உன்னதத்தைப் பெற்றுத் தரும்.
இதோ ஒரு நிகழ்வு
தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம்பேட்டை என்று ஒரு ஊர். அதற்கு ஒரு காலத்தில் ராமச்சந்திரபுரம் என்றுதான் பெயர். அங்கே ஓர் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் இவர். இளமையில் இருந்தே சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் அளவுகடந்த ஆர்வம். ஓரளவுக்கு தமது தந்தையிடமிருந்து கற்றுக் கொண்டாலும்கூட நிபுணராக விளங்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்த அவருக்கு சொல்லித் தருவதற்கு ஆளில்லை. அப்பொழுது திருவையாறு என்ற ஊரிலே, திருவாரூரில் அவதரித்த தியாகப் பிரம்மம் என்று புகழ்பெற்ற தியாகராஜ சுவாமிகள் தம்முடைய சீடர்களுக்குச் சங்கீதத்தைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதைக் கேள்விப்பட்ட இந்த அய்யம்பேட்டை வாலிபர், 10 மைல் தூரம் ஆற்றங்கரை ஓரமாகவே தினசரி நடந்து சென்று, தியாகராஜ சுவாமிகள் தங்கியிருந்த வீட்டின் வெளிப்புற திண்ணையில் ஒரு ஓரமாக நின்று அவர் சீடர்களிடம் சொல்லித் தரும் சங்கீத விஷயத்தைக் கிரகித்துக் கொண்டிருந்தார்.கோடைகாலம் துவங்கியது. வீட்டில் புழுக்கம் அதிகரித்தது. ஒரு கீற்றுக் கொட்டகையைப் போட்டால் சங்கீதம் சொல்லித் தருவதற்கு நன்றாக இருக்குமே என்று தன்னுடைய மனைவியிடம் தியாகராஜ சுவாமிகள் சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டிருந்த இந்த வாலிபர், அடுத்த நாளே நான்கைந்து பேருடன் கொட்டகை போடுவதற்கு தேவையான தென்னங்கீற்றுகளையும் கழிகளையும் சுமந்து கொண்டு மிக அற்புதமான ஒரு பந்தலைப் போட்டு முடித்தார். அப்போது தியாகராஜர் வீட்டில் இல்லை. அவருடைய மனைவி இந்த வேலைக்கு எவ்வளவு தர வேண்டும் என்று கேட்க,
“குருவுக்குச் செய்யும் சேவைக்கு நான் காசு வாங்கலாமா?’’ என்று இந்த வாலிபர் சொல்ல, நெகிழ்ந்து போன குரு, அடுத்த நாளே இவரை தன்னுடைய சீடர் குழுவில் ஒருவராக சேர்த்துக் கொண்டு சங்கீத பயிற்சியை ஆரம்பித்தார். தன்னுடைய சீடர் தன்னைப் போலவே சங்கீதத்தில் மிகப் பெரிய புகழை அடைய வேண்டும் என்று எண்ணினார் தியாகராஜ சுவாமிகள். அதற்காக ஒரு நாள், தான் வழிபடுகின்ற ராமரிடம் ஒரு கீர்த்தனையைப் பாடிப் பிரார்த்தித்தார் (ஞனமு சகராதா கருட கமன ராதா).
அந்தக் கீர்த்தனையின் பலனாக, வாலிபரின் சங்கீத ஞானம் சுடர் விட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்தது. குருவின் பிரதான சீடரானார். தன்னுடைய குரு பாடப்பாட அதையெல்லாம் ஏடுபடுத்தும் வேலையில் ஆர்வமோடு ஈடுபட்டார். குரு செல்லும் இடங்களில் எல்லாம் அவரும் சென்று பணிவிடை செய்தார்.
வடமொழி, தெலுங்கு, சௌராஷ்டிரம் என பன்மொழிகளில் மிக அற் புதமான கீர்த்தனைகளை பல்வேறு ராகங்களில் இயற்ற ஆரம்பித்தார். மிகச் சிறந்த குரு பக்தியும் தெய்வ பக்தியும் கொண்டவராக விளங்கினார். குருவின் பூரண கடாட்சத்திற்கு ஆளானார். ஒவ்வொரு நாளும் தியாகராஜ சுவாமிகள் வீட்டில் ஸ்ரீ ராம பஜனை நடக்கும். அதில் துவக்கத்திலும் முடிவாக மங்களம் பாடுவதிலும் தன்னுடைய சீடரான வாலிபரை நியமித்தார். அந்த வாலிபர்தான் பின் நாளில் தியாகராஜ சுவாமிகளின் பிரதான
சீடராக விளங்கி சங்கீதத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ வேங்கடரமண பாகவதர்.வேங்கடரமண பாகவதர் குருவுக் கென்றே பல கிருதிகள், இயற்றினார். தெலுங்கில் ஸ்ரீ குரு மங்களாஷ்டகம், ஸ்ரீ குரு அஷ்டகம் – சமஸ்கிருதத்தில் தியான ஸ்லோகங்கள், ஸ்ரீ ககர்லன்வய ரத்னாஷரா – சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் சௌராஷ்டிரம் மொழிகளில் மணிப்பிரவாளம், தெலுங்கில் ஆதி குரு அஷ்டோத்தர பஞ்சாங்கம்குருசரணம் பஜரே (சங்கராபரணம் ராகத்தில் இயற்றப்பட்டது) ஸ்ரீ ராமபிரம்மமு (பேகட ராகத்தில் இயற்றப்பட்டது) மற்றும் இன்னும் பல!பிப்ரவரி 18,1781 அன்று தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டையில் நன்னுசாமிக்கு மகனாகப் பிறந்த பாகவதர், டிசம்பர் 15,1874அன்று முக்தி அடைந்தார். அவரது சந்ததியினர் பாதுகாத்த தியாகராஜரின் கலைப் பொருட்களான பாதுகா, தம்புரா, கையெழுத்துப் பிரதிகள், அவரது பூஜை பாத்திரங்கள், அவர் வழிபட்ட ராமர் சிலை ஆகியவற்றை மதுரை சௌராஷ்டிர சபையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. துவக்கத்தில், அய்யம்பேட்டையில் வசித்த பாகவதர் பின் வாழ்வாதாரம் தேடி வாலாஜாபேட்டை சென்றார். வாலாஜாபேட்டையில் பாகவதர் குடியேறிய பிறகும், அவர் தியாகராஜரிடம் பக்தியுடன் இருந்தார். தியாகராஜர் வாலாஜாபேட்டைக்கு வருகை தந்தபோது, பாகவதர் தனது குருவை 12 நாட்கள் தன்னுடன் தங்கவைத்துப் பணிவிடை செய்து பார்த்துக் கொண்டார். இந்த நிகழ்வைப் பதிவு செய்வதற்காக தோடி ராகத்தில் தியாக ராஜஸ்வாமி “வேதாளினா’’ என்ற கிருதியை இயற்றினார்.
தியாகராஜ சுவாமிகள் தெலுங்கு மொழியில் இயற்றிய நௌகா சரிதம் எனும் நூலை, (கீர்த்தனை நாடகம்-ஓபரா) வேங்கடரமண பாகவதர் சமஸ்கிருத மொழியில் மொழி பெயர்த்துள்ளார். வேங்கடரமணரின் கர்நாடக பக்தி இசையைப் பாராட்டி, அவரின் உருவம் பதித்த அஞ்சல் வில்லையை இந்திய
அஞ்சல் துறை 2009-ஆம் ஆண்டில் வெளியிட்டது. குரு பக்தி ஒருவரை எந்த அளவிற்கு உயர்த்தும் என்பதுதான் வேங்கட ரமண பாகவதர் வாழ்க்கை தருகின்ற செய்தி.
தேஜஸ்வி
244-வது ஆண்டு ஜெயந்தி விழாவேங்கடரமண பாகவதர் பிறந்து இந்த ஆண்டோடு 244 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவருடைய 244-வது ஆண்டு ஜெயந்தி விழா மதுரை, அய்யம்பேட்டை, சேலம் முதலிய ஊர்களில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவருடைய ஒவ்வொரு ஜெயந்தி விழாவிலும் குருநாதர் தியாகராஜ சுவாமிகளின் பஞ்ச ரத்தின கீர்த்தனையோடு வேங்கடரமண பாகவதர் குருவுக்காக எழுதிய பாடல்களும் பாடப்பட்டுத்தான் நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. இந்த ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதர், 244 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா கீழ்புவனகிரி ஸ்ரீ நன்னய ராமானுஜ கூடத்தில் 23.2.2025 மாலை சிறப்பாக நடைபெற்றது.
The post குருவின் ஆசி இருந்தால் மட்டுமே உயர முடியும்! appeared first on Dinakaran.