பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டதால் வண்டலூர் பூங்காவில் 20 மான்கள் உயிரிழப்பா?

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சாப்பிட்டதால் 20 மான்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம்.

இதில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மான்கள் உலாவிடங்ககளில் இருந்து ஆயிரக்கணக்கான மான்கள் பூங்கா முழுவதும் சுற்றி திரிவது வழக்கம். இந்நிலையில், பூங்காவில் உள்ள குப்பை கிடங்கில் மேய்ந்து கொண்டிருந்த 20 மான்கள் நேற்று முன்தினம் இரவு இறந்து கிடந்ததாகவும், நேற்று காலை வழக்கம் போல் பூங்காவிற்கு வந்த ஊழியர்கள் மான்கள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாகவும் தெரிகிறது.

பிறகு பூங்கா உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மான்களை பரிசோதனைக்காக பூங்கா மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும், தொடர்ந்து அனைத்து மான்களும் அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பூங்கா ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூறுகையில், ‘‘பூங்காவில் புல் தோட்டம் சரி வர பராமரிக்கப்படவில்லை.

இதனால் பூங்காவில் கொட்டப்பட்டு வரும் பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுகளை மான்கள் தின்று வருகிறது. ஏற்கனவே பூங்காவை சுற்றியுள்ள வனக்காடுகளில் கொட்டப்பட்டு வரும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பையை தின்று பல மான்கள் உயிரிழந்துள்ளன’’ என்றனர். இதுகுறித்து பூங்கா அதிகாரி மணிகண்ட பிரபுவிடம் கேட்டதற்கு பதில் கூற மறுத்து விட்டார்.

The post பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டதால் வண்டலூர் பூங்காவில் 20 மான்கள் உயிரிழப்பா? appeared first on Dinakaran.

Related Stories: