11.கேதார்நாத் ஜோதிர்லிங்கம், உத்தரகாண்ட்

ஜோதிர்லிங்க தரிசனம்

கேதார்நாத் கோயில் சிவனின் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும். இக்கோயில் கர்வால் இமயமலைத் தொடரில், இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், மந்தாகினி ஆற்றின் அருகே அமைந்துள்ளது.

தீவிர வானிலை காரணமாக, ஏப்ரல் (அட்சய திரிதியை) மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் மட்டுமே கோயில் பொது மக்களுக்கு திறக்கப்படும். குளிர்காலத்தில், கோயிலின் விக்ரஹம் (தெய்வம்) அடுத்த ஆறு மாதங்களுக்கு வழிபடுவதற்காக உகிமத்திற்கு கொண்டு செல்லப்படும். கோயிலை நேரடியாக சாலை வழியாக அணுக முடியாது, மேலும், கௌரி குண்டில் இருந்து 17 கிலோ மீட்டர் (11 மைல்) மலையேற்றம் மூலம் அடைய வேண்டும்.

இந்தக் கோயில் ஆரம்பத்தில் பாண்டவர்களால் கட்டப்பட்டது. பாண்டவர்கள் கேதார்நாத்தில் தவம் செய்து சிவனை மகிழ்வித்ததாக புராணம் உள்ளது. இந்தியாவின் வடக்கு இமயமலையின் சோட்டா சார்தாம் யாத்திரையின் நான்கு முக்கிய தலங்களில் ஒன்றாகவும், பஞ்சகேதார் யாத்திரைத் தலங்களில் முதன்மையானதாகவும் உள்ளது. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மற்றும் சேக்கிழார் ஆகியோரால் பாடப்பட்ட தலம்.

வெள்ளத்திலும் பாதிப்படையாத கோயில்

வெள்ளம் நிலச்சரிவு ஆகிய இயற்கை சீற்றத்தால் அடிக்கடி பாதிப் படையும் ஊர் இது. 2013 ஆம் ஆண்டு வட இந்தியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் போது கேதார்நாத் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி கோயில் வளாகம், சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கேதார்நாத் நகரம் ஆகியவை பெரிய அளவில் சேதம் அடைந்தன. ஆயினும் கோயில் தப்பித்தது.நான்கு சுவர்களில் ஒரு பக்கத்தில் சில விரிசல்கள் ஏற்பட்டதைத் தவிர, உயர்ந்த மலைகளிலிருந்து பாயும் குப்பைகளால் ஏற்பட்ட சில விரிசல்களைத் தவிர, கோயில் கட்டமைப்பிற்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை.

என்ன கதை? யார் கட்டிய கோயில்?

கேதார்நாத் பற்றிய ஒரு நாட்டுப்புற புராணக்கதை உண்டு. குருக்ஷேத்திரப் போரின்போது பாண்டவர்கள் பலரை கொல்ல வேண்டி வந்தது.அந்தப் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய விரும்பினர். இதனால், அவர்கள் தங்கள் ராஜ்யத்தின் ஆட்சியை உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு, சிவனைத் தேடி, அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற புறப்பட்டனர். ஆனால், சிவன் அவர்களுக்கு நேரடியாக காட்சி தரவில்லை. காளையின் (நந்தி) வடிவத்தை எடுத்தார். பஞ்ச பாண்டவர்களில் பீமன், குப்தகாசி அருகே காளை மேய்வதைக் கண்டான். (குப்த காசி என்றால் ‘‘மறைக்கப்பட்ட காசி” – சிவன் மறைந்த செயலிலிருந்து பெறப்பட்ட பெயர்). பீமன் உடனே காளையை சிவன் என்று அடையாளம் கண்டுகொண்டான். பீமன் காளையை அதன் வால் மற்றும் பின்னங்கால்களால் பிடித்தான். ஆனால், காளை வடிவான சிவன், தனது மற்ற பகுதியைக் காட்டாமல் பூமியில் மறைந்தார், கேதார்நாத்தில் கொம்பு உயர்ந்தது, முன்னம் கால்கள் துங்கநாத்தில் தோன்றியது, முகம் ருத்ரநாத்தில் காட்டப்பட்டது, நாபி (தொப்புள்) மற்றும் வயிறு மத்தியமஹேஷ்வரில் வெளிப்பட்டது. கல்பேஷ்வரில் முடி தோன்றியது.பாண்டவர்கள் சிவன் ஐந்து வெவ்வேறு வடிவங்களில் மீண்டும் தோன்றியதில் மகிழ்ச்சியடைந்தனர், சிவனை வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் ஐந்து இடங்களில் கோயில்களைக் கட்டினார்கள். இந்த ஐந்து இடங்களும் பஞ்ச கேதார் என்று அழைக்கப்படுகிறது. பஞ்ச கேதார் கோயில்களில் சிவ தரிசன யாத்திரையை முடித்த பிறகு, பத்ரிநாத் கோயிலில் விஷ்ணுவை தரிசிப்பது எழுதப்படாத மதச் சடங்கு ஆகும். கேதார்நாத் தீர்த்த புரோகிதர்கள் இந்த பிராந்தியத்தின் பண்டைய பிராமணர்கள், அவர்களின் முன்னோர்கள் தட்சப்பிரஜாபதி காலத்திலிருந்தே லிங்கத்தை வணங்கி வருகின்றனர். பாண்டவர்களின் பேரனான மன்னன் ஜனமேஜயன், அவர்களுக்கு இந்தக் கோயிலை வழிபடும் உரிமையை அளித்து, கேதார் பகுதி முழுவதையும் தானமாகக் கொடுத்தார்.

கோயில் அமைப்பு

லிங்க வடிவில் உள்ள கேதார்நாத்தின் உருவம் முக்கோண வடிவில் 3.6 மீ (12 அடி) சுற்றளவு மற்றும் 3.6 மீ (12 அடி) உயரம் கொண்ட பீடத்துடன் உள்ளது. கோயிலின் முன் ஒரு சிறிய தூண் மண்டபம் உள்ளது, அதில் பார்வதி மற்றும் பஞ்ச பாண்டவர்களின் உருவங்கள் உள்ளன. கேதார் நாத்தை சுற்றி நான்கு கோயில்கள் உள்ளன, அதாவது துங்கநாத், ருத்ரநாத், மத்யமஹேஷ்வர் மற்றும் கல்பேஷ்வர் இவை பஞ்ச கேதார் யாத்திரை தலங்களாகும். கேதார்நாத் கோயிலின் உள்ளே உள்ள முதல் மண்டபத்தில் கிருஷ்ணன், நந்தி மற்றும் சிவனின் வீரபத்ரர் உருவங்கள் உள்ளன. திரௌபதி மற்றும் பிற தெய்வங்களின் சிலைகளும் பிரதான மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளன. கோயிலின் ஒரு அசாதாரண அம்சம் முக்கோண கல் லிங்கத்தில் செதுக்கப்பட்ட ஒரு மனிதனின் தலை. சிவன் மற்றும் பார்வதி திருமணம் நடந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள மற்றொரு கோயிலில் அத்தகைய தலை செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் பின்புறம் ஆதி சங்கரரின் மந்திர் உள்ளது.

பூஜைகள்

கேதார்நாத் கோயிலின் தலைமை பூசாரியை ராவல் என் கின்றனர். கர்நாடகாவைச் சேர்ந்த வீரசைவ சமூகத்தைச் சேர்ந்தவர். இருப்பினும், கேதார்நாத் கோயிலின் ராவல் பூஜைகளைச் செய்வதில்லை. அவரது அறிவுறுத்தலின் பேரில் ராவலின் உதவியாளர்களால் பூஜைகள் நடைபெறுகின்றன. கோயிலுக்கு ஐந்து பிரதான பூசாரிகள் உள்ளனர், அவர்கள் சுழற்சி முறையில் ஒரு வருடத்திற்கு தலைமை அர்ச்சகர்களாகிறார்கள். கேதார்நாத்தை சுற்றி பாண்டவர்களின் பல சின்னங்கள் உள்ளன. ராஜா பாண்டு பாண்டுகேஷ்வரில் இறந்தார். இங்குள்ள பழங்குடியினர் ‘‘பாண்டவ லீலா” என்ற நடனத்தை ஆடுகின்றனர். பாண்டவர்கள் சொர்க்கத்திற்குச் சென்ற மலை உச்சி ‘‘ஸ்வர்கரோஹினி” என்று அழைக்கப்படுகிறது, இது பத்ரிநாத்தில் அமைந்துள்ளது .

கோயில் திறக்கும் நேரம்

இந்த ஆலயம் எல்லா நாள்களிலும் தரிசிக்க இயலாது. மே – நவம்பர் மாதங்களில் தரிசனம் செய்யலாம். காலை 6:00 முதல் மாலை 3:00 மணி வரை, மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. காலை ஆரத்தி (மகா அபிஷேகம்): 4:00 AM, மாலை ஆரத்தி (சயன ஆரத்தி): 7:00 PM.

எப்படிச் செல்வது?

கேதார்நாத்திலிருந்து 210 கி.மீ. தொலைவில் உள்ள ரிஷிகேஷ் ரயில் நிலையம் மிக அருகில் உள்ளது. ரிஷிகேஷிலிருந்து கௌரிகுண்டிற்கு டாக்சிகள் மற்றும் பேருந்துகள் உள்ளன. கௌரிகுண்ட், கடைசி சாலைப் புள்ளி.இந்த ஊர் உத்தரகாண்ட் மாநிலத்தின் முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்
பட்டுள்ளது. டெஹ்ராடூன், ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வார் போன்ற நகரங்களில் இருந்து கௌரிகுண்டிற்கு பேருந்துகள் மற்றும் டாக்சிகள் அடிக்கடி இயக்கப்படுகின்றன. கௌரிகுண்டில் இருந்து கேதார் நாத் கோவிலை அடைய 16 கி.மீ. நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். மலையேற்றத்தைத் தவிர்க்க விரும்புபவர்களுக்கு ஹெலிகாப்டர் சேவைகளும் உள்ளன.

முனைவர் ஸ்ரீராம்

The post 11.கேதார்நாத் ஜோதிர்லிங்கம், உத்தரகாண்ட் appeared first on Dinakaran.

Related Stories: