வீட்டைவிட்டு மாயமான அக்கா, தங்கை மீட்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வக்கீல், வாலிபர் கைது: இன்ஸ்டாகிராமால் ஏற்பட்ட விபரீதம்; திடுக்கிடும் தகவல்கள்

நாகர்கோவில்: இன்ஸ்டாகிராமில் பழகியவர்களை தேடி வீட்டை விட்டு ஓடிய அக்கா, தங்கை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வக்கீல் மற்றும் வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த பெண், கணவரை பிரிந்து நாகர்கோவில் பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரது முதல் மகள் 8ம் வகுப்பும், 2வது மகள் 6ம் வகுப்பும் படிக்கின்றனர். செல்போனில் அதிக நேரம் செலவு செய்வதை அவர்களின் தாய் கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி இரவு மாணவிகள் இருவரும் மாயமாகினர்.

இதுகுறித்து போலீசில் தாய் புகார் செய்தார். மேலும், சமூக வலைத்தளங்களிலும் மாணவிகள் படத்துடன் மீட்க உதவி கோரி தகவல் பரவியது. இந்நிலையில் சுங்கான்கடை பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மாணவிகள் இருவரும், வாலிபர் ஒருவருடன் பைக்கில் ஏறிச் செல்லும் காட்சி வெளியானது. இதனையடுத்து அந்த வாலிபர் யார் என போலீசார் விசாரணை நடத்தினர். தனிப்படை போலீசார் மாணவிகளின் செல்போன் சிக்னல் மூலமும் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆய்வு செய்தனர். இதில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஏராளமான ஆண் நண்பர்கள் இருப்பது தெரிய வந்தது.

இதில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரை மாணவிகள் நெல்லை புது பஸ் நிலையத்தில் சந்தித்து பேசியுள்ளனர். பின்னர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வாலிபரை சந்திக்க மேல் மருவத்தூருக்கு மாணவிகள் சென்றுள்ளனர். ஆனால், அவர் பயந்து போய் வரவில்லை. இதனால் மாணவிகள் மீண்டும் நெல்லை வந்து அம்பையை சேர்ந்த மோகனை தொடர்பு கொண்டு, அவரது உதவியுடன் சிவந்திபுரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.

இதனை கண்டறிந்த தனிப்படையினர், நேற்று சிவந்திபுரம் சென்று மாணவிகளை மீட்டு தக்கலை அழைத்து வந்தனர். மோகனையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. மாணவிகள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி அதிகாலை 2 மணிக்கு தனியாக செல்வதை பார்த்து தக்கலையை சேர்ந்த வக்கீல் அஜித்குமார் விசாரித்துள்ளார். அப்போது மாணவிகள், வெளியூர் செல்ல உள்ளதாகவும் தங்களை வடசேரி பஸ் நிலையத்தில் இறக்கி விடும்படியும் கூறியுள்ளனர்.

அவர் மாணவிகளை தனது அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 6வது வகுப்பு மாணவியை வெளியே இருக்கும்படி கூறிவிட்டு, 8ம் வகுப்பு மாணவியை தனது அறைக்குள் அழைத்து சென்று பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் தங்கையிடமும் தவறாக நடக்க முயன்றுள்ளதாக தெரிகிறது. சிறுமி கதறி அழவே பயந்து போன அஜித்குமார் மாணவிகள் இருவரையும் வடசேரி பஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விட்டுள்ளார். வழியில் உள்ள டீக் கடையில் அவர்களுக்கு டீ வாங்கி தந்த காட்சி தான் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் அஜித்குமாரை பிடித்தனர். இது தொடர்பாக போக்சோ வழக்கு பதிந்து வழக்கறிஞர் அஜித்குமார் மற்றும் மோகனை தனிப்படை ேபாலீசார் கைது செய்தனர். போலீசார் வக்கீல் அஜித்குமாரிடம் விசாரணை நடத்திய போது தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது தடுக்கி விழுந்ததில் அவரின் கையில் முறிவு ஏற்பட்டது. இதனால் அவரை ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று மதியம் சேர்த்தனர்.

* வக்கீல் திருமணம் நிறுத்தம்
வக்கீல் அஜித்குமார் ஒரு பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையே அஜித்குமாருக்கு ஏற்கனவே பழக்கமான பெண் அவருக்கு திருமணம் நிச்சயம் ஆனது தெரிந்து தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அஜித்குமார் பணம் தர மறுத்துள்ளார். இதனால் அஜித்குமார் திருமணம் செய்ய இருந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று விசயத்தை கூறி உள்ளார். இதனால் கடந்த வாரமே பெண் வீட்டினர் திருமணத்தை நிறுத்தி விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

* மேலும் பலருக்கு தொடர்பு
தக்கலையில் மீட்கப்பட்ட மாணவிகளின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் மூத்த மாணவிக்கு ஏராளமான ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்துள்ளதால், அவர்களும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டார்களா? என விசாரித்து வருகின்றனர். இதில் சம்மந்தப்பட்ட அனைவரையும் போக்சோ வழக்கில் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.

The post வீட்டைவிட்டு மாயமான அக்கா, தங்கை மீட்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வக்கீல், வாலிபர் கைது: இன்ஸ்டாகிராமால் ஏற்பட்ட விபரீதம்; திடுக்கிடும் தகவல்கள் appeared first on Dinakaran.

Related Stories: