இதையடுத்து ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் தமிழக நீர் வளத்துறை செயலர், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர், கேரள அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், நீர் வளத்துறை தலைமைப் பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் என 7 பேர் அடங்கிய மேற்பார்வை குழு உருவாக்கப்பட்டது. இக்குழுவினர் முதன்முறையாக அணையில் நேற்று ஆய்வு செய்தனர். முன்னதாக நேற்று காலை ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையில், ஆணைய உறுப்பினர் விவேக் திரிபாதி, தமிழ்நாடு நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம்சர்மா, காவிரி தொழில்நுட்பக் குழும தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு சார்பில் நீர்ப்பாசனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டிங்கு பிஸ்வால் உள்ளிட்டோர் தேக்கடி படகுத்துறை வழியாக அணை பகுதிக்கு சென்றனர்.காலை 9 மணிக்கு தொடங்கி சுமார் மூன்று மணி நேரம் நடந்த கள ஆய்வில் பிரதான அணை, பேபி அணை, சுரங்கப் பகுதி, நீர்வழிப் போக்கிகள் மற்றும் மதகுகளை இயக்கி ஆய்வு செய்தனர்.
மாலையில் தேக்கடியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவு வனவிலங்குகள் சரணாலய ஆய்வு மைய கூட்ட அரங்கில் ஆலோசனை கூட்டம் 2 மணி நேரம் நடந்தது. பின்னர் குழுவின் தலைவர் அனில் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இரு மாநில அதிகாரிகளுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து நல்ல முறையில் விவாதித்துள்ளோம். அணையின் நீர்மட்டம் மிக குறைவாக உள்ளது. இன்னும் அணை குறித்து நாங்கள் தொடர்ச்சியாக ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட மற்றும் முன்வைக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அறிக்கை தயாரிக்கப்படும். பின்னர் அது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதலோடு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்’’ என்றார்.
The post முல்லை பெரியாறு அணையில் புதிய மேற்பார்வை குழு ஆய்வு: தொடர் ஆய்வு செய்ய வேண்டும் என தலைவர் பேட்டி appeared first on Dinakaran.