படப்பை சார் பதிவாளர் அலுவலகம் அருகே கார் கண்ணாடி உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

ஸ்ரீபெரும்புதூர்: படப்பை சார் பதிவாளர் அலுவலகம் அருகே கார் கண்ணாடி உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் முசாமில் அகமது(39). சிந்தாதிரிப்பேட்டையில் மளிகை கடை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு, சொந்தமான நிலம் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த சொரப்பனஞ்சேரி பகுதியில் உள்ளது. அந்த, இடத்தை பவர் எழுதி கொடுப்பதற்காக தன்னுடைய தந்தையுடன் காரில் நேற்று படப்பை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கு, தன்னுடைய நிலத்தை ஜெகத்குமார் என்பவருக்கு பவர் எழுதி கொடுத்துவிட்டு, அவரிடமிருந்து ரூ.6 லட்சத்தை வாங்கி தன்னுடைய காரில் வைத்துள்ளார். பின்னர், சார் பதிவாளர் அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்புவதற்காக காரின் அருகே வந்துள்ளார். அப்போது, கார் கண்ணாடி உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கார் கதவை திறந்து பார்த்தபோது, உள்ளே இருந்த ரூ.6 லட்சம் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு முசாமில் அகமது புகார் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அதிக மக்கள் நடமாட்டம் உள்ள படப்பை சார் பதிவாளர் அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து பட்டப்பகலில் ரூ.6 லட்சம் கொள்ளைபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post படப்பை சார் பதிவாளர் அலுவலகம் அருகே கார் கண்ணாடி உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Related Stories: