முதுகெலும்பில்லாத கோழைகள் பாஜவிற்கு அடிபணியலாம் ஒருகாலமும் திராவிட மாடல் அரசை துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது: சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை

சென்னை: தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று வெளியிட்ட அறிக்கை: அமலாக்கத் துறையின் மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு அஞ்சாது, என்பதை அறியாத ஆதிக்கவாதிகளின் அராஜக நடவடிக்கைக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்குக் குட்டு வைத்திருக்கிறது உயர் நீதிமன்றம். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிலேயே உச்ச நீதிமன்றத்தால் கடும் கண்டனத்தை எதிர்கொண்ட அமலாக்கத்துறை தற்போது மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறது.

தமிழ்நாட்டின் போர்க்குணத்தை அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் எதிர்கொள்ளத் திராணி இல்லாத பாஜ, தனது அச்சுறுத்தல் ஆயுதத்தை அமலாக்கத் துறை மூலம் நீட்டியது. பாஜவின் ஆணவத்திற்கான அடிதான் உயர்நீதிமன்றம் இப்போது எழுப்பிய கேள்விகள்.‘டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக மார்ச் 25ம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க கூடாது’ என அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

எதிர்க் கட்சிகளை மிரட்டுவதற்காக அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சி.பி.ஐ, தேர்தல் ஆணையம் போன்ற அதிகார அமைப்புகளைத் தனது கைப்பாவையாக ஒன்றிய பாஜ அரசு பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களையும், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களையும் கைது செய்து, ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் பாஜகவின் அடியாளாகச் செயல்படுகிறது அமலாக்கத் துறை.

மோடி அரசின் 10 ஆண்டு ஆட்சியில் அரசியல் தலைவர்கள் மீது பதிவு செய்த வழக்குகளின் எண்ணிக்கை 193 ஆனால், இதுவரை 2 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறையால் வழக்குகள் பதியப்பட்டவர்கள், பாஜவில் இணைந்ததும், அவர்கள் மீதான நடவடிக்கைகள் நின்றுவிடுவது அமலாக்கத்துறையின் அறிவிக்கப்படாத விதியாகும். அமலாக்கத்துறை சோதனை நடத்துவதும் வழக்கு பதிவதும் முழுக்க முழுக்க பாஜவுக்கு ஆள்பிடிக்க மட்டுமே.

வடக்கே அமலாக்கத்துறையை வைத்து பாஜகவிற்கு ஆள் பிடித்த பார்முலாவை இங்கே செய்து பார்க்கலாம் எனக் கணக்கு போடுகிறது பாஜக ஆனால் முதுகெலும்பில்லாத கோழைகள் வேண்டுமானால் பாஜவின் சித்து விளையாட்டிற்குப் பயந்து பாஜகவை ஆதரித்து அடிபணியலாம் ஆனால், ஒருகாலமும் திமுகவின் கடைக்கோடித் தொண்டனையோ, திராவிட மாடல் அரசையோ துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.

வரும் மார்ச் 22ம் தேதி தமிழ்நாடு முதல்வர்தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராகப் பல்வேறு மாநில முதல்வர்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிற ஆலோசனைக் கூட்டம் பாஜவின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது.

The post முதுகெலும்பில்லாத கோழைகள் பாஜவிற்கு அடிபணியலாம் ஒருகாலமும் திராவிட மாடல் அரசை துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது: சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: