தஞ்சாவூர் : பாரபட்சமின்றி அனைவருக்கும் கோடை உழவு செய்ய மானியத்தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோட்டாட்சியரிடம் வலியுறுத்தினர்.தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கோட்டாட்சியர் இலக்கியா தலைமை தாங்கினார். இதில் கோட்ட அளவிலான விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனு அளித்தனர்.காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ரவிச்சந்தர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக வேளாண் பட்ஜெட்டில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3000, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4500 வழங்குவதற்கு அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இதேபோல் கனமழை, புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் இதுவரை வழங்காதது வேதனையளிக்கிறது.
பாரபட்சம் இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் கோடை உழவு செய்ய மானியத்தொகை விரைந்து வழங்க வேண்டும். ஜூன் 12 தண்ணீர் திறந்து குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மண்வளத்தை மீட்டெடுக்க பசுந்தால் உர விதைகளை வேளாண்துறை மூலம் இலவசமாக வழங்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: மரவள்ளிக் கிழங்கு பயிர்களுக்கு உரிய விலை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. எனவே, அரசே மரவள்ளிக்கிழங்குகளைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் தலைவர் பழனியப்பன் :- மழையால் பாதிக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
வெள்ளாம்பெரம்பூர் துரை.
ரமேஷ்: ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கச்சமங்கலம் அணை நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது. எனவே, இந்த அணையின் மற்றும் சுற்றுப்புற தடுப்பு சுவர்களை மே மாத இறுதிக்குள் சீரமைக்க வேண்டும்.
பிள்ளை வாய்க்காலிலும், ரெட்டை வாய்க்காலிலும் முழுமையாகத் தூர் வார வேண்டும்.
பெரமூர் அறிவழகன்: விவசாயிகள் பதிவேடு இலவசமாக மேற்கொள்ளப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், இ } சேவை மையங்களில் ரூ. 150 கட்டணம் நிர்ணயித்து வாங்குகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோட்டாட்சியர்: நடவடிக்கை எடுக்கப்படும்.ஏரி குளம் பாசன விவசாயிகள் சங்கம் செயலாளர் ரங்கராஜன்: பூதலூர் ஒன்றியம் திருக்காட்டுப்பள்ளி தலைப்பில் பிரியும் வாய்க்கால் புது சத்திரம், விஸ்ணம்பேட்டை, விட்டலபுரம் வானாங்குடி, மகாராஜபுரம், சாத்தனூர், வடுகக்குடி வரை செல்லும் புது வாய்க்கால் தூர் வாராமல் சுமார் 15 ஆண்டுகளாக உள்ளது. உடனே தூர்வாரி இரு கரைகளையும் பலப்படுத்தி தரவேண்டும். வெள்ள பெரம்பூர் துரை ரமேஷ் பேசியது:
நீண்ட நாள் கோரிக்கையான வெண்ணாறு பிரிவு கச்சமங்கலம் அணைக்கட்டு பகுதி நாளுக்கு நாள் பலவீனமாகி வருகிறது. 2500 ஆண்டுகள் பழமையான அணைக்கட்டு மற்றும் சுற்றுபுற தடுப்பு சுவர்களையும் மே மாத இறுதிக்குள் கட்டமைப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும்.
வெள்ளாம் பெரம்பூர், தென் பெரம்பூர்,அள்ளூர் அலிசகுடி போன்ற கிராம பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பாக மாறி குறுவை சாகுபடி பயிர்கள் சில ஆண்டுகளாக மிகப்பெரும் பாதிப்படைகிறது ஆகவே கிராமங்கள் தோறும் இலவசமாக மண் பரிசோதனை மற்றும் நீர் பரிசோதனை மேற்கொண்டு விவசாயிகள் எந்த வகையான உரகொள்கையை கையாள வேண்டும் என்ற ஆலோசனை வழங்க வேண்டும்.
தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கொள்முதல் நிலையங்களில் எடை இயந்திரத்தின் எடை காட்டும் திரையை பெரிது படுத்த வேண்டும். காவிரி பிரிவு கல்யாணபுரம் 1ம்சேத்தி கல்யாணி வாய்க்கால் உடன் தூர்வார வேண்டும். வெண்ணாறு பிரிவு பிள்ளை வாய்க்கால் மற்றும் ரெட்டைவாய்க்கால்,பனவெளி ஏரி வாய்க்கால் உடன் தூர்வாரவும் கட்டமைப்பு பணிகளையும் மே இறுதிக்குள் முடிக்க வேண்டும்.
வாளமர்கோட்டை இளங்கோவன்: மிதமான மழை பெய்தாலும் பயிர்கள் பாதிக்கப்படும் நிலை பரவலாக உள்ள நிலையில், தூர் வாரும் பணிக்காக தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதி போதுமானதாக இல்லை. விவசாயிகளுக்கு அடிப்படை வாழ்வாதாரமாக உள்ள நீர் ஆதாரத்தைக் காப்பாற்ற கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு விவசாயிகள் வலியுறுத்தினர்.
The post தஞ்சாவூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கோடை உழவு செய்ய பாரபட்சமின்றி மானியத்தொகை வழங்க வேண்டும் appeared first on Dinakaran.