நெல்லை: தென்காசி ரயில் நிலையம் அருகே கல்வெட்டுடன் கூடிய சதிகல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மேலும் 11 கற்களை பல்கலைக்கழக தொல்லியல் மாணவிகள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவில் கணவர் இறந்தால், மனைவியும் சிதையில் விழுந்து உயிர் துறக்கும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது. உடன்கட்டை ஏறும் பெண்ணின் நினைவாக சதிகல்லும் நடப்பட்டன. தற்போது இவ்வழக்கம் நடைமுறையில் இருந்து ஒழிக்கப்பட்டு விட்டாலும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவ- மாணவிகள், சதிகற்களை கண்டுபிடித்து ஆவணப்படுத்தி வருகின்றனர். தற்போது பல்கலைக்கழக தொல்லியல் முதலாம் ஆண்டு மாணவிகள் சத்யாதேவி, வாஹினி ஆகியோர் 12 சதிகற்களை சமீபத்தில் கண்டறிந்து உள்ளனர்.
இந்த சதிகற்கள் பல நூறு ஆண்டுகள் கடந்தும் பெண்களுக்கு நிகழ்ந்த சோகத்தை சொல்லும் சின்னங்களாகவும், தியாகத்தையும் எடுத்துரைப்பதாக தொல்லியல் பேராசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பேராசிரியர்கள் முருகன், மதிவாணன் கூறுகையில், ‘எங்களது மாணவிகள் கண்டறிந்த சதிகற்கள் 200 முதல் 350 ஆண்டுகள் வரை பழமையானது. இதில் சிவகிரி, சிந்தாமணி பேரிப்புதூர் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அருகே கண்டுபிடித்த 2 சதிகற்கள், செங்கோட்டை, இலத்தூரில் மாந்தோப்பில் உள்ள சதிகல், கடையம், முதலியார்பட்டியில் இருந்து அம்பை செல்லும் சாலை அருகேயுள்ள சதிகல் என 4 சதிகற்கள் 250 ஆண்டுகள் பழமையானது. செங்கோட்டை அருகே சீவநல்லூரில் வயல்வெளி பகுதியில் கண்டறியப்பட்ட 2 சதிகற்கள், கணக்கப்பிள்ளை வலசை, பண்பொழி சாலை அருகே கிடைத்த சதிகல் என 3 சதிகற்கள் 200 ஆண்களுக்கு முந்தையது.
தென்காசி ரயில் நிலையம் அருகே சாலையின் இடதுபுறம் 3 வரியில் கல்வெட்டுடன் கூடிய 220 ஆண்டுகள் பழமையான சதிகல்லையும், தென்காசி மத்தளம்பாறையில் 300 ஆண்டுகள் பழமையான ஒரு சதிகல்லையும், தென்காசி- அம்பை செல்லும் வழியில் ஆழ்வார்குறிச்சி அருகே, அம்பை கவுதமபுரியில் குளம் அருகே, நெல்லை நந்தன்தட்டை பகுதி ஆகிய இடங்களில் 250 ஆண்டுகள் பழமையான 3 சதிகல் கிடைத்துள்ளன.’ என்றனர். பழமையான சதிகற்களை கண்டுபிடித்த தொல்லியல் மாணவிகளை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், துறை தலைவர் (பொ) சுதாகர் ஆகியோர் பாராட்டினர்.
கல்வெட்டுடன் கிடைப்பது அரிது
தென்காசி மத்தளம்பாறை பகுதியில் கிடைத்த சதிகல்லை, இப்பகுதி மக்கள் இன்றும் கன்னி மாரியம்மனாக வழிபட்டு வருகின்றனர். தென்காசி ரயில் நிலையம் அருகே கிடைத்த சதிகல்லில் 3 வரியில் கல்வெட்டு எழுத்துகள் உள்ளன. ‘துன்மதி வருஷம் ஆவணி மாதம் 42, ஆரியவன் தீக்கியார் கணவனை பிரியாதால்’ என கல்வெட்டில் உள்ளது. அதாவது, ஆரியவன் இறந்தவுடன் அவனுடைய மனைவி தீக்கியார் என்பவர் உடன்கட்டை ஏறினாள் என்பதை கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டுடன் சதிகற்கள் கிடைப்பது அரிது என்றும் தொல்லியல் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
The post தென்காசி ரயில் நிலையம் அருகே கல்வெட்டுடன் கூடிய சதிகல் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.