திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல: அமைச்சர் சேகர் பாபு!

சென்னை: திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; திருச்செந்தூர். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நேற்று முன்தினம் (16.03.2025) சுவாமி தரிசனம் செய்ய வருகைதந்த காரைக்குடியை சேர்ந்த திரு.ஓம்குமார். அவரது குடும்பத்தினர் முன்னரே தரிசனம் செய்ய வரிசையில் சென்ற நிலையில் தனியாக சென்ற போது அவருக்கு ஏற்கனவே உள்ள மூச்சுத்திணறல் நோயினால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.

அதேபோன்று இராமேசுவரம். அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு இன்று (18.03.2025) விடியற்காலை ஸ்படிகலிங்க தரிசனத்திற்கு வருகை தந்த பக்தர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மயங்கிய நிலையில் காணப்பட்டதால் அவரை திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் முதலுதவி மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட இரண்டு திருக்கோயில்களிலும் உயிரிழந்த பக்தர்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர்.

கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழக்கவில்லை. பக்தர்களின் அவசர சிகிச்சை மற்றும் முதலுதவிக்காக இத்திருக்கோயில்கள் உள்ளிட்ட 17 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து திருக்கோயில்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி, முதியோர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தனி வரிசைமுறை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைத்தவர்களுக்கு மக்கள் கொடுத்த சம்மட்டி அடியால் திரு.அண்ணாமலை போன்றோர் இந்து சமய அறநிலையத்துறையின் மீது இதுபோன்ற களங்கம் கற்பிக்க முயல்வதில் வியப்பேதுமில்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

The post திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல: அமைச்சர் சேகர் பாபு! appeared first on Dinakaran.

Related Stories: