257 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து கலெக்டர் தகவல் வேலூர் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறிய

வேலூர், மார்ச் 19: வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 257 பேரின் ஒட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிக்னலை மீறுவது, அதிக பாரம் ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவது போன்ற சாலை விதிமீறல்களில் ஈடுபடுவோரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வருகிறது. செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயலில் ஈடுபடுவதற்கும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை 3 மாதங்களாக சாலை விதிகளை மீறியதாக பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி உயிரிழப்புகள் ஏற்படுத்திய 15 பேரும், அதிவேகமாக வாகனத்தை இயக்கிய 69 ஓட்டுநர்கள், குடிபோதையில் வாகனத்தை இயக்கிய 35 ஓட்டுநர்கள், செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கிய 56 ஓட்டுநர்கள், அதிக பாரம் ஏற்றிய வாகனங்களை இயக்கிய 4 ஓட்டுநர்கள், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற 48 ஓட்டுநர்கள், போக்குவரத்து சிக்னலை மதிக்காதவர்கள் 30 பேர் என மொத்தம் 257 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post 257 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து கலெக்டர் தகவல் வேலூர் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறிய appeared first on Dinakaran.

Related Stories: