மாஸ்டர்ஸ் லீக் டி.20 தொடரில் இந்தியா சாம்பியன்; சிறந்த வீரர்களுடன் மீண்டும் ஆடியதை கடந்த காலம் போல் உணர்ந்தேன்: சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி

ராய்ப்பூர்: ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்ற சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி.20 தொடர் இந்தியாவில் நடந்து வந்தது. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, தென்ஆப்ரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவையும், வெஸ்ட்இண்டீஸ் இலங்கையையும் வீழ்த்தியது. ராய்ப்பூரில் நேற்று நடந்த பைனலில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் மோதின.

முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 148 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சிம்மன்ஸ் 57, ஸ்மித் 45 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில், அம்பதி ராயுடு 50 பந்தில் 74, கேப்டன் டெண்டுல்கர் 25, ஸ்டுவர்ட் பின்னி நாட் அவுட்டாக 16, யுவராஜ் சிங் 13 ரன் எடுத்தனர். 17.1ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் எடுத்து இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது. அம்பதி ராயுடு ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் தள பதிவில், பயிற்சி அமர்வுகள் முதல் போட்டி நாட்கள் வரை ஒவ்வொரு தருணமும் காலத்திற்கு பின்னோக்கிச்செல்வது போல் தோன்றியது.
விளையாட்டின் சில சிறந்த வீரர்களுடன் மீண்டும் மைதானத்தில் இருந்ததை நம்ப முடியாததாக உணர்ந்தேன். ரசிகர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் இந்தியா மாஸ்டர்ஸ் அணியினர் உட்பட இந்த அனுபவத்தை மறக்கமுடியாததாக மாற்றிய அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன், என பதிவிட்டுள்ளார்.

The post மாஸ்டர்ஸ் லீக் டி.20 தொடரில் இந்தியா சாம்பியன்; சிறந்த வீரர்களுடன் மீண்டும் ஆடியதை கடந்த காலம் போல் உணர்ந்தேன்: சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: