ஸ்ரீ சக்ர நாயகியே எழுந்தருள்க!

சென்ற இதழின் தொடர்ச்சி….

எப்படி இருக்கிறாள் எனில், சக்ரராஜ ரதாரூட ஸர்வாயுத பரிஷ்க்ருதா… சக்ர ரூபமாக இருக்கக்கூடிய ரதத்தில் ஏறி சர்வாயுதங்களையும் கொண்டு, பண்டாசுர யுத்தத்திற்கு அம்பாள் எழுந்தருள்கிறாள். இது இந்த நாமத்தினுடைய வெளிப் படையான அர்த்தம். வாருங்கள். இந்த நாமா உள்முகமாக நமக்கு என்ன உணர்த்துகிறது என்று பார்ப்போம்.இந்த சக்ர ராஜம் எப்படி இருக்கிறது எனில், நமக்கு ஏற்கனவே தெரியும் சக்ரத்திற்கு ஒன்பது ஆவரணங்கள் இருக்கிறது. இப்போது இந்த சக்ர ராஜ ரதத்தில் ஒவ்வொரு ஆவரணமும் ஒவ்வொரு தட்டாக இருக்கிறது. நாம் ரதத்தில் பார்த்தோமெனில் ரதத்திற்குள் தட்டுகள் இருக்கும். அதற்கு மேல் சுவாமி இருப்பார். அதற்கும் மேல் த்வஜம் என்கிற கொடி இருக்கும். ஒரு தேருக்குள் சென்றுபார்த்தால் கீழிருந்து மேல் வரை தட்டுக்களை காணலாம். இங்கு ஒன்பது ஆவரணங்களே ஒன்பது தட்டுக்களாக இருக்கிறது. பூ புரம் என்று சொல்லக்கூடிய முதல் ஆவரணத்தில் ஆரம்பித்து சர்வானந்த மய சக்ரம் என்று சொல்லக் கூடிய ஒன்பதாவது ஆவரணம் வரைக்கும் ஒவ்வொரு தட்டு தட்டாக இருக்கிறது. இதில் பூ புரம் என்று சொல்லக் கூடிய முதல் ஆவரணம் முதல் தட்டாக இருக்கிறது. சர்வானந்த மய சக்ரம் என்பது ஒன்பதாவது தட்டாக மேலேயிருக்கிற தட்டாக இருக்கிறது. அந்த மேலேயிருக்கிற தட்டில்தான் கொடி அசைகிறது. அந்த சர்வானந்த மய சக்ரத்தில் கொடி அசைவதால் அந்தக் கொடிக்கு ஆனந்த த்வஜம் என்று பெயர். அந்த ஆனந்த த்வஜம் என்பது அம்பாளினுடைய சக்ரத்தில் மேலே அசைகிறது. இதுதான் அம்பிகையினுடைய ஸ்ரீ சக்ர ராஜ சக்ரத்தினுடைய வர்ணனை. இப்போது இந்த ரதம் நமக்கு எதைக் குறிப்பிடுகிறது.

இந்த ரதம் நமக்கு என்ன காண்பித்துக் கொடுக்கிறது என்றால், இந்த ஜீவாத்மா இருக்கிறதல்லவா… இந்த ஜீவாத்மா அடைய வேண்டியது எதுவென்றால் தன் சொரூபமேயாகும். (ஸ்வ சொரூபம்). தன்னுடைய உண்மை நிலையை அடைய வேண்டும். தன்னுடைய உண்மை நிலை என்பது பரமாத்ம நிலையே ஆகும். ஞான நிலைதான் தன்னுடைய உண்மை நிலை. ஆனந்தம்தான் தன்னுடைய உண்மை நிலை. ஆனால், ஞானமாக ஆனந்தமாக இருக்கக்கூடிய பரமாத்ம நிலையை மறந்து, கர்ம வாசனையினால் இந்த ஜீவாத்மா தன்னை தனிப்பட்ட ஒரு வியக்தியாக, தனிப்பட்ட ஒரு பொருளாக நினைத்துக் கொண்டிருக்கிறது. இந்த தனிப்பட்ட பொருளாக நினைக்கக் கூடிய ஜீவாத்மாவானது உண்மை நிலையை அடைய அத்யாத்மமான சாதனை செய்ய வேண்டும். அப்படி சாதனை செய்ய வேண்டுமென்று நினைத்தால் அது போதாது. தானாக செய்யக் கூடிய சக்தியானது எந்தவித சாதனையும் இந்த ஜீவாத்மாவிற்குக் கிடையாது. பரமாத்மா கருணை புரிந்து, இந்த ஜீவாத்மாவிற்கு சில விஷயங்களை கொடுத்தால்தான் ஜீவாத்மா அத்யாத்ம சாதனையை செய்ய முடியும். அப்படி இந்த ஜீவாத்மாவிற்கு பகவான் என்னென்ன கொடுக்கிறார் என்றால், இந்த ஜீவாத்மாவிற்கு சரீரத்தை கொடுக்கிறார். அந்த சரீரத்திற்குள் இருக்கக்கூடிய மனம் முதலான அந்தக்கரணங்களை கொடுக்கிறது. இந்திரியங்களை கொடுக்கிறது. இந்த எல்லாவற்றையும் இந்த ஜீவாத்மாவிற்கு கொடுக்கிறது. இவை எல்லாவற்றையும் கொடுத்து சாதனை செய்வதற்கான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறது.

பரமாத்மா இதையெல்லாம் கொடுக்கவில்லையெனில், இந்த ஜீவாத்மாவினால் அத்யாத்ம சாதனை எதையும் செய்ய முடியாது. நாமே கொஞ்சம் யோசித்துப் பார்ப்போமே… நமக்கு சரீரமே இல்லையெனில் நாம் எப்படி தவம் செய்ய முடியும். மனமே இல்லையெனில் பகவானை எப்படி ஸ்மரணை பண்ண முடியும். நாக்கே இல்லையெனில் பகவானின் நாமத்தை எப்படிச் சொல்ல முடியும். புத்தியே இல்லையெனில் இந்த ஞானத்தை நம்மால் எப்படி கிரகிக்க முடியும். இப்படி அந்தக்கரணங்கள் முதல் புத்தி, மனம், சரீரம் வரையிலான விஷயங்கள் இருப்பதால்தான் நாம் இந்த சாதனைகளையே செய்கிறோம். நாம் என்ன நினைத்துக்கொள்கிறோமெனில், இந்த சரீரம் முதல் அந்தக்கரணம் வரை எல்லாமே அத்யாத்ம வாழ்க்கைக்கு எதிரானது என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால், உண்மை அப்படியல்ல. அத்யாத்ம சாதனைக்காக பகவான் கொடுத்திருக்கக்கூடிய பரிசுதான் இவை எல்லாமுமே. இப்படி பகவானால் கொடுக்கப்பட்ட பரிசுத் தொகுப்பு இருக்கிறதல்லவா… இந்த சரீரம்தான் ஸ்ரீ சக்ர ராஜ ரதம். இங்கு சரீரம் என்று சொன்னால் இந்த உடல் மட்டும்தான் என்று நினைக்கக் கூடாது. நமக்கு ஐந்துவிதமான சரீரம் கொடுத்திருக்கிறார். ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம், அதி சூட்சும சரீரம், காரண சரீரம், மகா காரண சரீரம் என்று ஐந்து சரீரம் இருக்கிறது. இந்த ஐந்து சரீரங்களையும் மொத்தமாகச் சேர்த்துதான் தேகம் என்று சொல்கிறோம். இதை அப்படியே கோசங்கள் என்று சொன்னால், அன்னமய கோசம் – ஸ்தூல சரீரம், பிராண மய கோசம் என்பது சூட்சும சரீரம், மனோ மய கோசம் என்பது அதி சூட்சும சரீரம், விஞ்ஞான மய கோசம் – காரண சரீரம். ஆனந்த மய கோசம் – மகா காரண சரீரம் என்று ஐந்து விதமாகச் சொல்கிறோம்.

இந்த ஐந்து விதமான சரீரங்களே சக்ர ராஜ ரதம். இந்த சரீரத்திற்கு ஆதாரமாக இருக்கக்கூடியது என்னவெனில், இந்த சரீரத்திற்குல் இருக்கக் கூடிய சக்கரங்களே ஆகும். என்னென்ன சக்கரங்கள். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா, சகஸ்ராரம் என்று சொல்லக் கூடிய ஏழு சக்கரங்கள். இந்த ஏழு சக்கரங்களோடு சேர்த்து சூட்சுமமாக இரண்டு சக்கரங்கள் உள்ளன. விசுக்தி சக்கரத்திற்கும் ஆக்ஞா சக்கரத்திற்கும் நடுவே இருக்கக்கூடிய நாம் சொல்லக்கூடிய உள்நாக்குப்பகுதி இருக்கிறதே அதற்கு இந்திர யோனி என்று பெயர். அதுவொரு சக்கரம். அதற்கடுத்து ஆக்ஞா சக்கரத்திற்கும் சகஸ்ராரத்திற்கும் நடுவே இருக்கக்கூடிய பிரம்ம ரந்திரம் என்கிற சக்கரம். இந்த இரண்டையும் சேர்த்தால் ஒன்பது வரும். இந்த ஒன்பது சக்கரங்கள்தான் சக்ர ராஜ ரதத்தில் இருக்கக்கூடிய ஸ்ரீ சக்ரத்தில் ஒன்பது ஆவரணங்கள். நம்முடைய சரீரத்தில் அது ஒன்பது சக்கரங்களாக இருக்கிறது. இப்போது எப்படி சக்ர ராஜ ரதம் என்கிற ஒன்பது விதமான தட்டுக்கள் இருக்கிறதோ, அதுபோல இந்த சரீரமாகிய சக்ர ராஜ ரதத்தில் ஒன்பது சக்கரங்கள் என்று சொல்லக்கூடிய இந்த தட்டுக்கள் இருக்கிறது. பஞ்ச கோசங்களாகிய சரீரங்களையும், ஒன்பது சக்கரங்களையும் சேர்த்தால் அதுவே அத்யாத்ம சாதனை செய்யும் ஒரு சாதகனின் சக்ரராஜ ரதமாக இருக்கிறது. இவையெல்லாமும் சேர்ந்த அனைத்துமே சக்ரராஜ ரதம். ஒரு சாதகன் அத்யாத்ம சாதனை செய்யும்போது தனக்கு கொடுக்கப்பட்ட சரீரம் என்பது கர்ம சரீரம் அல்ல. இது சாட்சாத் ஸ்ரீ சக்ர ரூபமான சரீரம் என்று வேதத்தில் இருக்கக் கூடிய பாவனோ உபநிஷத் நமக்கு காண்பித்துக் கொடுக்கிறது. இந்த தேகம் ஸ்ரீ சக்ரம் என்று யார் சொல்கிறதெனில் வேதம் சொல்கிறது. பாவனோ உபநிஷத் சொல்கிறது. வேதத்தை மீறி நமக்கு ஒரு பிரமாணம் தேவையில்லை. இந்த சரீரமாகிய ஸ்ரீ சக்ர ராஜ ரதத்தை கொடுத்துவிட்டு, பரமாத்மா என்ன செய்கிறதெனில், நமக்குத் தேவையான எல்லா கருவி கரணங்களையெல்லாம் கொடுக்கிறது. கருவி கரணங்களான இந்திரியங்கள் முதல் அந்தக்கரணங்கள் வரை அளித்திருக்கிறது. (சுழலும்)

ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா

The post ஸ்ரீ சக்ர நாயகியே எழுந்தருள்க! appeared first on Dinakaran.

Related Stories: