அஜிதா… இவருக்கு ஒரு அடைமொழி இருக்கு.. அதுதான் அலப்பறை அஜிதா. இந்த அலப்பறை எப்போது இவரது பெயரின் முன்னொட்டாக ஒட்டிக்கொண்டது என்று தெரியாது. ஆனால் அதுவே இவரது அடையாளம். இந்த கட்சி, அந்த கட்சி என்றில்லாமல் எல்லா கட்சியின் விவகாரங்களும் அலப்பறை அஜிதாவுக்கு அத்துப்படி. கட்சி உள்விவகாரங்கள், அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு கூட தெரிந்திருக்காது, அலப்பறைக்கு தெரிந்திருக்கும். கட்சிகள் மட்டுமல்ல போலீஸ் துறை, நீதித்துறை, சகல அரசு துறை விவகாரங்களும் கை நுனியில் வைத்திருப்பார். அந்த அளவுக்கு கான்டாக்ட்.. நெட்வொர்க். தேர்தல் காலம் அல்லவா.. அவரிடம் சொல்வதற்கு ஏராளம் இருக்கிறது.
எங்கெங்கோ சுற்றிக் களைத்து அலுவலகம் வந்து சேர்ந்தார் அலப்பறை அஜிதா. ‘‘என்ன அஜிதா… செம ரவுண்ட் போல.. வேர்த்து விறுவிறுத்து வந்திருக்கே.. அப்போ ஏகப்பட்ட விவகாரங்கள் கொட்டப்போகுதுனு சொல்லு..’’ என்றோம். சன்கிளாஸை ஸ்டைலாக கழற்றி டேபிளில் வைத்தபடி, ‘‘இல்லாமலா.. காதை தீட்டிக் காத்திருப்பீங்கன்னு தெரியுமே.. இருக்கு.. நெறய இருக்கு.. என்ன வேணும்.. கேளுங்க..’’ என்றார் அலப்பறை அஜிதா.
‘‘தேர்தல் அட்டவணை எப்போ வருதாம்..’’ ‘‘தமிழகத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பா ஆய்வு நடத்த துணை தேர்தல் ஆணையர் 11ம் தேதி சென்னை வர்றார். அவர் ஆய்வு நடத்தி விட்டுச் சென்ற பிறகு 20ம் தேதிக்குப் பிறகு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வரன், சென்னை வர்றார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன், தேர்தல் நடத்துவது குறித்து கருத்துகளை கேட்கிறார். அதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், தலைமைச் செயலாளர்களோட ஆலோசனை நடத்துறார். 2 நாள் ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு டெல்லி புறப்பட்டு போறார். அதுக்கப்புறம் ரெண்டு நாள்ல தேர்தல் தேதி அறிவிக்கப்படுது. முதல் கட்டத்துலயே தமிழகத்துக்கு தேர்தல் வருதாம். அனேகமாக மார்ச் 24ம் தேதிக்குள் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும்னு சொல்றாங்க..’’ என்று டக்டக்கென்று சொன்னார் அலப்பறை அஜிதா.‘‘சூப்பர்… போலீஸ் வட்டாரத்துல தேர்தல் சூறாவளி ஏதும் இருக்கா..’’ ‘‘அதில்லாம இருக்குமா… தமிழகத்துல இப்போ பொறுப்பு டிஜிபியா வெங்கட்ராமன் இருக்கார்.
நேர்மையானவர், அமைதியானவர். எந்த தவறும் செய்ய மாட்டார். தவறு செய்யவும் விடமாட்டார். கண்டிப்பான அதிகாரி. ஆனா இது தேர்தல் நேரமாச்சே, அதனால அவர் நேர்மையிலயும் சந்தேகத்த கிளப்புவாங்க. இவரை தலைமை டிஜிபியா விட்டுவிட்டு, சட்டம் ஒழுங்கை கவனிக்க மட்டும் தனியாக ஒரு டிஜிபியை போடற ஐடியா தேர்தல் ஆணையத்துக்கு இருக்காம். அதுல இப்போ சீனியாரிட்டியில் முதல் 3 இடத்தில் இருக்கிற சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரில் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தமிழக பாஜ வலியுறுத்துகிறதாம். சந்தீப்ராய் ரத்தோரை நியமிக்க வேண்டும் என்று அண்ணாமலை விரும்புகிறாராம். அவரும், ஒன்றிய உளவுத்துறையும் சந்தீப்ராய் ரத்தோரை நியமிக்க வேண்டும் என்கிறதாம். அதற்கு ஏற்றாற்போல அவர் ஒன்றிய அரசுப் பணிக்கு விண்ணப்பிச்சிருக்கார். அந்த விண்ணப்பம் இப்போ டெல்லிக்கு போயிருக்கு. விரைவில் அவர் ஒன்றிய அரசுப் பணிக்கு செல்ல உள்ளதால், அவரை தேர்தல் டிஜிபியாக நியமித்தால், நமக்கு உதவியா இருப்பார். நாம் என்ன செய்தாலும் கண்டுகொள்ள மாட்டார் என்று அண்ணாமலை சொல்றாராம்.
ஆனா அதிமுகவோ, சீமா அகர்வாலை நியமிக்க வேண்டும் என்கிறதாம். அவர்தான் சரியாக இருக்கும் என்கிறதாம். அதற்கு ஏற்றாற்போல அவரும் தயாராகி வருகிறாராம். அவர் வர்ற மே மாசத்தோட ரிட்டயர்ட் ஆகுறதால, பொறுப்பு டிஜிபியா இருந்து ஓய்வு பெற்று விடலாம்னு நினைக்கிறாராம். தமிழகத்தில் சீக்கிரம் தேர்தல் முடிந்தாலும், மே மாதம்தான் மற்ற மாநில தேர்தல் முடியும். அதுவரை தேர்தல் நடைமுறைகள் தமிழகத்திலும் இருக்கும். இதனால் தேர்தல் முடிந்து புதிய அரசு பதவி ஏற்கும் நேரத்தில், நாமும் ஓய்வு பெற்று விடலாம்னு சீமா அகர்வால் கணக்குப்போட்டு வச்சிருக்காராம். ஆளாளுக்கு இப்படி கணக்குப்போட்டு வச்சாலும் தமிழக மக்கள் வேற கணக்கைத்தானே போட்டு வச்சிருப்பாங்க..’’ என்று முத்தாய்ப்பு பஞ்ச் வைத்து முடித்தார் அஜிதா. ‘‘அதிரிபுதிரி புது தகவலாத்தான் இருக்கு… அலப்பறைன்னா சும்மாவா.. அதிருக்கட்டும்.. மல.. நம்ம அண்ணாமலை இந்த வாட்டி தேர்தல்ல போட்டி போடுறாரா, இல்லையா..’’ என்று கேட்டுவைத்தோம். கேள்வியைக் கேட்டு முடிக்கவில்லை.. படபடவென பதிலைக் கொட்டத் தொடங்கிவிட்டார் அஜிதா.
‘‘அண்ணாமலை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டே ஆக வேண்டும்னு உறுதியா இருக்கார். பாஜ, அதிமுக செல்வாக்கு பெற்றுள்ள கவுண்டம்பாளையம், சூலூர், மொடக்குறிச்சி தொகுதிகளைத்தான் குறிவச்சு வேலை பாத்துட்டு இருக்கார். கட்சிகள் செல்வாக்கு மட்டுமில்லாம, தன்னுடைய சமூகத்தினர் அங்க அதிகமா இருக்கிறதும் ஒரு காரணம். ஆனா கவுண்டம்பாளையத்த அதிமுக விட்டுக்கொடுக்காதுனு சொல்றாங்க. குறிப்பா அதிமுக தலைவர்களும், பாஜவினரும் அவர் மீண்டும் கரூரில் செந்தில்பாலாஜியை எதிர்த்து போட்டியிட வேண்டும்னு விரும்புறாங்க. செந்தில்பாலாஜியை எதிர்த்து நின்றால் அவர் தோற்றுவிடுவார் என்று பாஜ தலைவர்கள் நினைக்கிறாங்க. அவர் தோத்துட்டா, கட்சியில் பெரிசா வாய் திறக்கமாட்டார்னு நயினார் நாகேந்திரன், எடப்பாடி எல்லாம் நினைக்கிறாங்களாம். செந்தில்பாலாஜி மேற்கு மாவட்டத்திலும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை மேற்கு மாவட்டத்தில் கட்டுப்படுத்தி, சொந்த தொகுதிக்குள் அதிக நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்றால் அண்ணாமலை அங்கு போட்டியிட வேண்டும் என்று அமித்ஷாவிடம் சொல்லியிருக்காங்களாம். மேலிடம் என்ன முடிவு எடுக்கப்போகுதுனு பாஜ, அதிமுக தலைவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறாங்களாம்..’’ என்றார் அலப்பறை அஜிதா.
‘‘பணத்தை வாரியிறைப்பாங்க போல இருக்கே..’’ ‘‘பாஜ இந்த வாட்டி தொகுதிக்கு ரூ.15 கோடி கொடுக்க திட்டமிட்டிருக்காம். ஆனா, அந்தப் பணத்தை வேட்பாளர்களிடமோ, மாவட்ட தலைவர்களிடமோ வழங்காதாம். அவர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்களை நியமித்துள்ளார்களாம். அவர்தான் பணத்தை செலவு செய்வாராம். வேட்பாளரே அவரிடம்தான் பணம் வாங்கி செலவு செய்யணுமாம். இதனால, கைக்கு எட்னது வாய்க்கு எட்டாம போய்டுமோனு பாஜவினர் கவலையா இருக்காங்களாம்.. ஆனா, மாநில தலைவரான என்னிடம்தான் தேர்தல் செலவு முழு பணத்தையும் கொடுக்கணும்னு நயினார் கேட்கிறாராம். ஆள்ஆளுக்கு பணத்தை சுருட்டத்தான் முடிவு செஞ்சிருக்காங்க போல..’’ என அஜிதா சிரித்துக்கொண்டிருக்கும்போதே, அவரது செல்போன் ரிங்டோன் அலறியது. அதை எடுத்து, ‘‘இதோ வந்துட்டேன்..’’ என சைகை காட்டியபடி வெளியில் பாய்ந்தார் அலப்பறை அஜிதா.
