிஜி தேவைக்கு 2 நாட்கள் மட்டுமே தாங்கும்.

இந்தியா இறக்குமதி
செய்யும் நாடுகள்
இந்தியா எல்பிஜி இறக்குமதிக்கு கீழ்கண்ட நாடுகளை சார்ந்துள்ளது.
1.சவுதி அரேபியா
2. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
3. கத்தார்
4. குவைத்

இந்தியாவின் தேவை எவ்வளவு?
* இந்தியாவின் மாதாந்திர எல்பிஜி தேவை மாதத்திற்கு சராசரியாக 26 லட்சம் டன் முதல் 28 லட்சம் டன் வரை தேவைப்படுகிறது.
* 2025 செப்டம்பர் மாதம் நாட்டின் எல்பிஜி நுகர்வு சரியாக 28 லட்சம் டன்களாக பதிவு செய்துள்ளது.
* 2024-25ல் இந்தியா மொத்தம் சுமார் 3.13 கோடி டன் எல்பிஜி சப்ளை செய்துள்ளது.
* நமது நாட்டில் உள்ள உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்கள் ஆண்டுதோறும் சுமார் 1.28 கோடி டன் முதல் 1.3 கோடி டன் வரை மட்டுமே எல்பிஜி உற்பத்தி செய்கின்றன.
* இதனால் இந்தியா தனது தேவையில் 58% முதல் 60% வரை பூர்த்தி செய்ய இறக்குமதியை நம்பியுள்ளது.
* ஒவ்வொரு மாதமும் சுமார் 15 லட்சம் டன் எல்பிஜியை வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.
* இந்தியாவில் உள்ள மொத்த எல்பிஜியில் கிட்டத்தட்ட 87% நேரடியாக வீட்டு சமையலறைகளுக்கு செல்கிறது.
* 33 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளில் எல்பிஜி சப்ளை செய்யப்படுகிறது. மீதமுள்ள அளவு ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் தொழில்கள் போன்ற வணிக நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.

* மூடப்பட்ட விமான நிலையங்கள் வீணடிக்கப்பட்ட மக்கள் வரிப்பணம்
உதான் திட்டத்தின் கீழ் உத்தரபிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்ட 6 விமான நிலையங்கள், பயணிகள் வருகை இல்லாததால் மூடப்பட்டு விட்டன. 2021ல் குஷிநகரில் ரூ.327 கோடியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டது. 2023 இறுதியில் விமான வருகை 6 ஆக குறைந்தது. கடந்த 2 ஆண்டாக ஒரு விமானம் கூட வரவில்லை. இதனால் இந்த விமான நிலையம் மூடப்பட்டு விட்டது. இதுபோல் ரூ.29.57 கோடியில் அசம்கார் விமான நிலையம், ரூ.29.4 கோடியில்அலிகார் விமான நிலையம், ரூ.32.79 கோடியில் சித்திரகூட் விமான நிலையம், ரூ.29 கோடியில் ஷ்ரவஸ்தி விமான நிலையம், மொரதாபாத்தில் ரூ.29 கோடியில் விமான நிலையம் ஆகியவை உதான் திட்டத்தில் ஒன்றிய அரசு நிதிப்பங்களிப்புடன் மொத்தம் சுமார் ரூ.476.76 கோடியில் கட்டப்பட்டு சில மாதங்களிலேயே மூடப்பட்டு விட்டன. ஆனால் நாட்டில் 87 சதவீத மக்கள் உபயோகப்படுத்தும் எல்பிஜி குடோன்களை கட்டமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

* 3 துறைமுகங்கள் தான்
இந்தியாவின் எல்பிஜி இறக்குமதி முக்கியமாக சில துறைமுகங்களில் மட்டுமே நடக்கிறது. குறிப்பாக குஜராத் துறைமுகங்கள், மங்களூரு, விசாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களில் தான் நடக்கிறது. இந்த துறைமுகங்களில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் ஒட்டுமொத்த நாட்டில் எல்பிஜி சப்ளை பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் மேலும் பல துறைமுகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இவ்வளவு பாதிப்பு ஏன்?
* பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனா (PMUY)
* கிராமப்புற சமையல் எரிபொருள் மாற்றம்
* நகர்ப்புற வாழ்க்கை முறை மாற்றம்
* சிறு உணவகங்கள் மற்றும் சேவை துறையின் வளர்ச்சி.

இன்று இந்தியாவில்:
* 30 கோடி குடும்பங்களுக்கு மேல் எல்பிஜி இணைப்புகள் உள்ளன.
* இந்தியாவின் சமையல் அறைகள் மிகப் பெரிய அளவில் எல்பிஜியை மட்டுமே சார்ந்திருக்கிறது.
* இந்தியாவின் எல்பிஜி சேமிப்பு திறன் 19 லட்சம் டன்.
* இதன் மூலம் நாட்டின் எல்பிஜி தேவைக்கு 20 முதல் 22 நாட்கள் மட்டுமே சப்ளை செய்ய முடியும்.

Related Stories: