போலி வாக்குப்பதிவுகளை தடுக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க முடிவு: தலைமை தேர்தல் ஆணையர் நடத்திய கூட்டத்தில் ஒப்புதல்

புதுடெல்லி: போலி வாக்குப்பதிவு மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளைத் தடுக்கும் வகையில், வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் முன்னிலையில், ஒன்றிய உள்துறை செயலாளர், ஒன்றிய சட்டமன்றத் துறை செயலாளர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர், யுஐடிஏஐ தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நிர்வாச்சன் சதனில் நடந்தது.

இந்திய அரசியலமைப்பின் 326வது பிரிவின்படி, வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்திய தேர்தல் ஆணைய தொழில்நுட்ப நிபுணர்கள் – யுஐடிஏஐ (ஆதார்) நிபுணர்கள் விரைவில் ஒன்றுகூடி, ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பு குறித்த தொழில்நுட்ப ஆலோசனையைத் தொடங்குவார்கள். இதற்குப் பிறகு இணைப்பு செயல்முறையைத் தொடங்கப்படும். இந்திய அரசியலமைப்பின் 326வது பிரிவின்படி, இந்திய குடிமகனுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை வழங்க முடியும்; ஆனால் ஆதார் அடையாள அட்டையை பொருத்தமட்டில் ஒரு நபரின் அடையாளத்தை மட்டுமே கண்டிறிய முடியும்.

எனவே, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது என்பது அரசியலமைப்பின் பிரிவு 326, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவுகள் 23(4), 23(5) மற்றும் 23(6) மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு (2023) ஆகியவற்றின்படி மட்டுமே செயல்படுத்த முடியும். இதற்கான அதிகாரபூர்வ முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலை ஆதார் தரவுத்தளத்துடன் தானாக முன்வந்து இணைக்கும் வகையில், ஏற்கனவே உள்ள சட்டங்கள் அனுமதிப்பதால் அதற்கான பணிகள் தொடங்கப்படும்’ என்றன. இதற்கிடையே வாக்காளர் பட்டியலில் சந்தேகத்திற்கிடமான பெயர்கள் இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல்களுக்கான முழு வாக்காளர் பட்டியலையும் பார்த்தால் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது. எனவே வாக்காளர் அடையாள அட்டைகளை ஆதாருடன் இணைக்கும் செயல்முறை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆகியன தற்போதைய சட்டம் மற்றும் வழிகாட்டுதல்களின்படி செய்யப்படும். இதன்மூலம் போலி வாக்குப்பதிவு மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளைத் தடுக்க முடியும் என்று தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

The post போலி வாக்குப்பதிவுகளை தடுக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க முடிவு: தலைமை தேர்தல் ஆணையர் நடத்திய கூட்டத்தில் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: