மத்வரின் நேரடி சீடர்


முதல் சீடர்

“மகத்துவம் மிக்க மத்வ மகான்கள்’’ என்னும் பகுதியில், “கிருஷ்ணரை கண்டெடுத்த மத்வர்’’ என்ற தலைப்பிட்டு, கடந்த இரு இதழில் ஸ்ரீ மத் மத்வாச்சாரியாரை பற்றி தெரிந்துக் கொண்டோம். இனி, ஸ்ரீ மத் மத்வாச்சாரியாரின் வழிவந்த சீடர்களை ஒவ்வொருவராக காணவிருக்கிறோம். மத்வரில் இருந்து வழிவழியாக வந்த மகான்களின், பரம்பரையை பற்றிய விளக்கப்படம் (chart) கொடுக்கப்பட்டுள்ளது. அதன் வழிகாட்டுதலின் பெயரில் மகான்களை தரிசிப்போம். ஸ்ரீ பத்மநாப தீர்த்தர், ஸ்ரீ நரஹரி தீர்த்தர், ஸ்ரீ மாதவ தீர்த்தர், ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர் ஆகியோர் ஸ்ரீ மத் மத்வாச்சாரியாருக்கு நேரடி சீடர்கள். அதாவது, மத்வர் இடத்துல் 37 கிரந்தங்களையும், 4 வேதங்களையும், புராண – சாஸ்திரங்களையும் நேரடியாக பயின்றவர்கள்.

ஹாஹா… என்ன ஒரு பாக்கியம் இந்த நான்கு சீடர்களுக்கும்! நினைத்து பாருங்கள். மத்வர்தான்… அனுமனாகவும், பீமனாகவும் அவதரித்தவர். ஆக, அனுமன் இடத்திலேயே இந்த நான்கு மகான்களும் துவைத பாடங்களை பயின்றார்கள் என்று சொன்னால், மகாபாக்கியம் அல்லவா! இப்போது இருக்கின்ற டெக்னாலஜி அந்த காலத்தில் கிடையாது. கால்நடையாக, வீடுவீடாக, நாடுநாடாக தேச சஞ்சாரத்தை மேற்கொண்டு, துவைத தத்துவங்களை பரப்ப வேண்டும். அப்படி மத்வர், தேச சஞ்சாரத்தை மேற்கொண்டு, உபன்யாசத்தை நிகழ்த்தும் போது, அதனால் ஈர்க்கப்பட்டு அவரிடத்தில் சீடராக இணைகிறார், ஸ்ரீ பத்மநாப தீர்த்தர்.

ஸ்ரீ மத் மத்வாச்சாரியாரிடத்தில், சீடராக ஸ்ரீ பத்மநாப தீர்த்தர் சேர்ந்தது எப்படி என்பதன் சுவாரஸ்ய கதை ஒன்றும் சொல்லப்படுகிறது. ஸ்ரீ பத்மநாபதீர்த்தரின் இயற்பெயர் சோபனபட்டா. அப்போது அவர் பின்பற்றிய தத்துவம், அத்வைதம். அதில், மிக பெரிய புகழ்பெற்ற தத்துவராக விளங்கியவர். திறமையான தர்க்கவாதி. அதுமட்டுமா… வேதம், மகாபாரதம் மற்றும் புராணங்களில் மிகுந்த அறிவுக் கொண்டவர். பல விவாதங்களில் பங்கேற்று வெற்றிவாகையும் சூடியவர். இப்படியாக, காலத்தை கடத்தியவருக்கு பின் நாட்களில் தாமே மத்வருக்கு சீடராகவும், மத்வ மக்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்க போகிறோம் என்று, நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். சோபன பட்டாவின் உபன்யாச
நிகழ்வில், மத்வர் பங்கேற்கிறார்.

துவைதத்தை கற்கும் சோபன பட்டா

அங்கே, தம் நான்கு பிரதான சீடர்களில் முதன்மை சீடரை கண்டெடுக்கிறார். மேலும், இந்த சோபனபட்டாதான் முப்பிறவியில் விஷ்ணுவிற்கு சேஷனாக (பாம்பு) இருந்து அவருக்கு சேவை செய்தவர், என்பதனையும் மத்வர் அறிகிறார். ஆகையால் மத்வர், சோபன பட்டாவை தன்னிடத்தில் பாடங்களை கற்க அழைப்பு விடுக்கிறார். சோபன பட்டாவும், மத்வரிடத்தில் பாடங்களை கற்க ஆவலாக இருந்தார். இதில் இருவருக்குள்ளும் பரஸ்பரம் ஏற்பட்டு, மத்வரிடத்தில் முதல் சீடராக சோபனபட்டா இணைகிறார்.

“பரமாத்மா வேறு, ஜீவாத்மா வேறு’’ இரண்டும் ஒருக்காலும் இணைய முடியாது, “ஸ்வதந்திரா, அஸ்வதந்திரா’’ என்னும் தனது பிரதான அறிவுரைகளை அதாவது பரமாத்மா என்பவன் சுதந்திரமானவன், ஜீவாத்மா என்பவன் சுதந்திரமற்றவன். ஒரு ஜீவாத்மா, தான் நினைப்பதை எல்லாம் ஒரு போதும் செய்ய முடியாது என்னும் தத்துவத்தை சோபன பட்டாவிற்கு போதிக்கிறார். (இந்த “ஸ்வதந்திரா, அஸ்வதந்திரா’’ என்னும் தன் பிரதான கோட்பாட்டினை மக்களிடத்தில் எப்போதும் நினைவூட்டவே, மத்வர் தனது கையில் இருக்கும் விரல்களில், இரண்டை மட்டும் காட்டுகிறார்)மிக குறுகிய காலத்திலேயே மத்வரிடத்தில், துவைத சித்தாந்தத்தை கற்றுத்தேர்க்கிறார்.

இதனால் தனது புதிய தத்துவத்தை (துவைதம்) பரப்புவதற்காக, சோபன பட்டாவை சந்நியாசத்தை (துறவியாக) ஏற்றுக் கொள்ள கட்டளை யிடுகிறார். மத்வர் கட்டளையிட்ட மறுநொடி, சோபன பட்டாவிற்கு, தான் யார், தனது முந்தைய பிறவி என்ன, பகவான் விஷ்ணுவிற்கு சேஷனாக இருந்தது ஆகியவை நினைவிற்கு வருகிறது. ஆதலால், மத்வரிட்ட ஆணையை தட்டாமல் சந்நியாசம் ஏற்கிறார், சோபனபட்டா. மத்வர், சோபனபட்டாவிற்கு “ஸ்ரீ பத்மநாப தீர்த்தர்’’ என்னும் பெயரிட்டு சந்நியாசம் கொடுக்கிறார். அதன் பின், துவைத சித்தாந்தத்தை இந்தியா முழுவதும் பரப்பிய பெரும் பங்கு ஸ்ரீ பத்மநாப தீர்த்தரையே சாரும். மத்வாச்சாரியார் எழுதிய 37 கிரந்தங்களுக்கும், வியாக்கியானம் செய்தார். (வியாக்கியானம் என்பது விளக்கவுரை)

டீக்காச்சாரியார்

இந்த வியாக்கியானத்தை செய்தவர்களை “டீக்காச்சாரியார்’’ என்றும் அழைப்பதுண்டு. அப்படி, ஸ்ரீ ஜெயதீர்த்தரை மட்டும் அழைக்கிறார்கள், மத்வ பெரியோர்கள். ஸ்ரீ பத்மநாப தீர்த்தர், ஸ்ரீ நரஹரி தீர்த்தர் உட்பட மத்வரின் சீடர்கள் நால்வரும் மத்வரின் கிரந்தங்களை வியாக்கியானம் செய்தவர்கள்தான். ஆனால், இவர்களை “டீக்காச்சாரியார்’’ என்று அழைப்பதில்லை. மாறாக, இந்த நான்கு சீடர்களையும் “பிராச்சீன டீக்காச்சாரியார்கள்’’ என்று அழைக்கிறார்கள். பிராச்சீன என்பதன் பொருள், முந்தைய என்பதாகும்.

வியாக்கியானத்திற்கு “டீக்கை’’ என்றும் மறுபெயர் உண்டு. ஆகையால், மத்வரின் கிரந்தங்களை வியாக்கியானம் செய்வதால் அவர்களை டீக்காச்சாரியார் என்று அழைக்கிறார்கள்.
ஆக, ஸ்ரீ ஜெயதீர்த்தருக்கு முன்பே மத்வரின் நேரடி சீடர்கள் வியாக்கியானம் செய்திருக்கிறார்கள், அவர்களை பிராச்சீன டீக்காச்சாரியார்கள் என்று அழைக்கிறார்கள். மத்வருக்கு பின், ஸ்ரீ பத்மநாப தீர்த்தர், 1317-ஆம் ஆண்டு முதல் 1324-ஆம் ஆண்டு அதாவது ஏழு ஆண்டுக்காலம், பீடாதிபதியாக இருந்திருக்கிறார்.

(சந்நியாசியாக இருப்பது என்பது வேறு, பீடாதிபதியாக இருப்பது என்பது வேறு) அந்த சமயங்களில், பல ஆண்டுக் காலம் உடுப்பி கிருஷ்ணரை பூஜை செய்திருக்கிறார். மத்வாச்சாரியாருக்கு, நரஹரி தீர்த்தர் மூலமாக மூல ராம சீதா விக்ரகம் கிடைக்கிறது. அவருக்கு எப்படி மூலராமர் கிடைத்தார் என்பதனை பற்றி, நரஹரி தீர்த்தரின் தொகுப்பில் காணலாம். அந்த மூல ராமரை மத்வரிடத்தில் கொடுக்கிறார். மத்வர், மீண்டும் நரஹரி தீர்த்தரிடத்துலே கொடுத்து பூஜை செய்ய ஆணையிடுகிறார். ஸ்ரீ பத்மநாப தீர்த்தருக்கு, மூல கோபிநாத விக்ரகத்தை மத்வர் கொடுத்து பூஜை செய்ய உத்தரவிடுகிறார்.
வியாசராஜருக்காக மீண்டும் அவதரித்த பத்மநாபதீர்த்தர்

பத்மநாப தீர்த்தருக்கு பிறகு, லஷ்மீதர தீர்த்தர், சங்கர்ஷண தீர்த்தர்,………………(chartடை பார்க்கவும்) இப்படியாக, மகான்கள் ஒருவர்பின் ஒருவராக பூஜித்து, மத்வ மகான்களில் முக்கிய மகானான ஸ்ரீபாதராஜர் பூஜை செய்து, அவருக்கு பின் “முழுபாகல் மடம் அல்லது ஸ்ரீ பாதராஜ மடம்’’ என்னும் மடம் உருவாகி, இன்று வரையிலும், தற்போதும் உள்ள முழுபாகல் மடம் பீடாதிபதிவரை மூல கோபிநாத விக்ரகத்தை பூஜித்து வருகின்றார்கள்.

இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ பத்மநாப தீர்த்தர் வழிவந்த ஸ்ரீ ஸ்ரீபாதராஜரும், மத்வரின் நான்காவது சீடரான ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தருக்கு அடுத்தடுத்து வந்த ஸ்ரீ ஜெயதீர்த்தர், ஸ்ரீ வித்யாதிராஜர், ஸ்ரீ ராஜேந்திரர் தீர்த்தர், இப்படியாக பரம்பரையாக வந்த ஸ்ரீ வியாசராஜரும் சமகாலத்தவர்கள். ஒரு முறை, ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் தவத்தில் ஆழ்ந்துயிருக்கும் போது, பெரிய நாகம் ஒன்று இவரின் உடலை சுழன்றுக் கொண்டு, நாவினால் வரடிக்கொடுத்தது. அங்கு கூடியிருந்த அனைவரும், அச்சத்தில் இருந்தார்கள். ஸ்ரீ ஸ்ரீபாதராஜரும் உடன் இருந்தார். வியாசராஜருக்கும், ஸ்ரீ பாதராஜரும் நன்கு தெரியும், பாம்பாக வந்தது பத்மநாப தீர்த்தர்தான் என்று.

அவர் ஏன் சர்ப்ப ரூபத்தில் வந்து, வியாசராஜரை சுழற்றிக் கொண்டார்? என்ற சிறிய அனுசந்தானத்தை பார்ப்போம். நாம் முன்பே சொன்னதை போல், பத்மநாப தீர்த்தரின் முப்பிறவி ஆதிசேஷன் அல்லவா! அதே போல், கிருஷ்ணதேவராயரை சர்ப்ப தோஷத்தில் இருந்து காப்பாற்றியவர், வியாசராஜர். ஆகையால், தனது வழியில் வந்த சீடன், இத்தகைய தவவலிமையால் ராஜாவை காத்தும், மத்வ மக்களுக்கு வழிகாட்டுதலுமாக இருக்கும் வியாசராஜரை, மீண்டும் சர்ப்ப ரூபம் எடுத்து, பத்மநாப தீர்த்தரே ஆசீர்வதித்தார் என்கிறது புராணங்கள், இதற்கு சாக்ஷி வியாசராஜரின் சமகாலத்தில் வாழ்ந்த ஸ்ரீ பாதராஜர்.

ஸ்ரீ பத்மநாப தீர்த்தர், ஏறக்குறைய 15 படைப்புக்களை இயற்றி இருக்கிறார். ஆனால், அவற்றில் பெரும்பாலானவை ஸ்ரீ மத்வரின் படைப்புக்களின் டிப்பனிகளாகும் (கிரந்தத்தின் விளக்கவுரை). இருந்தாலும்கூட “நயரத்னாவளி”, மத்வரின் “விஷ்ணு தத்வ விநிர்னயம்”, “சத்திரகதிபாவளி’’ (பிரம்ம சூத்திர பாஷ்யத்தைப் பற்றிய ஒரு விவரிப்பு) மற்றும் “சன்னாயரத்னாவளி’’ (அனு வியாக்யானம் பற்றியது) ஆகியவை மிகவும் பிரபலமான படைப்புகள்.

நவ பிருந்தாவனம்

சுமார் 1324-ல் ஸ்ரீ பத்மநாப தீர்த்தர் பிருந்தாவனம் ஆனார். கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம், ஹம்பியில் உள்ள ஆனேகுந்தி என்னும் இடத்தில் மஹான் “ஸ்ரீ பத்மநாப தீர்த்தரின்” மூல பிருந்தாவனம் அமைந்திருக்கின்றது. அமைதியான இடம். சில்லென்று காற்று. மனம் சஞ்சலம் இல்லாமல் அமைதியாகிறது. ஸ்ரீ பத்மநாப தீர்த்தர் மூல பிருந்தாவனம் அமைந்திருக்கின்ற இடத்தை “நவ பிருந்தாவனம்’’ என்று அழைக்கின்றார்கள். காரணம், பத்மநாபதீர்த்தர் மூல பிருந்தாவனத்தையும் சேர்த்து, ஒன்பது மூல பிருந்தாவனங்கள் இந்த இடத்தில் இருக்கின்றன.

அவை: ஸ்ரீ பத்மநாப தீர்த்தர், ஸ்ரீ கவீந்திர தீர்த்தர், ஸ்ரீ வாகீச தீர்த்தர், ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், ஸ்ரீ ஸ்ரீநிவாஸ தீர்த்தர், ஸ்ரீ ராம தீர்த்தர், ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தர், ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர், ஸ்ரீ கோவிந்த ஓடயர்.இதில், இந்த தொகுப்பில் பார்த்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ பத்மநாப தீர்த்தர், ஜகத் குரு ஸ்ரீ மத்வாச்சாரியாரின் நேரடி சீடராவார். அதே போல், ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தர், திருக்கோவிலூரில் கம்பீரதோற்றத்துடன், மூலபிருந்தாவனமாக வீற்றிருக்கும் ஸ்ரீ ரகூத்தம தீர்த்தரின் குரு ஆவார். அதே போல், ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர், பக்தர்களுக்கு கல்பவிருட்சமாய் அருளும் மந்திராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமியின் குரு ஆவார்.

அட.. அட.. இத்தனை பெருமையா.. இந்த நவ பிருந்தாவனத்திற்கு! ஒரு நாள்கூட விடாது நித்யப்படி பூஜைகள், ஆராதனைகள், அர்ச்சனைகள் என செய்கிறார்கள், ஆக பிருந்தாவனத்திற்கு எத்தகைய சாந்நித்தியம் (Power) இருக்கும். அதனால்தான் என்னவோ.. நவபிருந்தாவனத்திற்கு சென்றால் ஓர் விதமான மனதிற்கு அமைதி கிடைக்கின்றது. மத்வசித்தாந்தத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மகான்களுக்கு, பல இடங்களிலும் பிருந்தாவனங்கள் இருக்கின்றன. அதன் தொடக்கமாக முதலாவதாக இருப்பது, பத்மநாப தீர்த்தர் பிருந்தாவனம்தான்.

இவர் பிருந்தாவனம் ஆன பிறகு, இவரது சீடர் ஸ்ரீ நரஹரி தீர்த்தர் பொறுப்புகளை கவனிக்கத் தொடங்கினார்.

எப்படி செல்வது: கர்நாடக மாநிலம் ஹம்பியில் இருந்து சுமார் 19 கி.மீ. பயணித்தால் நவபிருந்தாவனத்தை எளிதில் அடைந்துவிடலாம். தொடர்புக்கு: ஆனந்தாச்சார்யா ஜோஷி – 08533-267562 / 9449253155.

ரா.ரெங்கராஜன்

The post மத்வரின் நேரடி சீடர் appeared first on Dinakaran.

Related Stories: