மகனை கொன்று கல்லை கட்டி காவிரி ஆற்றில் வீசிய தாய்: வயிறு, நெஞ்சை கிழித்து கொடூரம்; தம்பி உட்பட 5 பேர் கைது

பவானி: ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சிக்கோட்டை, கதவணை நீர் நிலையம் அருகே ஜல்லிக்கல்மேடு பகுதியில் அழுகிய நிலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கடந்த 13ம் தேதி மீட்கப்பட்டது. பரிசோதனையில் உடலில் கற்கள் கட்டப்பட்டும், வயிறு மற்றும் மார்பை பிளந்து கற்கள் சொருகப்பட்டும் இருந்ததால், வேறு இடத்தில் கொலை செய்து, வாகனத்தில் கொண்டு வந்து காவிரி ஆற்றில் வீசி இருக்கலாம் என சந்தேகித்து பவானி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், இறந்து கிடந்தது பவானி தொட்டிபாளையத்தை சேர்ந்த ரவி மகன் மதியழகன் (30) என்பதும், டிரைவராக வேலை செய்து வந்த இவர், பவானி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கிருத்திகாவை (24) காதலித்து திருமணம் செய்து கொண்டதும், போதையில் கொடுமைப்படுத்தியதால், கிருத்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, மதியழகனின் தாய், கிருத்திகாவின் உறவினர்களிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர். இதில், மதியழகனை கொன்றது தாய் சுதா(54), தம்பி முருகானந்தம் (28), நண்பர் கௌரிசங்கர்(24), கிருத்திகாவின் அண்ணன் யோகேஷ் (26), இவரது அத்தை மகன் சக்திபாண்டி (32) என்பது தெரியவந்தது. குடிப்பழக்கத்தில் ரவுடித்தனம் செய்து வந்த மதியழகன், மனைவி கிருத்திகாவின் தற்கொலைக்கு பின் தாய் சுதா, தம்பி முருகானந்தத்தை அடித்தும் அரிவாளால் வெட்டியும், பணம் கேட்டும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 11ம் தேதி இரவு தொட்டிபாளையத்தில் உள்ள வீட்டில் போதையில் தகராறு செய்த மதியழகனை, தாய் சுதா, மகன் முருகானந்தம், நண்பர் கௌரி சங்கர் மற்றும் கிருத்திகாவின் அண்ணன் யோகேஷ், உறவினர் சக்தி பாண்டி ஆகியோர் கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். பின்னர், தண்ணீருக்கு மேல் சடலம் வராத வகையில் வயிற்றை கிழித்தும், மார்பை பிளந்தும் கற்களை வைத்து கட்டி, ஆம்னி காரில் எடுத்து சென்று காவிரி ஆற்றில் ஜல்லிக்கல்மேடு பகுதியில் வீசிவிட்டு அவரவர் வீட்டுக்கு சென்று விட்டனர். உடல் தண்ணீரில் அழுகி மேலே வந்ததால், இக்கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, 5 பேரையும் கைது செய்த போலீசார், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், ஆம்னி கார் மற்றும் ஒரு பைக்கையும் பறிமுதல் செய்தனர். பின்னர் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post மகனை கொன்று கல்லை கட்டி காவிரி ஆற்றில் வீசிய தாய்: வயிறு, நெஞ்சை கிழித்து கொடூரம்; தம்பி உட்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: