வேலூர் மாவட்டத்தில் வரும் 22ம் தேதி வரை நடைபெறும் 5 வயதுக்குட்பட்ட 98,229 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

வேலூர், மார்ச் 18: வேலூர் மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட 98,229 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவத்தினை கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று தொடங்கி வைத்தார். இந்த பணி வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முதல் வரும் 22ம் தேதி வரை 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை வைட்டமின் ஏ உயிர்சத்து திரவம் அளிக்கப்படுகிறது. பொதுவாக வைட்டமின் ஏ திரவமானது 6 மாதத்திலிருந்து 5 வயது வரை மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்பட வேண்டும். மேற்படி முகாமானது துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலமாகவும் அட்டவணைப்படி அனைத்து பகுதிகளிலும் புதன் மற்றும் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் நடைபெறும். இம்முகாம்களில் வைட்டமின் ஏ திரவம் இலவசமாக வழங்கப்படுகிறது.

அதன்படி, வைட்டமின் ஏ திரவம் வழங்கும் பணியை சத்துவாச்சாரி வஉசி நகர் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று காலை தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட சுகாதார அலுவலர் பரணிதரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணி திட்ட அலுவலர் சாந்தி பிரியதர்ஷினி, மாநகர நல அலுவலர் பிரதாப் உட்பட பலர் உடனிருந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் இம்முகாமின் மூலமாக 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 98,229 குழந்தைகள் பயன்பெறுவர். இந்த பணியில் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் உள்பட 1,244 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே, பெற்றோர்கள் தங்கள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த முகாம் மூலமாக வைட்டமின் ஏ உயிர்சத்து திரவம் பெற்று வைட்டமின் ஏ குறைபாடி நோய்களான மாலைக்கண் நோய், பார்வை இழப்பு மற்றும் வயிற்றுபோக்கு, நிமோனியா, தீவிர ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பாதிப்புகளில் இருந்து தங்கள் குழந்தைகளை காத்துக் கொள்ளலாம்.

The post வேலூர் மாவட்டத்தில் வரும் 22ம் தேதி வரை நடைபெறும் 5 வயதுக்குட்பட்ட 98,229 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: