திருமணத்திற்கு நகை வாங்கவேண்டுமென்று கூறி தனியார் ஊழியரிடம் ரூ.1 கோடி மோசடி: கணவன்-மனைவி கைது

ஆவடி:ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் மாதாவரம் பால்பண்ணை காலனி பகுதியைச் சேர்ந்த தனசேகர் (37) என்பவர் 22.01.2025 அன்று கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: நான் சென்னை காரப்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் டீம் லீடராக பணிபுரிந்து வருகிறேன். அதே நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த மோகனபெருமாள் (42) மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி (37) ஆகியோர் எனக்கு பழக்கமாகினர்.

இவர்களது உறவுப் பெண்ணின் திருமணத்திற்காக 115 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் தங்க நகைகள் கொடுக்க வேண்டும் என என்னிடம் உதவி கேட்டனர். இதில் என்னுடைய 10 கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.1.07 கோடி வரை தங்க காயின்கள் வாங்கியுள்ளனர். இதனையடுத்து வங்கிக் கணக்கு மூலம் மூலம் ரூ.43,89,972 பணத்தை கொடுத்த தம்பதி, மீதி பணம் ரூ.63,74,080ஐ கேட்ட போது தர முடியாது என்று கூறி ஏமாற்றிவிட்டனர். எனவே என்னிடம் பண மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இதனையடுத்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் பெருமாள் தலைமையிலான ஆவண மோசடி தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் மோகனபெருமாள் (42) மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி (37) ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post திருமணத்திற்கு நகை வாங்கவேண்டுமென்று கூறி தனியார் ஊழியரிடம் ரூ.1 கோடி மோசடி: கணவன்-மனைவி கைது appeared first on Dinakaran.

Related Stories: