குடியாத்தம் மார்ச் 19 : குடியாத்தம் அருகே பட்டா மாறுதல் செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (40), கருணை அடிப்படையில் தமிழக அரசால் வேலைக்கு சேர்ந்தார். தற்போது இவர் குடியாத்தம் அடுத்த வேப்பூர் விஏஓ வாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த நிஜாமுதீன்(40) என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய விஏஓ கோபிநாத்தை அணுகியுள்ளார். அப்போது பட்டா மாறுதலுக்காக லஞ்சமாக, தனக்கு ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என விஏஓ கோபிநாத், நிஜாமுதீனிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் லஞ்சம் தர விருப்பமில்லாததால் இதுகுறித்து நிஜாமுதீன் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வேப்பூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் கோபிநாதிடம் பணம் கொடுக்க நிதாமுதீனிடம் 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து அனுப்பினர். தொடர்ந்து, நிஜாமுதீன் பணம் கொடுக்கும் போது, அங்கு மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கோபிநாத்தை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்து லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்ற விஏஓ கைது செய்யப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி குடியாத்தம் அருகே பட்டா மாறுதல் செய்ய appeared first on Dinakaran.