புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ள 1.67 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது: பேரவையில் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதில்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ செ.ராஜேஷ் குமார் (காங்கிரஸ்) பேசியதாவது: ஒரு குடும்ப அட்டையில், என்பிஎச்எச், பிஎச்எச்.. என 5 வகையான குறியீடுகள் இருக்கின்றன. எங்களுடைய மாவட்டத்தை பொறுத்தவரையில் ஏழைகள் மருத்துவம் பார்க்க வேண்டுமென்றால், பக்கத்தில் இருக்கக்கூடிய கேரளாவிற்குதான் செல்லக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. என்பிஎச்எச் கார்டு வைத்துள்ள அவர்கள் உண்மையிலேயே அந்த கார்டு பிஎச்எச் ஆக இருக்க வேண்டுமென்றால், அந்தக் குறியீட்டை திருத்துவதற்கு இங்கே கமிஷனர் அலுவலகத்தில் வந்துதான், லாகிங் செய்து அதை மாற்ற வேண்டியுள்ளது. அதற்கான அந்த அதிகாரத்தை மாவட்ட ஆட்சி தலைவருக்கு வழங்க ஆவன செய்யப்படுமா?. எத்தனை முழுநேர ரேஷன் கடைகள், பகுதிநேர ரேஷன் கடைகள், எத்தனை குடும்ப அட்டைகள் தமிழகத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன?

அமைச்சர் அர.சக்கரபாணி: அனைத்து மாவட்ட குடும்ப அட்டைகளினுடைய எண்ணிக்கை தரவுகள் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்தில்தான் இருக்கிறது. எனவே, அந்தத் தரவுகளை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்திற்கு ஒப்படைப்பது சிரமம். அரசு பொறுப்பேற்றதற்கு பின்பு 7-5-2021 முதல் இதுவரையில் சுமார் 18 லட்சத்து 9 ஆயிரத்து 677 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்றுவரை புழக்கத்தில் 2 கோடியே 25 லட்சத்து 59 ஆயிரத்து 224 குடும்ப அட்டைகள் உள்ளன. 51 ஆயிரத்து 327 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அதற்கு புதிய அட்டைகள் அச்சடிக்கும் பணி இன்றைக்கு நடந்து வருகிறது. அதோடு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 795 விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கிறது. அந்த விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து விரைவிலே குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு துறையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 37 ஆயிரத்து 224 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 1,330 குடும்ப அட்டைகள் அச்சில் உள்ளன. 2,428 விண்ணப்பங்கள் ஆய்வில் உள்ளன. இவ்வாறு விவாதம் நடந்தது.

* 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்தில் மொத்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது: பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
பேரவையில் நேற்று வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதன் மூலம் கிட்டத்தட்ட 5 கோடியே 35 லட்சம் விவசாயிகள் மற்றும் தனிநபர்கள் பயன் பெற்றிருக்கிறார்கள். அதேபோல, 23 லட்சத்து 68 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த 4 ஆண்டு காலத்தில் 1 லட்சத்து 81 ஆயிரம் புதிய பாசன மின் இணைப்புகள் கொடுத்து, விளைநிலம் பரப்பினை அதிகரிக்கக்கூடிய ஒரு வாய்ப்பை முதல்வர் கொடுத்திருக்கிறார்.

அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் சாகுபடி பரப்பு குறைந்திருக்கிறது என்ற ஒரு கருத்தை கூறினார். 2019-20ம் ஆண்டில் 146 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர், 2023-24ல் 151 லட்சம் ஏக்கராக உயர்ந்திருக்கிறது. உயர்வைப் பொறுத்தவரையில் இந்த ஆட்சியில் 4.23 லட்சம் ஏக்கர் அளவிற்கு பரப்பு உயர்ந்திருக்கிறது. இருபோக சாகுபடியைப் பொறுத்தவரை, 2019-20ம் ஆண்டில் 29 லட்சத்து 74 ஆயிரம் ஏக்கராக இருந்தது, 2023-2024ல் 33 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கராக உயர்ந்திருக்கிறது. சராசரி உணவு தானியப் பரப்பு மற்றும் உற்பத்தியைப் பொறுத்தவரையில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 84 லட்சம் ஏக்கராக இருந்தது.

இவ்வரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் சராசரி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்திருக்கிறது. உயர்வைப் பொறுத்தவரையில் 12 லட்சம் ஏக்கர் உயர்ந்திருக்கிறது. உணவு தானிய உற்பத்தியில் அதிமுக ஆட்சியில் 4 ஆண்டு காலத்தில் 434.29 லட்சம் மெட்ரிக் டன், இவ்வரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 456.39 லட்சம் மெட்ரிக் டன். கூடுதலாக 22.10 லட்சம் மெட்ரிக் டன் உயர்ந்திருக்கிறது. அகில இந்திய அளவில் தமிழ்நாடு, 1-வது இடத்தில் கேழ்வரகும், 2வது இடத்தில் மக்காச்சோளமும், கரும்பும், 3வது இடத்தில் குறுதானியங்களும், நிலக்கடலையும் இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.

* நல்லவர்கள் ஆளும்போது நல்ல மழை பெய்யும்
எங்கள் ஆட்சியில் நல்ல மழை பெய்திருக்கிறது. கடந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாமலேயே விவசாயம் செய்யக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஏனென்றால் நல்லவர்கள் ஆளும்போது, நல்ல மழையும் பொழியும். மழையும் வாழ்த்துகின்றது. வறட்சியிலும் திடீரென மழை பெய்யும். எதிரிகளுக்கு இரும்பாகவும், மக்களுக்கு கரும்பாகவும் நம் முதல்வர் இருப்பதுதான் அவரின்சிறப்பு. அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறார் நமது முதல்வர். தமிழ்நாட்டில் தீட்டப்படும் திட்டங்களும், போடப்படும் சட்டங்களும், எல்லா மாநிலங்களும் பின்பற்றுகின்றன என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

The post புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ள 1.67 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது: பேரவையில் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Related Stories: