நீலகிரியில் வாட்டும் உறைபனி பொழிவு மினி காஷ்மீராக மாறிய ஊட்டி

*கடும் குளிர் நிலவுவதால் மக்கள் அவதி

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால், மினி காஷ்மீராக ஊட்டி மாறி உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி அல்லது மார்ச் முதல் வாரம் வரை உறைபனி காலமாகும். ஆரம்பத்தில் நீர்பனி பொழிவுடன் துவங்கும். பின்னர் உறைபனி பொழிவு காணப்படும்.

இந்த சமயத்தில் மாவட்டத்தில் கடும் குளிர் நிலவும். புல் மைதானங்கள், தேயிலை தோட்டங்களில் உறைப்பனி கொட்டும். புல்வெளிகளில் கொட்டி கிடக்கும் பனியை பார்ப்பதற்கு வெள்ளை கம்பளம் விாித்தது போல் காணப்படும். இந்த உறைபனி பொழிவால் புற்கள், செடி கொடிகள், தேயிலை செடிகள் கருகி விடும்.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், டிட்வா புயல் காரணமாக நவம்பரில் துவங்க வேண்டிய உறைபனி பொழிவு தள்ளி போனது. மழையின் தாக்கம் குறைந்த நிலையில் கடந்த வாரம் 11ம் தேதி முதல் ஊட்டியில் உறைப்பனி பொழிவு துவங்கியது. தாமதமாக துவங்கினாலும் உறைபனியின் தாக்கம் கடுமையாக உள்ளது.

கடந்த வாரத்தில் சில நாட்கள் பனிமூட்டமான காலநிலை காரணமாக பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. அதன் பின் தற்போது உறைபனி பொழிவின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. லேசான பனி காற்றும் வீசுவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. காஷ்மீரில் வெள்ளை கம்பளம் விரித்து காணப்படுவது போல் ஊட்டியிலும் காணப்படுவதால் தற்போது ஊட்டி மினி காஷ்மீராக மாறி உள்ளது.

இதனால் அதிகாலை நேரங்களில் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.காந்தல் பகுதி, தலைகுந்தா, தாவரவியல் பூங்கா மைதானம், குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட இடங்களில் உறைப்பனி கொட்டி கிடந்தது.

உறைப்பனி காரணமாக கடும் குளிர் நிலவும் நிலையில், அதிகாலை வேளைகளில் மலை காய்கறி தோட்டங்கள் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

இதனிடையே ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 0 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்தது. அதே சமயம் தலைக்குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 2க்கும் கீழ் சென்றுள்ளது. காலை நேரங்களில் தலைக்குந்தா பகுதியில் உறைப்பனியின் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகள் அணிந்த படி பார்த்து மகிழ்ந்தனர்.

Related Stories: