உங்கள பிடிச்சி இருக்கு… கல்யாணம் பண்ணிக்கிறேன்… மாப்பிள்ளை பார்ப்பது போல் வந்து தங்க நகைகள் அபேஸ்: கில்லாடி பெண்கள் 4 பேர் மீது வழக்கு

நாகர்கோவில்: ராஜாக்கமங்கலம் அருகே மாப்பிள்ளை பார்ப்பது போல் வந்து எல்.ஐ.சி. ஏஜென்ட் வீட்டில் தங்க நகைகளை அபேஸ் செய்ததாக 4 பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே காரவிளை பகுதியை சேர்ந்தவர் நற்சீசன் (55). எல்.ஐ.சி. ஏஜென்ட். இவர், தனது மனைவியை பிரிந்து தாயாருடன் வசித்து வருகிறார். தற்போது நாகர்கோவில் குடும்ப நல கோர்ட்டில் விவகாரத்து வழக்கு தாக்கல் செய்து நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது வயதான தாயாரை பார்த்துக் கொள்ள ஒருவர் தேவைப்படுவதால், 2வது திருமணத்துக்கு பெண் தேடி திருமண பதிவுக்கான இணைய தளம் ஒன்றில் தன்னை பற்றிய விபரங்களை பதிவிட்டு இருந்தார். அப்போது மதுரையில் இருந்து முருகேஸ்வரி என்பவர், நற்சீசனை போனில் தொடர்பு கொண்டார். உங்களை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்றும், விரைவில் உறவினர்களுடன் வீட்டுக்கு வந்து உங்களை சந்திப்பதாகவும் கூறினார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன், முருகேஸ்வரி மற்றும் அவருடன் மேலும் 3 பெண்கள், காரவிளையில் உள்ள நற்சீசன் வீட்டுக்கு வந்தனர்.

அவர்கள் நற்சீசனின் தாயார் மற்றும் குடும்பத்தினரிடம் சகஜமாக பேசினர். முருகேஸ்வரியை அனைவருக்கும் பிடித்திருந்ததால், திருமணம் செய்து கொள்ள சம்மதமும் தெரிவித்தனர். முருகேஸ்வரியுடன் வந்திருந்த பெண்கள் கார்த்தியாயினி, முத்துலெட்சுமி, போதும் பொண்ணு என்று தங்களது பெயர்களை கூறினர். அவர்களிடம் நற்சீசன் தனது வீட்டில் இருந்த தங்க நகைகளை எடுத்து காட்டினார். பின்னர் அந்த நகைகளை மேஜை டிராயரில் வைத்திருந்தார். மாப்பிள்ளை பார்க்க வந்த அனைவரும் சேர்ந்து ஒன்றாக சாப்பிட்டனர். அவர்கள் சென்ற சிறிது நேரம் கழித்து பார்த்த போது 64 கிராம் எடை கொண்ட 3 தங்க வளையல்கள், 2 கிராம் தங்க மோதிரம் ஆகியவற்றை காணவில்லை.

பெண் வீட்டாரிடம் கேட்டால் தவறாகி விடும் என இது குறித்து நற்சீசன் எதுவும் கேட்க வில்லை. சில நாட்கள் கழித்து முருகேஸ்வரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர் கொடுத்த முகவரி பற்றி விசாரித்த போது போலி முகவரி என்பதும் தெரிய வந்தது. அதன் பின்னரே மாப்பிள்ளை பார்ப்பது போல் வந்து தங்க நகைகளை முருகேஸ்வரி மற்றும் 3 பெண்கள் சேர்ந்து அபேஸ் செய்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து நற்சீசன், ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post உங்கள பிடிச்சி இருக்கு… கல்யாணம் பண்ணிக்கிறேன்… மாப்பிள்ளை பார்ப்பது போல் வந்து தங்க நகைகள் அபேஸ்: கில்லாடி பெண்கள் 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: