வீட்டு சிலிண்டர் விற்பனையில் மோடி அரசு ரூ.3,200 கோடி ஊழல்: கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

கோவை: வீட்டு உபயோக சிலிண்டர் விற்பனையில் மோடி அரசு ரூ.3,200 கோடி ஊழல் செய்ததாக கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று கோவை செல்வதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. முன் னதாக அவரை வரவேற்று கோவையில் பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அதில், சூலூர் மற்றும் பல்லடத்தில் ரூ.100 கோடியில் செமி கண்டக்டர் தொழிற்பூங்கா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,434 கோடி, புற்றுநோய் கண்டுபிடிப்புக்கு ரூ.110 கோடி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.20,906 கோடி ஒதுக்கீடு செய்து ‘‘பட்ஜெட்டில் எல்லார்க்கும் எல்லாம் தந்த எங்கள் தமிழே வாழ்க’’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மற்றொரு புறம் ஒன்றிய அரசையும், பிரதமர் மோடியையும் சாடி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், சராசரியாக நாள் ஒன்றுக்கு 30 லட்சம் சிலிண்டர்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு விநியோகம் செய்யும்போது பில் தொகையைவிட ரூ.30 கூடுதலாக பெறப்படுகிறது. அந்த வகையில், நாள் ஒன்றுக்கு 9 கோடி ரூபாய் ஒன்றிய அரசு ஊழல் செய்கிறது. ஓராண்டில் வீட்டு உபயோக சிலிண்டர் விற்பனையில் மோடி அரசு 3,200 கோடி ரூபாயை ஊழல் செய்கிறது. இதனை அமலாக்கத்துறை கண்ணில்படும் வரை ஷேர் செய்யவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கோவையில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வீட்டு சிலிண்டர் விற்பனையில் மோடி அரசு ரூ.3,200 கோடி ஊழல்: கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: